ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

துபாய் –Cell : 050 795 99 60 )

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.

இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.

அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.

எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.

என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.

அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.

பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.

ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.

ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.

காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.

உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.

இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.

சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !

பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.

சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.

லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.

நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !

ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,

எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.

பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.

பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.

பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?

பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.

சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.

வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.

பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.

15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.

இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?

கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.

ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.

இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.

15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.

ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.

பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.

மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.

துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !

குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?

எதுவானாலும் நீங்கள் கூறப்போகும் பதிலைப் பொறுத்து தான் எனது முடிவு இருக்கும் !

உங்களின் மேலான நல்ல பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனக் குமுறலுடன் ஓர் உழைப்பாளி !!

குறிப்பு :

வாசகர்களே, உங்களின் மேலான கருத்துக்களை sjaroosi@yahoo.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற இ.மெயில் முகவரிக்கோ அல்லது 050 – 7959960 என்ற கைபேசி அழைப்பிற்கோ தெரியப்படுத்தலாம்.

Source: http://www.mudukulathur.com
Share:

தக்வா பள்ளி அவசர ஒருங்கினைப்புக் கூட்டம்

அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகத்தில் மாற்றுமதத்தவர் ஒருவரை ரூ5000 சம்பளத்தில் பட்டுக்கோட்டை செசன்ஸ் நீதிமன்றம் நியமித்தது தொடர்பாக நாளை 30-07-2009 தக்வா பள்ளியில் அவசர கூட்டம் அசர் தொழுகைக்குப்பிறகு நடைபெற இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Share:

அதிரை பைத்துல் மால் குவைத் கிளை தொடக்க விழா!

அதிரை பைத்துல் மால் குவைத் கிளை துவக்க விழா கடந்த வெள்ளிக் கிழமை 17-07-2009 அன்று முர்காப் பகுதியில் நடைபெற்றது. ஹாபிள், மவ்லவி அப்துர் ரஹ்மான் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.


சவூதியிலிருந்து வருகை தந்திருந்த அதிரை பைத்துல் மால் சவூதி கிளை பொறுப்பாளர் சகோ. தாவூத் அவர்கள் அதிரை பைத்துல் மாலின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

கூட்டம் நடைபெற்ற இடத்திலேயே மக்ரிப் தொழுகை ஜமாஅத் நடைபெற்றது. ஹாபிள், மவ்லவி நிஜாமுத்தீன் பாகவிய் இமாமத் செய்ய தொழுகை நடைபெற்றது.

தொழுகைக்குப் பின் குவைத் கிளை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாகிகளாக ஒருமனதாகத் தேர்வு செய்யப் பட்டனர்.

தலைவர் : ஜைனுல் ஹுசைன்

துணைத் தலைவர் : பாவா பகுருத்தீன்

செயலாளர் : அப்துல் கரீம்

துணைச் செயலாளர் : இஸ்மாயீல்

பொருளாளர் : ஷரஃபுத்தீன்

நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. குவைத்தில் உள்ள அதிரைவாசிகள் ஒன்றிணைந்து செயல்படுவது.
2. அதிரை பைத்துல் மாலின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது.
3. அவ்வப்போதைய தேவைகளுக்கேற்ப தீர்மானங்களை இயற்றி செயல்படுவது.
4. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக் கிழமை முர்காப் பகுதியில் ஒன்று கூடுவது.

குவைத்தில் உள்ள அதிரைவாசிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக முன்முயற்சி செய்து இக்கூட்டத்தை கூட்டிய சகோ. தாவூத் அவர்களுக்கு அல்லாஹ் உரிய கூலியைத் தருவானாக. அல்லாஹ் நம்முடைய சிறந்த நோக்கங்களை நிறைவேற்றுவானாக. ஆமீன்.
Share:

லக்கி ஹாஜியார் என்ற அப்துர் ரஹ்மான் ஹாஜியார்

அபூ யூசுப் என்று இஸ்லாமிய புத்தக சந்தையில் அறியப்படுபவரும் தப்லீக் ஜமாஅத்தாரிடையே லக்கி ஹாஜியார் என்ற அறியப்படுபவருமான அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்கள் இன்று தஞ்சை மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார்கள்.

அதிரையின் முதுபெரும் மார்க்க அறிஞராகத் திகழ்ந்த மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்களின் இரண்டாவது மகனான அப்துர் ரஹ்மான் ஹாஜியாரின் மகன்களில் இருவர் ஹாபிள். மற்றொருவர் ஆலிம். இரு மருமகன்களும் ஹாபிள் மற்றும் ஆலிமாக உள்ளனர். சென்னை மன்னடியில் ஸலாமத் பதிப்பகம் என்ற பெயரில் மார்க்க நூல்களை வெளியிடும் நிறுவனத்தை நடத்தி வந்த அவர்கள் ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்கள்.

அதிரையில சமுதாய நல மன்றம் என்ற பெயரில் நற்பனி மன்றம் உருவாக்கி அதிரையின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதையும், அதிரை மக்கள் அதிகமான புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது ஷாதுலியா நர்சரி பள்ளி இருக்கும் இடத்தில் நூலகம் ஒன்றை அமைத்துச் செயல் படுத்தியதையும், பெண்கள் மார்க்கக் கல்வியில் தேர்ச்சியுடன் திகழ வேண்டும் என்பதற்காக அதிரை புதுப்பள்ளியில் அமைந்திருந்த மதரஸா ஹிதாயத்துன் நிஸ்வான் மத்ரஸா, தர்பியத்துல் இஸ்லாமியா அரபி பயிற்சி கலாசாலை உள்பட பல்வேறு ஊர்களில் மத்ரஸாக்கள் உருவாக்கியதையும், தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று தப்லீக் இயக்கத்தை வளர்த்ததையும் எளிதில் மறந்துவிட முடியாது.

அவர்கள் மூலம் இஸ்லாத்திற்குத் திரும்பியவர்களில் ஒருவர் ஆலிம், ஹாபிளாகவும் மற்றொருவர் ஹாபிளாகவும் இருக்கின்றனர். மேலும் பலர் சிறந்த முஸ்லிமாக அடையாளம் காட்டப்படக் கூடியவர்களாகத் திகழ்கின்றனர்.

அல்லாஹ் அவர்களின் நற்செயல்களைப் பொருந்திக் கொள்வானாக. அவர்களின் பிழைகளைப் பொறுத்தருள்வானாக. அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனத்தை அளிப்பானாக.
Share:

Pls avoid long calls in mobile.

1 Egg 2 Mobiles
65 minutes of connection between mobiles.
We assembled something as per image:Initiated the call between the two mobiles and allowed 65 minutes approximately...
During the first 15 minutes nothing happened;
25 minutes later the egg started getting hot;
45 minutes later the egg is hot;
65 minutes later the egg is cooked.Conclusion: The immediate radiation of the mobiles has the potential to modify the proteins of the egg. Imagine what it can do with the proteins of your brains when you do long calls.

Please try to reduce long time calls on mobile phones.
Share:

இறை இல்லம் நோக்கிவந்த விருந்தாளிகள்...

ஆற்காடு இளவரசர் அப்துல் அலி அவர்களும், LKS தங்கமாளிகை நிறுவனர் செய்யது மகம்மது ஹாஜி அவர்களும் தத்தம் துணை வியாருடன் 'உம்ரா' வந்துள்ளனர். சமுதாய மக்களுக்கு உதவுவதில், கல்விக்கு கை கொடுப்பதில், நலிவுற்ரோர்க்கு நன்மை செய்வதில் இருவருமே வெவ்வேறு தமாய்க் கோலோச்சி சேவை செய் கின்றனர்.

அவ்விரு தம்பதியனருக்கு ஒரு சிறிய இரவு உணவு ஏற்பாடு செய்து DINNER AND AND GET-TOGETHER நடந்தேறியது. ஜித்தா ஷறபியா INDIA GATE- உணவகத்தில் நடந்த இந்த அமர்விர்க்கு சவூதி தமிழ்ச் சங்கத் தலைவர் அப்துல் மாலிக் அவர்கள் தலைமை தாங்க, சகோ. ரபியா அனைவரையும் வரவேற்று தொகுத்தளிக்க முபாரக்- ஹஜ் கான்சல்- இந்தியத் தூதரகம்- ஜித்தா அவர்கள் உரை நிகழ்த்த. சிறப்பு விருந்தினர்கள் சிற்றுறையுடன் இனிதே நிறைவுற்றது.


இளவரசர் (Honarable One & Only living prince of India) ஆறகாடு நவாப் சாஹிப் அவர்கள் பேசும் போது 16ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை உள்ள அவர்களின் பாரம்பரியம், முன்னோர்களின் சமூக சிந்தனையை எடுத்துக்காட்டியுதுடன் ஒரு மத நல்லி னக்கத்தை உணர்த்தியது. அவரவர் மதத்தினர் அவரவர் வேதத்தினை தம் பிள்ளைகளுக்கு படித்து கொடுங்கள். அதை கற்றாலே பாதி இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளலாம் என்று மாற்று மதத்தினரை அவர் வேண்டியது ஹைலைட்!!!
Share:

சந்தனக் கூடும் - சமாதி வழிபாடும்.

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர். ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.

அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.
'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.

அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?

யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர். அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் : முஸ்லிம்) நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?

பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர். (அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்: அஹ்மத், திர்மிதி)

தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ் கூறுகின்றான்: எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர். (அல்குர் ஆன் : அல்மாயிதா 5:56)
Share:

அதிரை பிரமுகர்களின் முயற்சியும் ரயில்வே பட்ஜெட்டும்

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு அதிராம்பட்டினம் வழியாக சென்றுவந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயில் கடந்த நான்காண்டுகளாக அகல ரயில்பாதை விரிவாக்கம் காரணமாக தடைபட்டுள்ளது.ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் இழுத்தடிக்கப்பட்டு ஒருவழியாக திருத்துரைப்பூண்டி- சென்னை வரையிலான அகலரயில்பாதை செயல்பட்டு வருகிறது.


காரைக்குடி-திருத்துறைப்பூண்டி இருப்பாதை முழுமையாகும்வரை அதிரை-சென்னை நேரடி ரயில் போக்குவரத்துச் சாத்தியப்படாமலோ அல்லது சேது நெடுஞ்சாலையைக் காரணம் காட்டி சாலைப்போக்குவரத்து வசதியில்லாத பிறநகரங்களுக்கோ சென்றவருட பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நமதுபணம் திருப்பி விடப்படக்கூடும்!
இருநூற்றாண்றாண்டுகளாக வணிகப்போக்குவரத்திற்குப் பயன்பட்டுவந்த நமதூர் வழித்தடம் கடல் அரிப்பு, சுனாமிக்குப் பிந்தைய கடல்மட்ட உயர்வு, நமதூர் ரயில் போக்குவரத்துத் தேவையை சட்ட/பாராளுமன்ற அவைகளில் எதிரொலிக்காத உறுப்பினர்கள் போன்ற காரணங்களால் அதிரை-சென்னை ரயில்வே வழித்தடம் கனவாகிப்போகும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் அதிரை மற்றும் முத்துப்பேட்டையைச் சார்ந்த பிரமுகர்கள் மத்திய அமைச்சர் E.அஹமது அவர்களைச் சந்தித்து நமதூருக்கான ரயில் தேவையையும், அதிரை-சென்னை வணிகப்போக்குவரத்தின் வரலாற்றுத் தொன்மைகளைச் சுட்டிக்காட்டியும்,பெண்பயணிகளின் நெடுந்தூரப் பயணம் காரணமாக கால்வீக்கம், உபாதைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அதிரை-திருத்துறைத்துறைப்பூண்டி அகல ரயில்பாதை வேலைகளை துரிதப் படுத்த இவ்வருட ரயில்வே பட்ஜெட்டில் சேர்க்கும்படி அமைச்சரிடம் எடுத்துக்கூறியதை அதிரை எக்ஸ்ப்ரஸ் நன்றியுடன் வாழ்த்துகிறது.

நமது சகோதர வலைப்பதிவான அதிரைபோஸ்டில் மத்திய அமைச்சரை நமதூர் பிரமுகர்கள் சந்திந்ததன் பின்னனி சொந்த வர்த்தகநோக்கமே என்று அதிரையன் என்பவரால் எழுதப்பட்டுள்ளதை உரிமையுடன் கண்டிக்கிறோம். பிஸியான தொழிலதிபர்களான இப்பிரமுகர்கள் அதிரை மட்டுமின்றி அக்கம் பக்க ஊர்களையும் கருத்தில் கொண்டு தங்களது பொன்னான நேரத்தைச் தியாகம்செய்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துச் சொன்னது நிச்சயம் பாராட்டுதலுக்குறியது.

போலி வாக்குறுதிகளை அள்ளிவீசி வாக்குகளை அள்ளிச்சென்ற அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டியதை தொழிலதிபர்களாக இருந்தாலும் நமது ஊரின் நலத்தைக் கருத்திகொண்டு நன்முயற்சி செய்துள்ளதை தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

வாழ்த்த மனமில்லா விட்டாலும் தவறானஉள்நோக்கம் கற்பிப்பது நமதூரின் கொஞ்சநஞ்ச நலவிரும்பிகளின் சேவைமனப்பான்மையைக் குறைக்கும் என்பதை நினைவுறுத்துகிறோம். பலரும் வாசித்துச் செல்லும்தளங்களில் எழுதும்போது மிகப்பொறுப்புடன் எழுதவேண்டும் பொதுத்தளத்தங்களில் எழுதப்படும் ஆக்கங்கள், எதிர்கால இணையஆவணங்களாகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதை நட்புடன் (கு)சுட்டுகிறோம்!

அடுத்து,நமதூரிலிருந்து சென்னைக்குச் சென்றுவந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் மீண்டும் கிடப்பதற்குச் செய்யவேண்டிய/செய்திருக்க வேண்டிய அரசியல் சடங்குகள் குறித்து பிறகு பார்ப்போம்....!

தொடரும்....
Share:

மத்திய அமைச்சருடன் அதிரைப் பிரமுகர்கள் சந்திப்பு

நமதூரின் நலம் கருதியும், வெகு விரைவில் நமதூருக்கு அகல ரயில்பாதை துரிதமாக அமைக்கப்பட்டு செயல்படவும் ஊர்நலனில் அக்கரையுள்ள நமதூர் முக்கியஸ்தர்கள் இன்றுவரை முழு முயற்ச்சியில்தான் இருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரயில்வே இணை அமைச்சர் ஜனாப் இ. அஹமது (கேரளா) அவர்களை ஜனாப் ஜே.எம். இக்பால் ஹாஜி, ஏ.ஜெ. அப்துல் ரஜாக் (வக்கீல்) ஹாஜி, ஜனாப் எம்.எஸ்.தாஜுத்தீன் ஹாஜி, ஜனாப் ஏ.அப்துல் ரஜாக் ஹாஜி(Chasecom) ஜனாப் ஏ.ஆர்.அமானுல்லாஹ் ஹாஜி மற்றும் முத்துபேட்டையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் நேரில் சந்தித்து அகல ரயில்பாதைப் பணியை (தற்போது திருவாரூர் - காரைக்குடிதான், மயிலாடுதுறை திருவாரூர் இணைப்பு முடிந்துவிட்டது) நடப்பாண்டு பட்ஜெட்டில் சேர்க்கவும் மந்திரியை மனு செய்திருக்கிறார்கள்.


ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் வர இருப்பதால் அதில் இத்திட்டத்தை சேர்க்க பலவகையில் முயற்சிகள் நடந்த வண்ணமாக இருக்கிறது. அல்லாஹ் அவர்களின் இம்முயற்சிக்கு நல்ல பிரதிபலனையும் அவ்வாறு முயற்சி செய்வதற்காக வெற்றியை வெகுமதியாக வழங்குவானாக.

மத்திய அமைச்சர் E.அஹமது அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனுவின் காப்பியும் அனைவரும் பார்வையிட இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

M.அன்சாரி
Share: