உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு மற்றும் பெருநாள்..?

எனதருமை சகோதரர்களே! இன்னும் சில நாட்களில் மகத்துவமிக்க மாதமான 'ரமளான்' நம்மை வந்தடைய உள்ளது. அதைத் தொடர்ந்து சிறப்புமிக்க ஈத் பெருநாளும் வர இருக்கின்றது. சமுதாயம் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு புனித கடமையாற்ற வேண்டிய இந்த சிறப்பு மிக்க மாதத்தில்தான் பிறை குறித்த சர்ச்சை ஏற்படுவதும், நோன்பு மற்றும் பெருநாட்களில் சில இடங்களில் மார்க்கத்திற்கு முரணான வகையில் சன்டை சச்சரவுகள் ஏற்படுவதும் சமீபகாலமாக நடைபெற்றுவரக்கூடிய ஒன்றாக இருக்கின்றது.

'எனது சமுதாயத்திற்கு மகிழ்ச்சியான தினங்கள் இரு பெருநாட்களே' என்ற நபிமொழியின் கருத்திற்கு மாற்றமாக அந்த மகிழ்ச்சியான நாட்களில் தான் இன்று பிறையின் பெயரால் பல பிரச்சனைகள் நடப்பதும், ஒரே ஊரைச் சார்ந்தவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக ஒன்றுபட்டு இருக்க வேண்டிய அந்த நாட்களில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பொருநாட்களைக் கொண்டாடுவதும் மிகவும் வருத்தத்திற்குறிய ஒன்று. இந்த நிலையில் இது சம்பந்தமாக சத்தியமார்க்கம் என்றத் தளத்தில் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் எழுதபட்டிருந்தது. அதை இங்கே பதிக்கின்றேன். இது சம்பந்தமாக ஏதேனும் மாற்றுக் கருத்து இருப்பின் சகோதரர்கள் பின்னூட்டமிடலாம். (பதிவாளன்)

கேள்வி:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று, மத்ஹபு மட்டும் நான்கா? என்று பிரச்சினை வந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு பதில் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். இப்படி அறிவுப்பூர்வமாக கேட்டவர்களே ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் என்று பிரிந்து நிற்கிறார்கள். ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை ஜாக் ஜமாஅத் மற்றும் தவ்ஹிது ஜமாஅத் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எப்படியோ அது எனக்குத்தேவையில்லை.

இதனால் எனக்கு குழப்பமாக உள்ளது. இன்று பெருநாள் தொழுவதா? இல்லை நாளை தொழுவதா? என்று குழப்பம். அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று பெருநாள் மட்டும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் வேறுபடுமா? ஒரே நாளில் பெருநாள் கிடையாதா? ஷரிஅத் அடிப்படையில் ரமளான் மற்றும் ஹஜ்ஜூ பெருநாள்களை என்று கொண்டாட, குறிப்பாக தொழ வேண்டும்? விளக்கம் தேவை.
வஸ்ஸலாம் - முகம்மது சாதிக்.


தெளிவு:

வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

மார்க்கத்தைத் தெளிவாக அறிந்துப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலில் இக்கேள்வியை எழுப்பியச் சகோதரர் முகம்மது சாதிக் அவர்களுக்கு, மார்க்கத்தில் மேலும் அதிகப்பற்றை இறைவன் ஏற்படுத்துவானாக.

சமூகத்தில் பாமர முஸ்லிம்களுக்கிடையில் மட்டுமின்றி அறிஞர்களுக்கிடையேயும் நீண்டகாலமாக நிலவும் குழப்பமான ஒரு விஷயத்தைத் தொட்டு சகோதரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒத்தக் கருத்து இல்லாத விஷயங்களில் ஓரளவாவது தெளிவு ஏற்படும் வரை, மார்க்க அறிவு முழுமையாகப் பெறாதப் பாமர முஸ்லிம்கள் எந்நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே, இத்தகைய ஒன்றுக்கு மேற்பட்டக் கருத்துகள் நிலவும் விஷயங்களில் சந்தேகங்கள் எழ அடிப்படைக் காரணமாகும். இத்தகைய விஷயங்களில் ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் எனில் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப காலங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

தொலைதூரத் தகவல் தொடர்பு ஏற்படாத காலத்தில் அந்தந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் அவர்கள் முடிவு செய்யும் நாளே பெருநாளாக கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அக்காலத்தில் ஆசியா கண்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் எந்நாளில் பெருநாள் கொண்டாடினார்கள் என ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தெரியாது.

ஆனால், இன்று உலகம் சுருங்கி விட்டதோ எனும் அளவுக்கு உலகத்தின் எந்த ஒரு மூலையில் நடக்கும் சிறு சம்பவத்தையும் அந்த நிமிடத்திலேயே உலகம் முழுவதும் அறிவித்து விடும் அதிவேக நவீன தொலைத்தொடர்பு சாதனங்களை இக்கால மக்கள் பெற்றிருக்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என முஸ்லிம் மக்கள் வெவ்வேறு நாட்களில் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இவ்வாறு வித்தியாசமான நாட்களில் பெருநாளைக் கொண்டாடுவது அதிவேகத் தகவலாக அறிவிக்கப்பட்டு இதனால், முஸ்லிம் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒரே நாளில் ஏன் பெருநாள் கொண்டாடுவதில்லை? என அநேகரிடையே கேள்வியை எழுப்புகிறது.

சகோதரர் எழுப்பியுள்ளக் கேள்வி இன்று அவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம் சமூகம் முழுமையாக வியாபித்துக் காணப்படும் குழப்பமே இக்கேள்வியின் ஊற்று கண்ணாகும். சகோதரர்கள் முதலில் அடிப்படையாக ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்.

மார்க்கம் என்பது எப்பொழுதுமே தெளிவானது தான். அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே சில வேளைகளில் ஒரு சில விஷயங்களில் கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன. அது அவரவர்களின் ஆய்வு திறன், கல்வியறிவு, ஒரு பிரச்சனையை ஆழமாகக் கூர்ந்து நோக்கும் திறமை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றது.

இவ்வாறு கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களைப் பொறுத்தவரை அதனை ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வருபவர்களுக்கு அவ்வாய்வுகள் தவறாக இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு நன்மை கிடைத்து விடுகின்றது. சரியாக இருந்து விட்டால் இரு நன்மையும் கிடைத்துவிடுகின்றது. (இதனை நபிமொழிகள் வாயிலாக நாம் அறிந்துக் கொள்கின்றோம்)

இங்கு (ஒன்றும் அறியாத) மற்றவர்களைக் குறித்துத் தான் பிரச்னையே. மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்துப் பின்பற்ற இயலாதப் பாமரன் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பதில் கிடைத்து விட்டால் இங்கு கேட்கப்பட்டுள்ள பெருநாள் போன்ற அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் கொண்ட விஷயத்தில் எதைப் பின்பற்ற வேண்டும் என்பதுத் தெளிவாகி விடும்.

இஸ்லாம் எப்பொழுதுமே 'இபாதத்' (வணக்க வழிபாடுகள்) சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. அது தொழுகையாக இருந்தாலும் சரி, ஹஜ்ஜாக இருந்தாலும் சரி, ஜகாத்தாக இருந்தாலும் சரியே!

இதன் அர்த்தம், இஸ்லாம் எச்செயலின் மூலமும் சமூகத்தில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த நாடுகின்றது என எடுத்துக் கொள்ளலாம். அது போன்றே இந்தப் பெருநாள் விஷயத்திலும் தற்போதைய குழப்ப நிலைக்கு இஸ்லாம் ஒரு தீர்வை முன்வைக்கிறது.

'நீங்கள் நோன்பு நோற்கும் நாளில் தான் நோன்பு, நீங்கள் நோன்பை விடும் நாளில் தான் நோன்புப் பெருநாள். நீங்கள் குர்பானி கொடுக்கும் நாள் தான் ஹஜ்ஜிப் பெருநாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஆதரப்பூர்வமான நபிமொழி திர்மிதீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

(அதாவது பிறை சம்பந்தப்பட்ட நோன்பு, மற்றும் பெருநாட்களில் ஜமாஅத் என்ன முடிவு எடுக்கின்றதோ அதன் படி நடக்கவேண்டும் என்பது இந்த நபிமொழியின் மூலம் நமக்கு உணர்த்தப்படுகின்றது. காரணம் முஸ்லிம்களின் மகிழ்ச்சி மிக்க இருதினங்களான இந்த ஈத் தினங்களில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது என்பதற்காகவே இஸ்லாம் நமது நலன் கருதி இந்த விஷயத்தில் நமது முடிவுக்கே விட்டுவிடுகின்றது என்பதை நாம் விளங்கவேண்டும்)

இந்த நபிமொழியை மனதில் கொண்டு இன்றைய முஸ்லிம்களின் சமூகச் சூழலை எண்ணிப் பார்த்தால் ஒட்டு மொத்தமாக இப்பெருநாள் விஷயத்தில் அது பின்பற்றப்படாமையைக் கண்டு கொள்ளலாம். அதற்காக பிளவுப்பட்டு வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்பதில்லை. சமூக ஒற்றுமைக்காக அறிஞர்கள் தங்கள் பிடிவாதங்களைச் சற்றுத் தளர்த்திக்கொண்டு (அருகருகே அமைந்த ஊர்களிலாவது) ஒரே நாளில் பெருநாள் கொண்டாடக் கருத்தொற்றுமை ஏற்படுத்த முன்வர வேண்டும், இறைவன் அருள் புரியட்டும். நாம் ஏங்கிக் கிடக்கும் உலகளாவிய இஸ்லாமிய இமாரத் ஒன்று ஏற்பட்டு, இதற்கு முடிவான தீர்வு கிடைக்கும்வரை நாம் ஒவ்வொருவரும் அவர்கள் சார்ந்திருக்கும் அந்தந்த ஊர் ஜமாஅத் முடிவு செய்யும் நாளில் அவ்வூர் மக்களுடன் இணைந்துப் பெருநாள் தொழுகை நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும்.

(இறைவன் மிக்க அறிந்தவன்)

நன்றி: சத்தியமார்க்கம். காம்
Share:

1 comment:

  1. ஊர் ஜமாத்தை பின்பற்ற வேண்டும் என்றால், எங்கள் ஊரில் 2 ஜமாத் இருக்கிறது.ஒன்று பழைய வாதத்தில் இருக்கும் சுன்னி ஜமாத் ம், மற்றது ஜாக் ஜமாத் ம் ( 2 மஜ்ஜித் களும்) இருக்கிறது. ஆகவே எதை பின் பற்ற வேண்டும்? 2 மஜ்ஜித், 2 ஜமாத் ம் இருப்பதால் பாமரன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும்? அப்பொழுதும் 2 தனித்தனியே பெருநாள் தொழுகை, 2 நாள் நோன்பு ஆரம்பம் ஆகிவிடுகிறேதே. குழப்பதிற்கு தீர்வு இது ஆகாதே, 2 ஜமாத் அவர் அவர்கள் சொல்லும் தீர்வே சரி என்று பத்வா வும் கொடுக்கிறார்கள். இதில் சேர்வது அவரவர் விருப்பம் என்றால் அங்கேயும் 2 ஆகிவிடுகிறேதே?
    தீர்வு தான் என்ன?

    BFGEMPLOYEE

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது