Tuesday, February 26, 2008

கோமண்டை என்கிற ஜலால் அவர்கள் வஃபாத்தானார்கள்

நமதூர் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பரிச்சயமான கோமண்டை என்கிற ஜலால் அவர்கள் இன்று காலமானார்கள். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்கள்.

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ப்படுகின்ற சுளுக்கு எடுப்பதில் பரிச்சயமும் அனுபவமும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் பிழைகளைப் பொறுத்து அல்லாஹ் சுவனத்தை வழங்குவானாக!. ஆமீன், அவர்களுடைய குடும்பத்தினர் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையைத் தருவானாக!.

Sunday, February 24, 2008

21 ஆம் வார்டு இடைத்தேர்தல் முடிவு சொல்லும் சேதி!

நடந்து முடிந்த 21 ஆம் வார்டுக்கான இடைத்தேர்தலில் சகோ. H.முஹம்மது இப்றாஹிம் வெற்றி பெற்றதற்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மர்ஹூம் மீயன்னா அவர்கள் விட்டுச்சென்ற பணிகளையும் இன்னும் புதிய சேவைகளையும் சகோதரர் முஹம்மது இப்றாஹிம் தொடர்ந்து செய்து அவர்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அதிரை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அல்லாஹ் துணை நிற்கட்டும். ஆமீன்!!

இன்னொரு பக்கம் சகோதரர் A.H. முஹம்மது தமீம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கணிசமான வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பது, அவரின் எதிர்கால அரசியல் முயற்சிகளுக்கு உந்துதலாக அமையும்.

நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்துக்களை நமதூர் சகோதரர்கள் அரட்டை அரங்கிலும், பின்னூட்டமாகவும் பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.அவற்றைப் பற்றி அலசுவோம்.

1) இப்றாஹிமின் பொறுமைக்கும், தமீமின் பெருமைக்கும் கிடைத்த முடிவு.

2) உன்னதமான அல் அமீன் பள்ளிவாசலுக்குச் செய்த சேவையை அரசியல் ஆக்கியதால் தமீமுக்குத் தோல்வி கிடைத்தது - என்ற இருகருத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன.

சகோதரர் முஹம்மது இப்றாஹீம் மற்றும் சகோதரர் முஹம்மது தமீம் இருவருமே பொதுச்சேவைகளில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை அவர்களைப் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். முஹம்மது இப்றாஹீம் வார்டு மெம்பராகப்பணியாற்றிய காலத்தில் வார்டுக்குச் செய்த சேவைகளோடு அதிரை பைத்துல்மாலிலும் முக்கியப் பங்காற்றிமிளிர்ந்தார்.

அதேசமயம், சகோதரர் முஹம்மது தமீம் ஆஸ்பத்திரித் தெரு ஹிமாயதுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு என்ற முஹல்லா உலமாக்களின் ஆலோசனையில் தொடங்கப் பெற்ற அமைப்பை, பெரும்பாலான அதன் நிர்வாகிகள் சொந்தவேலை காரணமாக ஒதுங்கி பின்னர், தொய்வின்றித் தொடர அவர் வயது இளைஞர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டார்.

அல் அமீன் பள்ளிவாசல் நிலம் வாங்கியது முதல் அதன் தொடக்ககால மற்றும் அனைத்துச் செயல்பாடுகளிலும் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துள்ளார். அல்ஹம்துலில்லாஹ்!

நாமறிந்த வகையில் சகோதரர் முஹம்மது தமீம் தற்பெருமையாகவோ அல்லது ஆணவமாகவோ செயல்பட்டதாக அறியமுடியவில்லை. வெற்றி பெற்றால் புகழ்வதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் முஃமீன்களின் பண்பல்ல என்பதை மேற்கூறிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியவர்கள் உணர்ந்து அவதூறுக்கு மன்னிப்புக் கேட்கக் கடமைபட்டுள்ளார்கள் என்பதை நினைவுறுத்துகிறோம்.

21 ஆம் வார்டு வாக்காளர்களைப் பொருத்தமட்டில் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சகோதரர் இப்றாஹிமுக்கு வாக்களித்தவர்கள் அல்-அமீன் பள்ளிக்கு எதிராக வாக்களித்தார்கள் என்றோ அல்லது முஹம்மது தமீமின் செயல்பாடுகளை அங்கீகரிகவில்லை என்றோ அர்த்தமல்ல. மாறாக, இப்றாஹிமுக்குக் கிடைத்த வாக்குகள்,அவரின் முந்தைய செயல்பாடுகளுக்குக் கிடைத்த மேலதிக அங்கீகாரம் என்றே கொள்ள வேண்டும்.

நடந்து முடிந்த அரசியல் பகடையாட்டத்தில் அல்-அமீன் பள்ளிவாசலுக்கு இடையூறு செய்தவர்களின் சூழ்ச்சியில் சகோதரர் முஹம்மது இப்றாஹிம் தெரிந்தோ தெரியாமலோ பங்கெடுத்துள்ளார். அவரை இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னிறுத்த முயன்றவர்களிடம் அல்-அமீன் பள்ளிவாசல் பிரச்சினையைத் தீர்க்க ஒத்துழைத்தால் வேட்பாளராகக் களமிறங்குவேன் என்று "செக்" வைத்திருக்கலாம். அவர்கள் ஒப்புக் கொண்டிருந்தாலும் மறுத்திருந்தாலும் இப்றாஹிம் தனித்தன்மையை நிலைநாட்டியிருக்கலாம். ஆனால், இந்த வாய்ப்பை இப்றாஹிம் நழுவ விட்டது நம் துரதிஷ்டம்.

தமீம் தரப்பிற்கு ஆதரவாகச் செயலபட்டார்கள் என்பதனால் பொய்வழக்குப் போடப்பட்டு தலைமறைவாகியுள்ள சகோதரர்கள் எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகி மேலும் துன்பப்படாமல், பொய்வழக்குகளை வாபஸ் பெறவைப்பதே சகோதரர் தொகுதிக்குச் செய்யும் முதல் சேவையாக இருக்க வேண்டும்.

நடந்து முடிந்தது 500-600 வாக்களர்களைக் கொண்ட ஒரு வார்டின் இடைத் தேர்தல்தான். வெற்றிபெற்றவர்கள் இதை மிகப்பெரும் சாதனையாகக் கொள்ளாமல் எதிர்தரப்பிற்குக் கிடைத்த வாக்குகளின் வித்தியாசத்தை மனதில் வைக்கவும். அதேபோல், வெற்றி வாய்ப்பை நழுவவிட்டத் தரப்பினர் எதிர்காலத்தில் மேலும் கவனமாகச் செயல்பட்டு எதிரிகளின் பொய்வழக்கு, அரசியல் அதிகாரத் துர்ப்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்ளவும் கற்றுக் கொண்டு கவனமாகச் செயல்பட்டால், வெற்றிச்சக்கரம் சுழலும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முப்பெரும் தமிழ் மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுக்கொண்டு பிரிந்திருந்தபோது சமாதானம் செய்த ஒவையார் "உங்களிருவரில் யார் தோற்றாலும் தோற்பது தமிழ்குடியே" என்று கவலைப்பட்டு ஒற்றுமைக்குப் பாடுபட்டதாக பண்டைய இலக்கியத்தில் காணலாம்.வெற்றி-தோல்வி அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருபவை என்பதை ஏற்றுக் கொண்டு பரஸ்பரம் வாழ்த்துக்களையும் ஆறுதலையும் பகிர்ந்து கொள்வதே இறை நம்பிக்கையாளர்களின் பண்பு.

-ஊர்சுத்தி உமர்-

Friday, February 22, 2008

தேர்தல் முடிவுகள்

21வது வார்டுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 'அதிரை பாசிச முண்ணனியின் சார்பில் போட்டியிட்ட ஜனாப் இப்ராஹிம் வெற்றி பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் 223, இவரை எதிர்த்து போட்டியிட்ட தமீம் 210 வாக்குகளும், பந்தா ரஹ்மத்துல்லா 9 வாக்குகளும் பெற்றனர். 710 வாக்காளர்களில் பதிவான வாக்குகள் 448

அல்லாஹ் தான் நாடியோர்க்கே பதவிகளை கொடுக்கிறான் - அல்குர்ஆன்

Thursday, February 21, 2008

அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்த குற்றச்சாட்டுக்களும் விளக்கமும் -2

1) கடவுச்சொல் திருடனின் தொடர் முயற்சிகள்

அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் போதிய விளக்கம் கொடுத்திருந்தோம். இருந்தும் திருவாளர் கடவுச்சொல் திருடர் மீண்டும் மீண்டும் திருட முனைகிறார். நிச்சயமாக அவர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட நபராகவே தெரிகிறார் என்பது அவரின் தொடர் முயற்சிகளில் இருந்து அறிகிறோம்.

பிறரின் உடமையை அனுமதியின்றி கையாள்வது மார்க்கம் மற்றும் சட்ட ரீதியில் தவறானது என்பதை அறிந்து இத்தகைய இழிசெயலில் அவர் தொடர்ந்து முயல வேண்டாம். இதனால் ஏற்கனவே சொன்னதுபோல் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.அப்படியே கடவுச் சொல்லை மீண்டும் திருடிவிட்டாலும் அதனைச் சாதனையாக வெளியில் சொல்லிக் கொள்ள முடியாது என்பதையும் அறியவும்.

அதிரை எக்ஸ்ப்ரஸ் கடவுச்சொல் திருடனுக்கு நல்ல புத்தியும் மனோ ரீதியிலான பாதிப்பிலிருந்து பூரண குணமும் பெறவும் இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

2) மன்னிக்க வேண்டுகிறோம்

கடவுச்சொல் திருடர்(களைப்) பற்றி எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் சில நுட்பயுக்திகளாலும் திருடியவர்கள் யாரென ஓரளவு அடையாளம் கண்டோம். அவர்களில் பழஞ்செட்டித் தெருவைச் சார்ந்த முஹம்மது அபூபக்கர் என்ற சகோதரரும் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்குக் கிடைத்தத் தகவல் தவறானது என அவரின் தனிமடல் மற்றும் சில வழிகளில் அறிய வந்ததால், சகோதரர் முஹம்மது அபூபக்கர் மீதான எங்களின் தவறான குற்றச்சாட்டுக்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறோம்.

அர்த்தமுள்ள அரட்டை அரங்கம்.

நமதூரைப் பொருத்தமட்டில் கல்வியாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பஞ்சமில்லை. தங்களுக்கு இருக்கும் திறமையை வெளிக்காட்டாமல் குடத்திலிட்ட விளக்காய் பிறரறியாமல் இருக்கும் பலர் நம்மிடையே உளர்.

அதிரை எக்ஸ்ப்ரஸின் அரட்டை அரங்கம் பகுதியில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அயல்நாட்டிலிருக்கும் நமதூர் சகோதரர்கள் தங்கள் அனுபவங்களையும் உள்ளூரிலிருப்பவர்கள் நடப்புகளையும் பகிர்ந்து கொள்வதன்மூலம் பரஸ்பரம் பலனடையலாம் என்ற நோக்கில் அரட்டை அரங்கம் பகுதியை அதிரை எக்ஸ்ப்ரஸில் இணைத்தோம்.

இலவசமாகக் கிடைக்கும் இச்சிறிய மென்பொருளில் அதிகபட்ச பயன்களை எதிர்பார்க்க முடியாது. சில குறைபாடுகள் உள. உதாரணமாக சாட்டிங்கில் பரிமாறப்பட்ட கடந்த இருநூறு செய்திகளை மட்டுமே காண முடியும். அதற்கு மேற்பட்டச் செய்திகள் பொதுவில் காணக்கிடைக்காது. இதனால் ஓரிருநாட்களில் பரிமாறப்படும் விசயங்கள் மட்டுமே முகப்பில் தெரியும்.

கல்வி, வேலை வாய்ப்புகள், தொழில்நுட்பம், சமயம்,பொது என பல்வேறு தலைப்புகளில் கலக்கி வரும் (அர்த்தமுள்ள) அரட்டையாளர்களின் அரட்டைகளை ஆவணப்படுத்தி வைப்பதன் மூலம் சம்பந்தப்பட்ட தேடல் உள்ளவர்கள் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகவே, முழுத்தகவல்களை சிறுகச் சிறுகச் சிறுக டைப் அடித்து அரட்டையடிப்பதை விட, குறிப்பிட்ட தலைப்பில் செய்தியாக/கட்டுரையாக பதிக்கலாம்.

நேரடியாக பதிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் எங்களுக்கு மின்மடல் மூலம் அனுப்பி அல்லது நேரடி மின்மடலுக்கே மடலிட்டாலோ பதிவாகக் காணக் கிடைக்கும். கருத்துச்சொல்பவர்கள் பின்னூட்டமாகச் சொல்வதால் இதுவும் ஒருவகையான அரட்டை அரங்க உணர்வைத் தருவதோடு,முன்சொன்னது போல் தேவைபடும்போது பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
நீங்கள் தெரிவிக்கும் கருத்தை எவ்வித மட்டுறுத்தலுமின்றி பாதுகாக்க, உங்கள் பெயரில் ஒரு ப்ளாக் அக்கவுண்ட் திறந்து, அதனை எங்களுடன் இணைத்தால் அதிரை எக்ஸ்பிரஸுடன் இணைந்து எழுதவும் முடியும். உங்கள் படைப்புகளுக்கு நீங்களே மட்டுறுத்துனராக இருந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கி பிரபலமடையலாம். இதே யுக்தியை நிபுனர்கள் குறிப்பாக வக்கீல்,மருத்துவர்,ஆசிரியர் ஆகியோர் செய்யலாம்.

விருப்பமுள்ள அரட்டையாளர்கள் adiraixpress@ஜிமெயில்.காம் அல்லது adiraimm@ஜிமெயில்.காம் என்ற முகவரிகளுக்கு மடலிட்டு இணைந்து கொள்ளலாம்.

Wednesday, February 20, 2008

விறு விறு இடைதேர்தல்...

காலியாக உள்ள 21வது வார்டி இடைத்தேர்தல் இன்றுகாலை முதலே விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக சுமார் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை அளிக்கின்றனர்.

இதில் அல்அமீன் பள்ளியின் நிர்வாகியான தமீம் அவர்களுக்கே பெருபான்மையான வாக்குகள் கிடைக்கும் என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, February 19, 2008

அதிரை பஞ்சாயத்து 21-ஆம் வார்டு இடைத்தேர்தல்

மர்ஹூம் மீயன்னா @ மீரான் அவர்களின் மறைவால் நமதூர் பஞ்சாயத்து வார்டு # 21க்கு நாளை (20-பிப்ரவரி-2008) அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. புதுமணைத்தெரு, CMP லேன் ஆகிய தெருக்களை உள்ளடக்கிய 21 ஆம் வார்டுக்கு ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் மற்றும் அல் அமீன் பள்ளிவாசல் கமிட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆஸ்பத்திரித் தெரு A.H.முஹம்மது தமீம் (த/பெ.மர்ஹும். அபுல் ஹசன் - கட்டப்பிள்ளை வீடு) நிறுத்தப்பட்டுள்ளார்.

நமதூருக்கும் அதிரை முஸ்லிம்களுக்கும் பயனில்லாத அதிரை பஞ்சாயத்து வார்டு மெம்பர்களில் அல் அமீன் பள்ளிவாசல் விசயத்தில் முழு மூச்சாகச் செயல்படும் முஹம்மது தமீம், 21 ஆம் வார்டு மெம்பராகத் தேர்ந்தெடுக்கப் படுவதன்மூலம் பஞ்சாயத்து போர்டில் நமதூரின் அல் அமீன் பள்ளிவாசல் சம்பந்தமான விசயங்களில் நமது தரப்பைச் சொல்ல நம்பகமானவர் கிடைப்பார்.

சகோதரர் முஹம்மது தமீம் தனது மாணவப்பருவம் முதலே பொதுச் சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக முஸ்லிம் மைய்யித்துகளை மனமுவந்து குளிப்பாட்டி, கபனிட்டு அடக்கம் செய்ய உதவும் பண்பாளர் என்பதை பலரும் அறிவோம்.

ஆகவே, 21 ஆம் வார்டு வாக்காளர்கள் சகோதரர் தமீம் அவர்களை வெற்றி பெறச்செய்து சமுதாய எதிர்ப்பாளர்களின் வலிமையை மங்கச் செய்வோம். இன்றைய நிலவரப்படி சகோதரர் தமீமுக்கு ஆதரவாகக் களப்பணியாற்றும் 21 ஆம் வார்டு சகோதரர்கள் இருவர் மீது ஆளும்கட்சியான காங்கிரஸ் மற்றும் திமுக விஷமிகள் பொய்வழக்குப் போட்டுள்ளார்கள். இதனால் அவர்கள் முஞாமின் கிடைக்கும்வரை தலைமறைவாக உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முஹம்மது தமீம் அவர்களை எதிர்த்து திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள சகோதரர் H.முஹம்மது இப்றாஹிம் அவர்களும் சமுதாயச் சிந்தனை உள்ளவராக இருந்தாலும் கட்சியின் கட்டளைப்படியே செயல்பட முடியும். ஆளும்கட்சியான திமுகவின் குணசேகரன் & கோவினர் இந்து முன்னணி சிந்தனையோடு ஒத்தக் கருத்துள்ளவர்கள் என்பதால் நகரத் தலைவராக இருக்கும் இவர்கள், நிச்சயம் அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையில் சகோதரர் முஹம்மது இப்றாஹிம் அவர்களை சுயமாகச் செயல்பட விடமாட்டார்கள்.

அல் அமீன் பள்ளிவாசல் மீதான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர சகோதரர் A.H.முஹம்மது தமீம் அவர்களை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வதன் மூலம் சமுதாயத் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். இதன்மூலம் பணபலத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற ஆணவக் காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முடியும்.ஆகவே, சகோதரர் தமீம் அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டிய கடமை சி.எம்.பி லேன், புதுமனைத் தெருவின் சில பகுதிகள், புதிய பழைய ஆலடித் தெரு, அம்பேத்கார் நகர் மற்றும் வாய்க்கால் தெரு (21 ஆம் வார்டு) வாக்காளர்களுக்கு உள்ளது.உள்ளூரில் இருக்கும் வாக்காளர்கள் மறவாமல் தங்கள் வாக்குகள் சகோதரர் முஹம்மது தமீம் அவர்களுக்குச் செலுத்தவும். மேலும் அயல் நாடுகளில் உள்ளவர்கள் சிரமம் பாராமல் தங்கள் குடும்பத்தினருக்கு இவ்விசயத்தைத் தெரியப்படுத்தவும்.

அதிரையில் பெருகிவரும் இளவயது விவாகரத்துக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

கல்லானாலும் கணவன்;புல்லானாலும் புருஷன் என்ற ஆணாதிக்கச் சிந்தனைக்கு சாவுமணியத்து, ஆண்-பெண் இருபாலரும் சமம், ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உரிமையுடையவர்கள் என்ற உன்னதக் கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய அழகிய மார்க்கம் இஸ்லாம்.

வேண்டாத துணையுடன் சாகும்வரை காலம் தள்ளி வாழ்க்கையையும் வாலிப வயதையும் சீரழிப்பதைவிட சாவதேமேல் அல்லது வேண்டாத கணவன்/மனைவியை அம்மிக்கல்லால் அடித்துக் கொல்வதே சிறந்தது என்ற மனநிலைக்கு ஆளாகாமலும்,மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என வாழ்நாள் முழுதும் வரதட்சினைக் கொடுமைக்கு ஆளாகித் துன்பப்படுதல் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கு மணவிலக்கு அல்லது விவாகரத்து என்ற வழியை சட்டம் வழங்கியுள்ளது. இதில் இஸ்லாம் ஒருபடிமேலே சென்று விவாகவிலக்கு உரிமையை எளிதாக்கியுள்ளது.

சமீப வருடங்களில் அதிராம்பட்டினத்தில் வாழ்க்கைத் துணையை இழந்து பிரிந்து வாழு(டு)ம் இளம்தம்பதிகள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்ற அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்தது. அதுவும் கணவனிடமிருந்து மண விலக்குக் கோரும் பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகியுள்ளது என்றதும் தூக்கி வாரிப்போட்டது.

வளைகுடா சம்பாத்யஸ்தர்கள் அதிரையில் அதிகரிக்கத் துவங்கிய கடந்த 20-30 வருடங்களில் ஆண்டுக்கு 2-5 என்ற அளவில் இருந்தன. பெரும்பாலும் கணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் தூண்டுதல் காரணமாகவும் ஓரிரு விவாகரத்துக்கள் நியாயமான காரணங்களாலும் இருந்தன.

கணவனிடமிருந்து விவாகவிலக்கு பெறும் இளம்பெண்களின் நிலைக்குயார் காரணம்? வாழ்நாளை வளைகுடாவில் அடகுவைத்து மனப்பெண்ணுக்கு வீடு என்ற ஊர்வழக்கத்திற்கேற்ப கொஞ்சமோ நஞ்சமோ சிறுகச் சிறுக சேமித்து ஒரு வீட்டைக் கட்டிவிடுகிறார்கள்.இவ்வாறு கஷ்டப்பட்டு கரை சேர்க்கப்பட்ட குமருகள் ஓரிரு விநாடிகளில் விதவையாகி நிற்கும் அவல நிலைக்கு யார் காரணம்?

ஐம்பது வருடப் பாரம்பர்யம் கொண்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு மட்டும் வருடத்திற்கு 10+ என்ற அளவில் மனவிலக்கு வேண்டி வழக்குகள் வருகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்டவை கணவனிடமிருந்து விவாக விலக்கு வேண்டி கொடுக்கப்பட்ட வழக்குகள். இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சங்க நிலவரம் அறிந்த நமது செய்தியாளர் சொல்கிறார்.

கணவனிடமிருந்து விவாகவிலக்கு (குலா) பெறுவதற்குக் கணவனின் துன்புறுத்தல் பிரதானக் காரணமாக இருக்கிறது. குடும்ப பாதுகாப்பிற்காக செய்யப்படும் குண்டாமாத்துத் திருமணங்களில் பெரும்பாலும் ஒன்றில் பிரச்சினை என்றால் இரண்டுமே பிரியும் நிலை ஏற்படுகிறது.

ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குலா பெற்ற வழக்கில் சொல்லப்பட்டக் காரணம் மனைவியுடன் என்னேரமும் கணவன் படுக்கையறையில் இருக்கச் சொல்வதால் வீட்டுவேலைகளைச் செய்ய முடியாமல் மற்றவர்களின் ஏலனத்திற்கு ஆளாக நேரிடுகிறதாம்!

விருப்பத்திற்கு இணங்க மறுத்த மனைவியிடம் கணவன், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது என்று அடிக்கடி குத்திக் காட்டுவதால்!!! எழுந்த வெறுப்பே குலாவுக்குக் காரணம்!

கொடுமை என்னவென்றால் சந்தோசமாகச் சென்று கொண்டிருந்த இன்னொரு தம்பதியும் இதனால் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டார்கள்! அதுவும் திருமணமாகி அரை வருடம்கூட பூர்த்தியாகவில்லை என்பதுதான் உச்சக்கட்டக் கொடுமை!

இன்னொரு விவாகரத்து வழக்கில் கணவனின் கொடுமைக்கு ஆளான சகோதரி குலாபெற்றதால் சுமூகமாகச்சென்று கொண்டிருந்த சகோதரனும் மனைவியைப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருகாலத்தில் பாதுகாப்பு என்று கருதப்பட்ட குண்டாமாத்துத் திருமணங்கள் தற்போது பாதுகாப்பு அற்றவைகளாக மாறி வருகின்றன.

விவாக விலக்கு பெறும் ஆண்களாவது ஓரிரு மாதங்களில் மறுமணம் செய்து மீண்டும் புதுமாப்பிள்ளைகளாக வெள்ளையும் சொல்லையுடன் நகரை வலம் வருகிறார்கள். இத்தகைய இரண்டாம்தார மணமகன்களை பேசிக் கொ(கெ)டுப்பதற்காககவே சில புரோக்கர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இளம்விதவைகளோ 40+ வயது கிழவனுக்கு பணிவிடைச் செய்யும் இளம் மனைவியாகவே இருக்க முடிகிறது.வசதியுள்ளவர்களால் மட்டுமே இளம் கணவனை மீண்டும் திருமணம் செய்து கொடுக்க முடிகிறது.

ஜப்பான்,அமெரிக்கா,லண்டன் எனப் பலநாடுகளுக்கும் சென்று பொருளாதார ரீதியில் ஓரளவு முன்னேறியுள்ளோம்.படித்தவர்களையும் ஆலிம்களையும் நிரம்பக் கொண்டிருக்கும் நமதூரில் இத்தகைய இளவயது விவாகரத்துக்கள் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்காது. கவுன்சலிங் (Council) எனப்படும் குடும்ப நல ஆலோசனை மையங்களாச் செயல்பட்டு அந்தந்த முஹல்லா ஜமாத்துக்கள் இத்தகைய வாழ்க்கை விரயங்களைக் கட்டுப்படுத்தி சந்தோசமான வாழ்க்கைக்கு உதவலாமே!

வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கை படிப்பிற்காகவும்,அடுத்த 5-10 ஆண்டுகள் பொருத்தமான வேலையைத் தேடுவதிலும் செலவளித்து எஞ்சிய 20-30 வருடங்கள் சந்தோசமாக வாழ்ந்து கழிக்க மணவாழ்க்கையில் தெளிவு அவசியம்.

அமைதியான இல்லற வாழ்க்கைக்கு பரஸ்பரம் புரிந்து கொள்ளலும் அன்புப் பரிமாற்றமுமே தவிர பணமோ பொருளோ அல்ல என்பதை வாழ்வின் ரகசியத்தையும் சுவையையும் அனுபவிகிக்க விரும்புபவர்கள் உணர வேண்டும்.

இப்பதிவை வாசிக்கும் அன்பர்கள், நமதூர் இளசுகளின் விவாகரத்துக்களைத் தவிர்க்க தகுந்த ஆலோசனைகளை மற்றும் அறிவுரைகளை அனுபவக் குறிப்புகளுடன் எழுதி அனுப்பினாலோ அல்லது பின்னூட்டமாகவோ இட்டு பகிர்ந்து கொள்ளலாமே!

-நடுத்தெருவான்-

Monday, February 18, 2008

விளையாட்டுத் திடல் பற்றி

கடந்த மூன்றாம் தியதி அன்று ஒரு தனியார் பள்ளியின் விளையாட்டுப் போட்டிகள் அந்தப் பள்ளியின் அருகில் வேறொரு தனியாருக்குச் சொந்தமான திடலில் (கிரௌன்டில்) நடைபெற்றது.


சிபா மருத்துவமனை எதிரில் சதாம் நகர் என்றழைக்கப்படும் இடத்திற்கு அருகில் இந்த திடல் உள்ளது. கடந்த 10-15 வருடங்களாக இங்கு இளைஞர்கள் காலை/மாலை நேரங்களில் மட்டைப்பந்து, கால்பந்து விளையாடி வருகின்றனர்.

தண்ணீர் வற்றிய காலங்களில் குளத்தில் கைப்பந்து போட்டிகள், சிறிய அளவிலான கால்பந்து போட்டிகள் விளையாடுவதும் நாம் அறிந்ததே.

சமீபகாலமாக தரை தெரியாத அளவிற்கு வீடு கட்டிவிடுவதால், எங்கும் இடமில்லா நிலைமையே. இது ஒருபுறமிருக்க, நமதூரில் இயங்கி வரும் அனைத்துப் பள்ளிகளிலிலும் விளையாட்டுத் திடல் இல்லாத பரிதாப நிலைமையே. இதனால் நமதூர் சிறுவர்கள், விளையாட்டுப் பயிற்சி இல்லாமல் வளரும் பரிதாப நிலைமை.

பள்ளிகளில் இருந்த சிறிய அளவிலான இடங்களும், பள்ளிகளின் வளர்ச்சியால அந்த திடல்களை இல்லாமல் போய்விடுகின்றன.

அதுபோல், நமதூர் கல்லூரியின் திடலில் விடுமுறை நாட்கள், மாலை நேரத்தில், கால்பந்து, மட்டைப்பந்து என்று சகல தெருக்காரர்களும் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக கல்லூரி நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்திருப்பதாக தெரிகிறது.

இப்படி இருக்க, மேற்கண்ட சிபா மருத்துவமனை அருகில் உள்ள திடலை, சில விளையாட்டு ஆர்வலர்கள், விலை கொடுத்து வாங்கி வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் அமைக்கவேண்டும் என்று ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிகிறது. விளையாட்டு ஆர்வலர்களின் இந்த நல்லெண்ணம் விரைவில் நிறைவேட்டும்... இன்சா அல்லாஹ்....

அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்த குற்றச்சாட்டுக்களும் விளக்கமும்

அதிரை எக்ஸ்ப்ரஸின் கடவுச் சொல்லை இருமுறை திருடிவிட்டுப் பின்னர் நேர்மையாக?! ஒப்படைத்த நபர்(கள்) அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்து கீழ்கண்ட குற்றச்சாட்டுக்களை மடலாக இட்டிருந்தார்(கள்).

1) உண்மைக்குப் புறம்பானச் செய்திகள்
2) தெருப்பாகுபாடு
3) தனிநபர் விமர்சனம்
4) சுயவிளம்பரம்

ஆகியவையே அதிரை எக்ஸ்ப்ரஸின் கடவுச் சொல்லைத் திருடும்படித் தூண்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.திருட்டு என்று சொல்ல வெட்கப்பட்டு கடத்தல் (Hacking) என்று கவுரமாக தனது செயலை நியாயப்படுத்தி இருந்தார். பிறரின் உடமையை, அதுவும் பொது உடமையை அனுமதியின்றி திருடிவிட்டு என்னதான் வியாக்கியானங்கள் கொடுத்தாலும் திருட்டு திருட்டுதான்.

தன்னைப் பற்றிய சுயவிபரங்களைச் சொல்லிவிட்டு இக்குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் கூறியிருந்தால் கடவுச்சொல் திருடரின் நேர்மையை கொஞ்சம் பாராட்டி இருக்கலாம். தான் யாரென்று வெளிக்காட்டிக் கொள்ள தைரியமில்லாமல் மேற்படி குற்றச்சாட்டுக்களைச் சுமத்தத் தனக்குத் தார்மீக உரிமையில்லை என்பதை திருவாளர் கடவுச்சொல் திருடர் உணர வேண்டும்

மேலும், அவரின் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கின்றதா என்றாலும் அதுவும் இல்லை.ஏனென்றால்,

1) உண்மைக்குப் புறம்பானச் செய்திகள்:அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியாகும் செய்திகள் உள்ளூரிலிருந்து நம்பகமானவர்களால் அனுப்பப்பட்டவையே. மேலும் தொடர்புடைய புகைப்படங்கள் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.

மேலும்,செய்திகளில் உண்மைக்குப் புறம்பானவை இடம் பெற்றிருந்தால் பதிவாகவோ அல்லது பின்னூட்டம் மூலமோ மறுக்கவும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துக்கள் எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் நேரடியாகப் பதிவிட மின்மடல் மூலம் வசதி செய்து கொடுக்கப் பட்டிருக்கும்போது மேற்படி குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதோடு அவதூறு வகையைச் சார்ந்தது.

2) தெருப்பாகுபாடு
அதிராம்பட்டினத்தில் பிறந்த அல்லது குடியேறிய அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவே அதிரை எக்ஸ்ப்ரஸ் இதுவரை செயல்பட்டு வருகிறது. அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்டத் தெருவைச் சார்ந்தவர்களாக இருப்பது துரதிஷ்டம்.

அதிரையின் தன்மானப்பிரச்சினையாகிவிட்ட அல்-அமீன் பள்ளிவாசலுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரூந்து நிலைய வழியைத் திறப்பதற்கு மேற்படி தெருவைச் சார்ந்த முக்கியஸ்தர் தடையாக இருந்தாலும், அல்அமீன் பள்ளிவாசல் இன்ஷா அல்லாஹ் எப்படியும் கட்டியெழுப்பவேண்டும் என்று விடாமுயற்சியாகப் பாடுபடுபவர்கள் குறிப்பிட்ட தெருவைச் சார்ந்தவர்களும் உள்ளார்கள்.

மேலத்தெருவைச் சார்ந்த சிறுவன் ஜியாவுதீனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு நிதிஉதவி கோரியதோடு, சம்பந்தப்பட்டவர்களை அணுகி நமதூர் சிறுவன் நலம் பெற்றுவிட வேண்டும் என்று மனதார விரும்பியவர்களில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களின் பங்களிப்பை நாங்கள் அறிவோம்.
மேலும், நமதூர் காதிர் முஹைதீன் பள்ளியின் நன்கொடை என்ற பெயரில் கட்டாய வசூல், லாட்டரிச்சீட்டு விற்பனை மற்றும் பல பிரச்சினைகளையும் தெருப்பாகுபாடின்றி அதிரை எக்ஸ்ப்ரஸில் வெளியிட்டதை கடவுச்சொல் திருடிய அன்பர் அறிய வேண்டும்.

3) தனிநபர் விமர்சனம்:
அதிரை எக்ஸ்ப்ரஸின் சுயக்ட்டுப்பாட்டு நன்னடத்தை விதிகளாக தனிப்பட்ட நபரின் மீதான துவேசத்தை வெளியிட அதிரை எக்ஸ்ப்ரஸில் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்.அதேசமயம் சமுதாயத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களை அடையாளம் காட்டவேண்டி சம்பத்தப்பட்டவர்களைப் பற்றிய விபரங்களைச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதிலும், உண்மைக்குப் புறம்பான அல்லது அவதூறான தகவல் இடம்பெற்றிருந்தால் அறிந்த எவரும் மறுக்கவும் முடியும்.

மதிப்பிற்குறிய ஹாஜி.ஜனாப் M.M.S. அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் அவர்களின் அரசியல் ஆளுமை மற்றும் பணிகளை நாங்கள் நன்கறிவோம். அன்னாரின் அரசியல் பணி நமதூருக்கு அவசியம் என்று கருதும் அதே சமயம், அன்னாரின் பாராமுகம் அல்லது அதிகார துர்ப்பிரயோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட அன்னாருக்கு வாக்களித்தவர்கள் என்ற முறையில் உரிமையுண்டு.

4) சுயவிளம்பரம்
அதிரை எக்ஸ்ப்ரஸில் எழுதுபவர்களில் எவரும் சுய விளம்பரம் செய்து கொண்டதாக அறியமுடியவில்லை. தளத்தில் நேரடியாக எழுதுவதர்கு அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர மின்னஞ்சல் மூலம் நேரடியாகப் பதியயவும் வாய்ப்பிருப்பதால் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு அதிரை எக்ஸ்ப்ரஸ் பொறுப்பல்ல என்பதையும் அறியவும்.

தொடரும்...

Sunday, February 17, 2008

dada..dada..இன்னும் பிற...

உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார். தலையில் ஜிகினா தொப்பி, அலுக்கான வெள்ளை ஜிப்பா, அலுக்கு படிந்த கைப்பை ஒன்று. ஏழ்மை நிலையில் இருப்பவர், வாசகம் பெற்று வாழ்ந்து வருபவர் என்று ஊறுகாய் தொடும்போது யூகித்தேன். அவருக்கு எதிர் சீட்டில் தெரிந்த ஊர்க்காரர். தொப்பி அணிந்து, வெள்ளைத்தாடி, வயது 65க்கும் மேல் இருக்கும்.

முதலாமவர் ஆரம்பிச்சார், உங்களைப்பார்த்தால் போரா மாதிரி இருக்கிறீங்க, அழகாக இருக்கிறீங்க, உங்களுக்கு எந்த ஊர், உங்க பெயர் என்ன போன்று சாப்பிட்டுக்கொண்டே பிட்ட போட்டார், நானும் சாப்பிட்டுகிட்டே கேட்டுக்கிட்டே இருந்தேன்... அஜ்மீர் போயி காஜா முகைதீன் சிஸ்தி தர்கா போயிட்டு வந்தேன், dada..dada.. உங்க ஊர்ல தப்லீக்ல முக்கிய நபர் ஒருத்தரகிட்ட தக்வாபள்ளியில் ஒருநா கடுமையான சண்டை போட்டேன். dada..dada.. இப்படியே பேசிக்கிட்டிருந்தவர், திடிரென உங்க ஊர்ல கால்பந்து போட்டிக நடக்குமே, இப்ப நடக்குதான்னு கேட்டார்...

நம்ம ஊர்க்காரர்: இல்லய அது நின்னு ரொம்ப வருசமாச்சே, அந்த நிலம் சம்பந்தமா கடந்த பத்துவருடமா நடந்துகிட்டிருந்த வழக்கு தீர்ப்பு இப்பதான் வந்திருக்காம், அது பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான நிலம் இல்லியாம், அந்த பள்ளியை இதற்கு முன் நிர்வகித்தவர், (காலம்சென்றவர்) கூட முன்பு நிலத்தை "பிரித்து" அளந்து தாருங்கள்னு தான் மனுசெய்திருந்தாராம்,

இப்பவந்தவங்கதான் இது பள்ளிக்கூடத்துக்கு சொந்தம்னு சொல்லி வழக்கு தொடுத்தார்களாம். கடந்த பத்து வருடமா நடந்த வழக்கில் பல லட்ச ரூபாய் செலவாம். நடுத்தர குடும்பத்த சேர்ந்தவர் பொழம்பிக்கிட்டிருந்தார்னு சொன்னார்.

அந்த அஜ்மீர் வாதியோ குறிக்கிட்டு, ஆமாங்க எங்க வாப்பாகூட சொல்லியிருக்காங்க, இந்த இடம் கடற்கரைத்தெரு முன்னால் முன்சீப், சுடுதண்ணி மரைக்கா பரம்பரை சொத்துன்னு.

நம்ம ஊர்க்காரர்: ஐந்து ஏக்கர் நிலத்தில் 2+ ஏக்கர் நிலம் பள்ளிக்கூடத்திற்காக கொடுத்திருந்தார்களாம். ஆனால் அதற்கடுத்து வந்தவர்களோ, தங்கள் பார்ட்டனார்களால் மேற்கண்ட திடலையும் விலைகொடுத்து வாங்கியிருந்ததாகவும், சில வருடங்களுக்கு முன் ஆகஸ்டு 15 அன்று பதிவு செய்யப்பட்டதாக கூறுகிறார்களாம்.

அஜ்மீர் பாய்: அட அது எப்படிங்க அன்னிக்கு முடியும், குறுக்கால கூட முடியாதுங்க.

ஊர்க்காரர் தொடர்ந்தார், அதோட அந்த பள்ளிக்கூடத்தில் கட்டியிருக்கிற பள்ளிவாசலுக்கு அருகில் கக்கூஸு தொடர்பா எப். ஐ. ஆர் கூட அந்த திடல் உரிமையாளர் பதிஞ்சிருக்கிறார்களாம்..

மேலும் தொடர்ந்தார், நம்ம பசங்க வெலியூர்லதான் கல்லூரி படிப்பேன்னு நிக்கறான்,60 பேத்துக்கு 34 கனிணிங்கதான் இருக்காம், ரெண்டு கனிணிக்குத் தான் அகண்ட வரிசை இணைய வசதி கொடுத்திருக்காங்கலாம்னு சொல்லி என்பையன் சொல்றான்.


சிறிது நேரத்திற்கே இரண்டு விசயங்கள் தெரிந்து போயிற்று எனக்கு:

1. அட சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பதற்காகத் தான் அஜ்மீர் வாதி பிட்ட போடுறாருன்னு. அப்பதான், "அல்லாஹ் தான் உங்களுக்கு உணவளிக்கிறான்" என்கிற குர் ஆன் வசனமும் ஞாபகத்திற்கு வந்தது. அட நமக்கும் இவ்வளவு விசயங்கள் இருக்கான்னு தெரிஞ்சது.

2. கடைசியாக நடந்த கால்பந்து போட்டியும், அதன் ஏதோ பிரச்சினை காரணமாக நடந்த ஒரு கொலையும் அப்படிதான்னு நான் சிறு பிராயத்திலிருக்கும்போது கேள்விப் பட்டது), அதன் வழியாக செல்லும்போது அந்த திடலை சுற்றி உள்ள சாக்கடைகள் தேங்கி இருப்பதும் அதன் வழியாக பள்ளி மாணவர்கள் கடந்து செல்வதும்னு... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே என் நினைவில் வந்து போனது.

dada..dada...dada... நம்ப ஊர்க்காரர் சாப்பிட்டு விட்டு பணம் செலுத்த போனபோது, அஜ்மீர் வாதி பில்லை தூக்கிக்கொண்டு ஓடினார், காக்கா சேத்து கொடுத்திருங்கலேன்னுட்டு, நம்மாளும் பணம் கொடுத்து விட்டு சென்றார்,

பிறகு அஜ்மீர் ஆள் இரண்டு ரூபாய் டிப்ஸை பந்தாவாக டேபிளில் வைத்துவிட்டு சென்றார்.

செய்தி கிடைச்ச சந்தோசத்துல மோரை அதிகமா ஊத்தி குடிச்சிக்கிட்டிருந்தேன். சேவகன் முறைச்சிக்கிட்டிருந்தான்.

-------------------
சைபர் கிரைம் [1] [2]:

எக்ஸ்பிரஸ் பாஸ்வேர்ட் இரண்டாவது முறையாக களவாடப்பட்டு அதைப் பற்றி அதிரைப் பட்டிணம் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டப் பிறகு மின்னஞ்சலில் கடவுச்சொல் மறுபடியும் அனுப்பப் பட்டது. இதில் ஒரு கூத்து என்னவென்றால், இலவசமாக கிடைக்கும் இந்த தளத்தை கைப்பற்றுவதால் அந்த குறிப்பிட்ட பட்டதாரி இளைஞர்கள் தாங்கள் சாதனையாளர்கள் என்று நினைத்து கொண்டிருப்பதுதான். இவர்கள் பற்றி முழுமையாக அறியும் பொழுது இவர்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனங்களுக்கு இவர்களின் இந்த illegal/cyber criminal பற்றி தெரிய வரும்பொழுது இவர்கள் மீது வேலையில் அமர்த்தும் நிறுவனங்கள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும். காரணம் இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் அதே நிறுவத்தின் வியாபார யுக்திகளுக்கும், பாதுகாப்பற்றவர்கள், திருடக்கூடியவர்கள் என்பது தெரியவரும்.

அதே சமயம், வலைப்பதிவுகள் இவ்வளவு வளர்ந்ததுக்கு காரணம் அதன் ஆரோகியமான பின்னூட்டங்கள்தான். குறிப்பிட்ட பதிவுகள் தங்களுக்கு எதிரானதாகவோ, தவறானதாகவோ இருக்கும் பட்சத்தில் பின்னூட்டங்களாகவோ மின்னஞ்சலின் மூலமோ ஆதாரத்துடன் தெரியப்படுத்தலாம். அதுதான் ஆரோக்கியம், சரியான அனுகுமுறை. இவை உங்களின் வாதத் திறமையை வளர்க்க உதவும்.

குறிப்பு: ச்சும்மா, ச்சும்மா... வெட்டியா, பலசரக்குகளையும் பற்றி பேசும்போது ஆங்கிலத்தில் dada,dada, dada, இன்னும்பிற...

Sunday, February 3, 2008

அதிரை சென்னைக்கு அரசு பேருந்து தொடக்க விழா

காலை 8 மணிக்கு சொகுசு பேருந்து தொடக்க விழா என்று அறிவித்து இருந்தார்கள். நான் 8.20 க்கு சென்றேன். அப்பொழுது எம்.எல்.ஏ திரு. ரெங்கராஜன் வந்தார். சுற்று முற்றும் பார்த்தேன் புதிய பேருந்து ஏதனாச்சும் இருக்குதான்னு. அங்கே பழைய 333 பேருந்து ஒன்று நின்னுக்குனு இருந்துச்சு. அட அரசியல்வாதிங்க ஏதும் செய்வாங்கப்பூன்னு நெனச்சிக்கினு நானும் கால்கடுக்க வெயிட் பண்ணிக்கினு இருந்தேன்.

நேரம் ஆக பசி வயித்த கிள்ளிச்சு. விழா தொடங்க கானோம். சரி வீட்டுக்கு போகலாம்னு பார்த்தா, எம்.எல்.ஏவே வெயிட் பண்ணும் போது நாம என்ன வெயிட்பண்ணா குறைஞ்சா போயிடுவோம்னு இருந்துட்டேன்.

மஞ்சல் நிறத்தில் ஒரு புதிய பேருந்து ஒன்று வந்தது. அட பஸ்வந்துருச்சுப்பா ன்னு நான் சொல்ல ”அட அது தனியார் வண்டிப்பா, நேத்திலிருந்து வருதுப்பா” இத்தோட தனியார் பேருந்துகள் 7 (விவேகம் -2 , பர்வீன் -1, ரவிபாலா, யாஸ்மீன், ரதிமீனா, அபி&அபி (நேற்றிலிருந்து)) இதில் விவேகம், ரவிபாலா, யாஸ்மீன் படுக்கை வசதி கொண்டவை.


அப்புறம் இரண்டு புதிய மஞ்சல் நிற பஸ்கள் வந்தன. உள்ளே சென்று போட்டோ எடுக்கலாம்னு பார்தேன். முடியலடா உள்ளேயும் எல்லாம் மஞ்சல் நிறம்.காலையில் 8 மணிக்கும், இரவு 9 மணிக்கும் அதிரையிலிருந்து புறப்படும், கும்பகோனம் வழியாக செல்லும். சென்னையில் காலை 8.40க்கும் இரவு 8.10 க்கும் கோயம்பேட்டிலிருந்து புறப்படும்.

விழாவில் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர். பார்ட்சா மரைக்காயர், ஜலீலா ஜுவல்லரி உரிமையாளர் முகைதீன், முஸ்லீம்லீக் பாரூக் கலந்து கொண்டார்கள். ஏனாதி பாலு வரலீங்க அவர் சார்பாக அவர் மகன் தமிழ் வந்தார்.

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகளை கடந்து பதினைந்து நாட்களுக்குமுன் டாக்டர் கலைஞர் நாட்டுக்கு அர்பணித்தார். அதில் கும்பகோணம் கோட்டாவிற்கு 120 பேருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய பேருந்துகளிலிருந்து அதிரைக்கு தாங்கள் தான் பெற்று வரவழைத்ததாக கூறுவது எவ்வளவு பெரிய பொய் என்பது எனக்கு வெயிலில் நின்று விழாவை பார்த்தபோது தான் மண்டையில் உறைத்தது.

அட அது இருக்கட்டுங்க, பேருந்து நிலையத்தை சுத்தியிருக்கிற பள்ளங்களைக் கூட செப்பனிட வக்கில்லை இவிங்களுக்கு. பேரூராட்சி அலுவலகம், 4 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கக்கூஸ் அருகில் பேருந்து நிலையத்தில் அசுத்தம் போன்றவற்றை சுத்தம் செய்ய முடியலை. இதுல வேற வேற விழாவாம்.

கடைசியாக எல்லோரும் இரண்டு பேருந்துகளில் ஏறி ஓசியாக பட்டுக்கோட்டை வரை சென்றனர்.

Saturday, February 2, 2008

அதிரை பாசிச கூட்டணியின் நல்ல காரியம்

அதிரை பாசிச (கள்ள) கூட்டணி”ன் நல்ல காரியம் ஒன்று உண்டெண்றால் அது நாளை தொடங்க இருக்கும் அதிரை சென்னை பேற்றுந்து வாகத்தான் இருக்கும் என்று நான் சொல்லுவேன்.

ஏற்கெனவே சென்னை சென்று கொண்டிருக்கும் பேருந்தில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் கொடுப்பட்டதாக கூறப்பட்டது. இப்பொழுது பாசிச கள்ள க்கூட்டாளிகளான திமுக+காங்கிரஸ் முயற்சியால் இரண்டு பேருந்துகள் காலையும் இரவிலும் இயக்க விருப்பதாக இன்று அறிவித்திருக்கிறார்கள். (கள்ளக் கூட்டணிக்காரர்கள் முதல் முயற்சியின் வெற்றியை நூர்லாட்ஜ் அல்வா கொடுத்து மகிழ்ச்சியை கொண்டாடலாம்)

21வது வார்டு இடைத்தேர்தல் நெருங்குகிறது. அதிரை பாசிச (கள்ள) கூட்டணியின் சார்பில் திமுகவேட்பாளராக முன்னால் மன்ற உறுப்பினர் இப்ராகிம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே நடுதெரு வார்டில் சரியாக வேலை செய்யாததால் தோல்விஅடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த வார்டில் 800 சொச்ச்ம் வாக்காளர்களிலிருந்து 500 வாக்காளர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நாளையும் அப்டேட் செய்கிறேன். இன்சா அல்லாஹ்..

அதிரை பேரூராட்சித் தலைவர் பேச்சு

அதிரை பஞ்சாயத்து போர்டு சேர்மன் ஜனாப்.M.M.S.அப்துல் வஹ்ஹாப் அவர்களின் உரையின் சிறுபகுதி.மேலும் அதிரை மற்றும் சென்னை பற்றிய வீடியோ கிளிப்பிங்களுக்கு கமால் எண்டர்பிரைசஸ் தளத்தைப் பார்வையிடவும்

அதிரை நிகழ்வுகள்

நமதூரில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆக்ஸிஸ் வங்கியின் திறப்புவிழாவில் கலந்து கொண்ட ஊர்வாசிகள் மற்றும் பிரமுகர்களின் புகைப்படங்கள்.

மீண்டும் அதிரை எக்ஸ்பரஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்.

சமீபத்தில் திருடப்பட்ட அதிரை எக்ஸ்ப்ரஸ் செய்தித்தளத்தின் கடவுச்சொல் மீட்கப்பட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! கடவுச் சொல் மீட்பில் ஒத்துழைத்த, தகவல்களைப் பரிமாறிக்கொண்ட நண்பர்களுக்கு நன்றி.

இன்ஷா அல்லாஹ் விரைவில் தொழில்நுட்பக் குறைபாடுகள் நீக்கப்பட்டு புதுப்பொழிவுடனும் புதிய செய்திகளுடனும் விரைவில் மீண்டும் காணக் கிடைக்கும்.

சமுதாய நோக்கில் செய்திகளை அனுப்ப விருப்பம் உள்ளவர்களும் எழுத்துத் திறனை மேம்படுத்தி வாசகர் வட்டத்தைப் பெற்று பிரபலமடையவும் விருப்பமுள்ள அதிரைவாசிகள் சுய அறிமுகத்துடன் ஈமெயிலிட்டு தொடர்பு கொண்டால் பரிசீலித்து வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழார்வமும் சமுதாய நோக்கமும் கொண்ட அதிரைவாழ் மாணவர்கள், இணைய ஆர்வலர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய மின்மடல்: adiraixpress@ஜிமைல்.காம் மற்றும் adiraimm@ஜிமைல்.காம்.