காவிமயம் ஆகிவரும் நடுத்தெரு!

நடுத்தெரு (கிராஃபிக்ஸ் படம்)
உடைத்தெடுத்தார் கீழ்ப்புறத்தின் படிகள் தம்மை
உயர்நோக்காம் சாக்கடையைச் சீர்ப டுத்த

இடைத்தரகர் பலபேர்கள் நின்றே செய்தார்
இதையடுத்து மாதங்கள் பலவாய் வீதி

துடைப்பதுபோல் தார்ச்சாலை அமைப்ப தற்காய்த்
தூரெடுத்துக் காவிமண்ணும் கல்லும் போட்டார்

நடுத்தெருவே காவிமயம் இதனால் ஆகி
நாதியற்றுக் கிடக்குதப்பா! கேட்பா ரில்லை!
****

அஸ்ஸலாமு அலைக்கும்,

நான் உள்ளிட்ட நடுத்தெருவாசிகள், அன்றாடம் சந்தித்து வரும் நெடுநாள் பிரச்சினையாக தார் சாலை அமைக்கும் பணி உள்ளது.பல மாதங்களுக்கு முன் முக்கியஸ்தர்களில் ஒருவரால் இச்சாலை அமைக்கும் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டும் என்று உறுதியளிக்கப்பட்டது. எனினும், இதுவரையிலும் முடிக்கப்படாத காரணம் என்னவென்று தெரியவில்லை.

தெருவாசிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமாக ஓர் கட்டுரை எழுத நினைத்திருந்தேன். ஆக்கப்பூர்வ விமர்சனங்களை நம்மவர்கள் திறந்த மனதுடன் அணுகுவதில்லை என்பதனால்,செய்யுள் வடிவில் எழுதியது. அனைவராலும் வாசிக்கப்படாவிட்டாலும் கற்றவர்கள் ஒருசிலர் இதை வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தவறு இருப்பின் வாசகர்கள் மன்னிக்கவும்.இச்செய்யுளின் உட்பொருள் புரிந்தால் எமது உணர்வுகளும் புரிந்து கொள்ளப்படும். சிரமம் ஏற்றதற்கு நன்றிகள்.

-அதிரை அஹ்மது-
Share:

உள்ளூர் ஊர்க்காவல் படை தொடக்கம்

யுனைடெட் பவுன்டேசன் ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்றாக சொல்லப்பட்ட ஊர்க்காவல் படையை தற்போது உருவெடுத்திருக்கிறது.அதன் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. அதில் ஆறு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இருசக்கர வாகனம், சார்ஜ் லைட், லத்தி யுடன் மாதம் சம்பளமாக 3000 ரூபாயாக நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது சி.எம்.பி லைன், புதுமனைத்தெரு, நடுத்தெரு, ஹாஸ்பிட்டல் தெரு போன்றவற்றில் இரவில் சுற்றி காவல் காத்து வருவர்.

சென்னையிலும், அதிரை நடுத்தெருவிலும் யுனைடெட் பவுன்டேசன் அலுவலகம் கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் சேவைகளில் ஒன்றாக மின்விளக்கு, தொலைபேசி கட்டணங்களை கட்டுவதற்கு உதவி வருகிறது.

ஊர்க்காவல் படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அனுபவம் உள்ளவர்களா?, பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?, காவல்துறை அனுமதி பெற்றதா, பிரச்சினைகள் வந்தால் யுனைடெட் பவுண்டேசனில் வைத்து பேசப்படுமா அல்லது காவல்துறைக்கு செல்லுமா அல்லது சங்கத்திற்கு வருமா அல்லது  இந்த ஆறுபேரும் பேசி  முடிவெடுப்பார்களா போன்ற தகவல்கள் இல்லை

ஊர்க்காவல் படை பற்றிய உங்களது கருத்துக்களை அறியத்தாருங்கள்.

Share:

அதிரையின் ஆட்டோ விளம்பரங்கள் - ஓர் அலசல்

எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது - கீழத் தெருவைச் சேர்ந்த அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க் கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம்.

அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம் செய்யக் கோரினோம். பணத்தைப் பெற்றுக்கொண்டோர் செய்தார்கள் போலும். இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்துள்ளது; அச்சிறுவர் குணம் பெறவில்லை; கண் பார்வை அற்றவராகிவிட்டார்!

அவர்தான், நம்மூரின் ஆட்டோ விளம்பர மன்னன், 'அதிரையின் அற்புதம்', கீழத்தெரு அஹ்மது! இவருடைய கணீர்க்குரலை அதிரையின் தெருக்களில் கேட்கும்போது, காது கொடுத்துக் கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.

அதிரை பைத்துல்மாலின் நிரந்தர அறிவிப்பாளர் இவர். இவருக்கு பைத்துல்மால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' இதுவரை கொடுத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்; எனக்குத் தெரியாது; கொடுத்திராவிட்டால், இனியாவது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். எழுதிக் கொடுக்கும் விளம்பரத்தை வாசிக்கக் கேட்டு, அப்படியே மனத்தில் பதிய வைத்து, அட்சரம் மாறாமல் அதையே தனது கணீர்க் குரலில் ஊர் மக்கள் கேட்க உரத்துக் கூறுவார்.

பேரூராட்சியின் அடாவடி விளம்பரங்களும் இவர் மூலமே கொடுக்கப் படுகின்றன. வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி என்று அதிரையின் குறிப்பிட்ட சில தெருவாசிகளிடமிருந்து மட்டும் கறக்கும் பணம் எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாது. இதில், கொடுத்தவர்களே மீண்டும் கொடுக்கும் அப்பாவித்தனம் வேறு. மனிதர்களின் மறதியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அலுவலர்களின் அடாவடித் தனம்!

ஒரு முறை என் வீட்டுக்கு இருவர் வந்து வீட்டுவரி கேட்டார்கள். கொடுத்ததும் கொடுக்காததும் எனக்குத் தெரியாது. அதனால், "லிஸ்ட்டைப் பார்த்து, எவ்வளவு என்று சொல்லுங்கள்" என்றேன். "போன தடவை எவ்வளவு கொடுத்தீர்களோ, அதுதான்" என்றார் வந்தவர் கூலாக.

"அது எனக்குத் தெரியாது; கையிலிருக்கும் பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றேன். தன் கையிலிருந்த பட்டியலில் தேடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, இடையில் நான், "ஏன், இல்லையா?" என்று கேட்டபோது, "உங்க கீழ்புரம் லிஸ்ட் கொண்டுவரலீங்கோ" என்றார் அந்த 'அதிகாரி'. "பின்னே என்ன சிரைக்கவா வந்தாய்?" என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. அசடு வழியத் திரும்பிச் சென்றனர்.

வெளியில் சென்றிருந்த என் இல்லாள் திரும்பி வந்தபோது, நடந்ததைக் கூறினேன். "அதுதான் கட்டிவிட்டோமே!" என்று கூறி, பணம் கட்டிய ரசீதை எடுத்துக் காட்டினாள்.

சரி; இனி மற்ற ஆட்டோ விளம்பரங்களுக்கு வருவோம். அஹ்மதின் விளம்பரங்களுள் பெரும்பாலானவை, 'கமர்ஷியல்' விளம்பரங்கள்தாம். "லைலாத்தி, லைலாத்தி" - இது அடிக்கடிக் கேட்கும் விளம்பரம். 'சல்மான்ஸ்', 'லுக்மான்ஸ்' என்று கூறி, "உங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண ஆடைகளை வாங்கிச் செல்லுங்கள்" என்று அறிவிப்பார் அஹ்மது.

"இலவசம், இலவசம், இலவசம்!" என்று கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னணியில் செலவு இருக்கும்; அது வேறு கதை. இன்று காலை (29-07-2010) ஒரு புதிய அறிவிப்பு: "தமீம் இறைச்சிக் கடை!" இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம். ஏற்கனவே 'கொலஸ்ட்ரால்', BP என்று நோய்கள் கூடி இருக்கும்போது, இறைச்சி விற்பனையில் 'ப்ரமோஷன்' வேறா?

மக்களுக்குப் பயனுள்ள விளம்பரங்கள் ஒரு சில. ஆனால், அவற்றை மக்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 'ஷிஃபா' மருத்துவமனையின் சிறப்புச் சிகிச்சை அறிவிப்புகள், மாணவ மாணவிகளின் பள்ளிச் சீருடைகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு முதலானவை.

விளம்பர அறிவிப்புகளுள், வட்டியை ஆதாரமாகக் கொண்ட வங்கிகள், இன்ஸ்யூரென்ஸ், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும். "MGR ஐஸ்கிரீம்" வண்டி தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வந்து, பிள்ளைகளை அடம்பிடிக்க வைக்கும்.

வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, இந்துக்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்றுவட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் இந்துக்களும் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?

நம்மவர்களுள் தம்மைத் தனித்துவம் பெற்றவர்களாகக் கருதும் ததஜவினர், அஹ்மது மொய்தீனின் அறிவிப்புச் சேவையைப் பயன்படுத்திக் கொள்வதில்லையோ, அல்லது அவரே ததஜவினரின் அறிவிப்புகளைத் தவிர்க்கிறாரோ தெரியாது.

ததஜவினர் தனி அறிவிப்பையே எப்போதும் செய்கின்றனர். அவர்கள்தாம், தவ்ஹீதுக்காரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திடலில் தொழுவோம் என்ற ஒற்றுமைக் குரலுக்குச் செவி சாய்க்காதவர்கள் ஆயிற்றே!

நமதூர் ஆட்டோ விளம்பர நிலவரத்தை விரைவாக அலச நினைத்தபோது, எனது சிந்தனையில் வந்தவை இவைதாம். இதில், யாரையும் சாடுவதோ, அளவுக்கு மீறிப் புகழ்வதோ எனது நோக்கமன்று. பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.

ஆக்கம்: அதிரை அஹ்மது
Share:

கபருஸ்தானும்,பெண்கள் மார்கெட்டும்

பெண்களுக்கென்று தனி மார்க்கெட் ஒன்று ஊரின் நடுவே இருப்பது மிக அவசியம்.ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்களே மார்கெட்  சென்று மீன்,காய்கறி,இறைச்சி போன்றவைகளை வாங்கும் சூழ்நிலை இருப்பதால்,நடுத்தெரு போன்ற தெருவில் மார்கெட் இருந்தால் நல்லது.

ஏனெனில் தற்போது பெண்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டு மெயின் ரோட்டில் உள்ள (கரையூர் தெரு)மார்கெட் சென்று பொருட்களை வாங்கிவருகின்றனர்.இதனால் நம் பெண்களின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது.எனவே இதற்கு நம் ஊர் மக்கள் சிந்திப்பார்களா?

மேலும் தற்போது ஷாதுலியா பள்ளி இருந்த இடத்தில் கபறுஸ்தான் வர ஏற்பாடு நடக்கிறது.அந்த இடத்தை பெண்கள் மார்கெட்டுக்கு என ஒதுக்கிவிட்டு,சி எம் பி லைன் பக்கம் (மரைக்காயர் குளம்,காட்டுக்குளம்)கபறுஸ்தான் வர ஏற்பாடு பண்ணினால் அந்த பகுதி மக்களின் சிரமம் குறையும்.ஏனெனில் அந்த பக்கம் ஊர் பெரிதாகிக் கொண்டு போவதால் - மைய்யித்தை கொண்டுவந்து அடக்க சிரமமாக உள்ளது.

மேலும் தற்போதுள்ள தக்வா பள்ளி கபருஸ்தானை செம்மைப்படுத்தி,ஒழுங்குபடுத்தினால் இன்னும் பல மையத்துகளை அடக்க முடியும்,இன்ஷா அல்லாஹ்.

எனவே,சி எம் பி லைனில் கபறுஸ்தான் கொண்டு வரவும்,சாதுலியா பள்ளியை பெண்கள் மார்கெட்டாக ஏற்படுத்தவும் முயற்சிக்கலாமே?

கருத்து : உ.மு.அப்துல் ஜப்பார்,(நடுத்தெரு)
நியூ யார்க்


இதன் சாதக - பாதக அம்சங்களை சகோதரர்கள் பின்னூட்டமிட்டால் இன்ஷா அல்லாஹ் அதன் மூலம் ஒரு நல்ல யோசனை-தீர்வு பிறக்க வாய்ப்புண்டு.
Share:

மல்லிப்பட்டிணம் பெட்ரோலும் கோழியிலிருந்து முட்டை ஆராய்ச்சியும்!

சில வருடங்களுக்குமுன் மல்லிப்பட்டினம் அருகே பெட்ரோலியம் கிடைப்பதாக வந்த தகவல் அடிப்படையில் கனரக இயங்திரங்களைக்கொண்டு அப்பகுதி தோண்டப்பட்டது.இது உண்மையா என்று தெரியாது.எனினும் சுமார் 20 லிட்டர் அளவுக்கு மண்ணெண்ணை போன்ற திரவம் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது.

இதற்கான செலவு சுமார் 10-20 இலட்ச ரூபாய் என்று ஒருவர் சொன்னபோது, இவ்ளோ பணம் செலவளிச்சு 20 லிட்டர் மண்ணெண்ணைதான் கிடைச்சதா? பேசாமல் கூப்பன்(ரேசன்) கடையிலேயே வாங்கியிருக்கலாமே என்று அருகிலுள்ளவர் கடித்தார்.

மேலோட்டமாகக் கேட்கும்போது கேணத்தனமாக கருத்தாக இருந்தாலும் சொன்ன விடயம் சமீபத்தில் வெளிவந்த ஒருசெய்தியைப் படித்தபோது நினைவில் வந்தது. கோழியிலிருந்து முட்டை வந்ததா?முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியில் விடை கண்டுபிடித்து விட்டார்களாம்!

இக்கேள்வியை 20 வருடங்கள்முன் பள்ளி நண்பர்களிடம் கேட்டபோது,கோழி-மார்க்கெட்டில் இருந்தும்,முட்டை-கபீர் காக்கா கடையிலிருந்தும் வந்ததாகச் சொல்லி வெருப்பேற்றினர். கேள்வியை சற்றுமாற்றி "கோழி முன்னாடி வந்ததா? முட்டை முன்னாடி வந்ததா?" என்று ஒருவர் நமுட்டுச் சிரிப்புடன் கேட்க,உஷார் பேர்வழி நண்பரொருவர் "முட்டை கோழிக்குப் பின்னாடி வந்தது" என்றார்.

அடிமுட்டாள்கள் முதல் அறிவுஜீவிகள்வரை சிந்திக்க வைத்த இக்கேள்வி யாரால் எப்போது கேட்கப்பட்டிருக்கும் என்று தெரியவில்லை.எப்படியோ இக்கேள்வி முடிவுக்குக் வந்தவரை நல்லது என்று நினைக்கிறேன்! அதேசமயம் இத்தகைய அற்பமான கேள்விக்கு விடைகாண விஞ்ஞானத்தால் மட்டும்தான் முடியுமா? என்ற சிந்தனை ஓடியது.

விஞ்ஞான ஆய்வு முடிவுபடி கோழியிலிருந்துதான் முட்டை வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். (அப்பண்டா அந்தக்கோழி எங்கிருந்து வந்தது? என நண்பன் தஸ்தகீர் கேட்காமலிருக்கணும்:) இதுகுறித்து தமிழ்சஞ்சிகை ஒன்றில் வெளியான கட்டுரையில்,

இங்கிலாந்திலுள்ள சேர்ந்த ஷெஃபீல்ட் மற்றும் வார்விக் என்ற இருபல்கலைக் கழகங்களும், சவாலான, சிக்கலான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுபவை. இந்த இரு பல்கலைக்கழகங்களும் கோழி மற்றும் முட்டை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டன. பல்வேறு காரணிகளை மையப் படுத்தி கடைசியில்,'கோழிதான் முதலில் வந்தது!' என்ற முடிவை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஷெஃபீல்ட் பல்கலைக்கழகப் பேராசிரியருமான டாக்டர் கோலின் ஃப்ரீமன், ''முட்டையின் மேல் ஓடு உருவாவதில் ஓவல்சிடின்-17 (OC-17) எனப்படும் புரதத்தின் பங்கு முக்கியமானது. இது பெரும்பாலும் சினையுற்ற கோழியின் கருப்பையில் உருவாகும். இதுவே, நாளடைவில் மிக நுண்ணிய கால்சியம் கார்பனேட்டும்,பின்னர் கால்சியம் துகள்களும் உருவாகக் காரணமாகின்றன.

இந்த ஓடு உருவான பின்புதான் முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரு உருவாகி இருக்கும் என்பது எங்கள் ஆராய்ச்சியின் கணிப்பு.இதை நாங்கள் அவசரகதியில் தெரிவித்து விடவில்லை. இந்த ஆராய்ச்சியின் அடிப்படை நவீனமாக இருக்க வேண்டும் என்பதற்காக முட்டை ஓட்டில் உள்ள மூலக்கூறு வடிவமைப்பை கம்ப்யூட்டர் உதவியுடன் வரைந்தோம்.

அனிமேட்டிக்காக அமைக்கப்பட்ட இந்த முயற்சியில் ஓவல்சிடினின் பங்கைத் தெளிவாக உணர்த்தி உள்ளோம்.இவ்வளவு காலமும் இந்த விஷயம் ஒரு புதிராக இருந்தாலும், உலகில் முதலில் முட்டைதான் உருவாகி இருக்கும் என்று பரவலாக நம்பப்பட்டது.(?)ஆனால், ஆய்வு முடிவு அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது!'' என்கிறார் பெருமிதத்துடன்.

இந்த ஆராய்ச்சி முடிவை நோக்கி ஆச்சர்யங்களும் கைதட்டல்களும் எழும் அதே நேரத்தில்... குறுக்குக் கேள்விகளும், சந்தேகங்களும் குவியத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சி அமைப்புகள் இம்முடிவின் இண்டு இடுக்குகளில் நுழைந்து கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகின்றன.

குறிப்பாக, 'நியூயார்க் காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் மற்றும் லைஃப் சயின்ஸ் பேராசிரியர் ஆல்ஃபிரட்,"ஓவல்சிடின் படிப்படியாக வேதிமாற்றமடைவது இன்னும் தெளிவாக நிரூபிக்கப் படவில்லை.இவ்விஷயத்தில் அவர்களுக்கே குழப்பம் உள்ள நிலையில், இந்த முடிவை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

சினையுற்ற கோழியின் கருப்பையில் இந்தத் துகள்கள் இருக்கும் என்றால், அந்த சினையுற்ற கோழி எதில் இருந்து தோன்றியது? ஒருவேளை அமீபா போல் இந்த ஓவல்சிடினும் உலகில் தோன்றி, பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாமே?" என்று கொக்கிபோடுகிறார்.

சினையுற்ற கோழி எதிலிருந்து தோன்றியது என கேட்பவர் சாதாரண பாமரனல்ல. 'நியூயார்க் காலேஜ் ஆஃப் அக்ரிகல்ச்சர் மற்றும் லைஃப் சயின்ஸ் பேராசிரியர்!இவர்களின் தேடல் முதலில் வந்தது முட்டையா? கோழியா என்பதோடு நின்றுவிட்டது என்று நினைக்கிறேன்.

கோழி-முட்டை-கோழி என்பதைச் சுற்றியே இவர்களின் ஆய்வுகள் இருந்துள்ளன. கோழிக்குத் துணையாக சேவல் இன்றி கருமுட்டைக்கு வாய்ப்பில்லை என்று சாதாரண விடயம் ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை.உயிரினங்களில் ஆண்-பெண் இணைகள் இன்றி முட்டையோ, குஞ்சோ உருவாகவாய்ப்பில்லை என்பது தெரியாதவர்களா இவர்கள்?

படைப்புகள்-படைத்தவன் குறித்த அடிப்படை தெளிவில்லாததால்தானே இவர்களின் பொது புத்தி இப்படியெல்லாம் கேள்வி கேட்கச் சொல்கிறது? திருக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகச் சொல்லியிருப்பதை இவர்கள் அறிந்திருந்தால் இத்தகைய ஆராய்ச்சிக்கும் குழப்பங்களுக்கும் அவசியம் இருந்திருக்காது.

051.049 நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு ஒவ்வொன்றையும் நாம் ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

042.011 வானங்களையும் பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களிலிருந்தே ஜோடிகளையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை (ப் பல இடங்களிலும் பல்கிப் பரவச் செய்கிறான். அவனைப்போன்று எப்பொருளும் இல்லை. அவன்தான் யாவற்றையும் செவியேற்பவன், கேட்பவன்.
முதற்பத்தியில் சொன்னதுபோல் 'மல்லிப்பட்டினம் மண்ணெண்ணை' மாதிரி இவ்வளவு மெனக்கெட்டு ஆராய்ச்சி செய்வதற்குப் பதில் அரை மணிநேரம் குர்ஆனில் தேடி இருந்தால் எப்போதோ விடைகிடைத்திருக்கும்.
Share:

ஹிஜாப் தரும் சுதந்திரம்!
என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்
Share:

பராஅத் இரவு என்ற பெயரில் பித்அத்!!!

ஷாஃபான் மாதம் 15 ஆம் இரவு நம்மவாகளால், மிக கோலாகலமாகக் கண்ணியப்படுத்தப்பட்டு, விழாவாக கொண்டாடப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம். இந்த இரவை விழாவாகக் கொண்டாடுவதில் பாமர மக்களோடு ஆலிம்களும் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நாளில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் நூதனமான காரியங்களை பல்லாண்டு காலமாக நன்மை என்ற பெயரில் நடத்தி வருகின்றனர்.

“முன்னோர்களில் சிலர் இதனை உருவாக்கினர்” என்பதைத் தவிர திருக்குர்ஆனிலோ, நபிவழியிலோ, இவற்றுக்கு ஆதாரம் கிடையாது. “குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவற்றுக்கு ஆதாரம் உண்டா? என்று மார்க்கம் கற்றவர்கள் கூட ஆராயவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவுமில்லை. படித்தவர்களின் நிலைமையே இதுவானால், படிக்காத மக்கள் எப்படி உண்மையை உணரமுடியும்? “ஷாபான்” 15 ஆம் இரவில் நன்மை என்ற பெயரால் நடத்தப்படும் காரியங்கள், குர்ஆன், ஹதீஸுக்கு உடன்பட்டதா? அல்லகு முரண்பட்டதா? என்பதை, முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அதனை தெளிவு படுத்த விரும்புகிறோம்.

மூன்று யாசீன்

இந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் மூன்று “யாசீன்” ஒத துன்பம், துயரங்கள் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் நிலையான செல்வத்தைப் பெறவும் துஆ செய்வது நமது வழக்கத்தில் இருந்து வருகின்றது. “இந்த இரவில் தான் “தக்தீர்” என்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த இரவு மூன்று யாசீன் ஓதி மூன்று காரியங்களுக்காக துஆ செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. “இன்னா அன்ஸர்னாஹு ஃபீ லைலதில் கத்ரி” என்ற வசனத்தில் இடம் பெற்றுள்ள “கத்ரு” என்ற சொல்லுக்கு “தக்தீர்” என்பதே பொருள். இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் ஊட்பட பல விரிவுரையாளர்கள் இந்தப் பொருளையே குறிப்பிடுகின்றனா. மனிதர்களின் ஓராண்டுக்கான விதியை நிர்ணயிப்பது ரமலான் மாதத்தில் வருகின்ற “லைலதுல் கத்ரு” என்ற இரவில் தான். ஷஃபான் மாதம் வருகின்ற 15 அம் இரவில் அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, எந்த நம்பிக்கையில் ஷஃபான் 15ஆம் இரவில் விசேஷ துஆ ஓதப்படுகிறதோ, அந்த நம்பிக்கைக்கே எவ்வித ஆதாரமும் இல்லை.

ஷஃபான் 15ஆம் இரவில் குறிப்பிட்ட சில அமல்களைச் செய்வதற்கு ஆதாரமுண்டா என்றால் திருமறைக் குர்ஆனிலோ, நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்
அவாகளின் சொல், செயல், அங்கீகாரத்திலோ, அருமை சஹாபாக்களின் செயல்களிலோ, தாபியீன்கள், நான்கு இமாம்கள் வழிமுறைகளிலோ இதற்கு எள்ளளவும் ஆதாரம் கிடையாது. இப்படிச்செய்வது நன்மையானது என்றால், நம்மை விட, நன்மை செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட சஹாபாக்கள் அதனைச் செய்திருப்பார்கள். பிற்காலத்தில் தோன்றிய சிலர் தான் அதனை உருவாக்கினர்.

இமாம் கஸ்ஸாலி அவர்கள் இந்த இரவில் 100 ரக் அத்துகள் தொழ வேண்டும் என்று கூறியிருப்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவாகள் இப்படிச் சொன்னதாகக் கூறுவதும் திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டதாகும்.

நன்மைகள் தானே!

தொழுவது, யாசீன் ஒதுவது, துஆ செய்வது போன்றவை நன்மைகள் தானே? அவைகளைச் செய்வது மார்க்கத்திற்கு முரணாணது என்பது எப்படி? என்று, நம்மில் மார்க்கம் கற்றோர் பெரும்பான்மையினரும் தமிழக முஸ்லிம்களில் பலரும் நினைக்கலாம். சற்று நிதானத்துடன் பின்வரும் விளக்கங்களைப் பொறுமையாக படித்து சிந்தித்து சரியாக விளங்கிக் கொள்ளுமாறு, அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

எவர் நம்மால் ஏவப் படாத அமல்களைச் செய்கின்றாரோ அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹ
நூல்: புகாரி,முஸ்லிம்

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது, முஹம்மது சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித் அத்துக்களாகும். பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்ரலியல்லாஹு அன்ஹு , ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி,முஸ்லிம், நஸயீ

இந்த இரவில் இத்தகு வணக்க வழிபாடுகளில் ஈடுபடவது மார்க்கமாக இருந்திருப்பின், நிச்சயமாக நபிகள் சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவாகள் நமக்குக் காட்டித் தந்திருப்பார்கள். நபி சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் கட்டளையிடாத ஒன்றை கட்டளையிட்டவர்கள் யார்?

“அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக ஆக்குகின்ற கூட்டாளிகள் அவர்களுக்கு உண்டா?” (அல்குர்ஆன் 42:41) என்ற அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையையும் சீர்தூக்கிப் பார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பிட்ட ஒருவரையறைக்குள், வணக்க வழிபாடுகளில் ஈடுபட “ரஜப்” மாத 27வது இரவையும், ரமலான் மாத 27வது இரவையும், வேறு சில இரவுகளையும் நாமாக உருவாக்கிக் கொண்டோம். இதுவரை நாம் எடுத்து வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இம்மாதிரி இரவுகளில் பிரத்தியேகமான வணக்க வழிபாடுகள் ஏதும் இல்லை என்பது தெளிவாகின்றது.

முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமுமின்றி விசேஷ இரவு என்று கருதிக் கொண்டு செய்து வரும் போலி வணக்கங்களிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்வின் தூதரை எல்லா நிலைகளிலும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

பேராசிரியர் K. முஹம்மது இக்பால் மதனி, துபை
நன்றி: http://tamilsalafi.edicypages.com/
Share:

அல்லாஹ்வையே கூலியாகக் கொண்ட - அருட்கொடை மாதமே வருக!!!நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 பாவங்களை மன்னிக்கும் புன்னியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நற்செயல்களால் சொர்க்கத்தின் வாசலை திறக்கச் செய்யும் சங்கைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நரகத்தின் வாயிலை மூடச்செய்கின்ற அல்லாஹ்வின் அருள்மழைப் பொழியும் அருமைமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஷைத்தானுக்கு விலங்கிட்டு மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மகத்துவமிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 ஷைத்தானின் தூண்டுதலால் நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு  நிரந்தர சுவனத்தின் எல்லை இல்லா இன்பத்தை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 கை நீட்டியவர்களுக்கு கையிலுள்ளதைக் கொடுத்து கண்ணீரைத் துடைக்கத் தூண்டும் காருண்ய மிக்க ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
 நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்த மனிதவள மேம்பாட்டிற்கு வழி வகுத்த மாமறைக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட புனித மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,
  
தலையில் பிறந்தோன் காலில் பிறந்தோன், என்று ஆதிக்க வர்க்கத்தினர் பூட்டிய அடிமை விலங்கை உடைத்தெறிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்றுக்கூறி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திய சங்கைமிகு குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

கருப்பன் - சிவப்பன் என்ற நிறவெறியை காலில் போட்டு மிதித்து அனைவரும் ஆதம் என்ற ஒரு மனிதரின் பிறப்புகளே என்று முழங்கிய அறிவின் பொக்கிஷம் அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அழகிய உபதேசங்களை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

பெண் இனத்தின் உடலில் உயிரோட்டம் இருக்கிறதா ? என்ற ஆய்வுக்குட்படுத்திய சித்ரவதையிலிருந்து மீட்டெடுத்து அவளும் உன்னைப் போன்ற மனித இனமே என்று முழங்கி பெண் இனத்தை அழிவிலிருந்து மீட்டி சமூக நீதிக்காத்த திருமறைக்குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

ஆண்டவன் பெயரால் அப்பாவி மக்களை சுரண்டி வயிறு வளர்த்த புரோகிதக் கூட்டங்களை ஒழித்துக்கட்டி அல்லாஹ் ஒருவன் என்றக் கொள்கையை முழங்கிய மாமறைக் குர்ஆனை நிணைவூட்ட ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது,

அன்புள்ள சகோதரர்களே !
நன்மைகள் அதிகரிக்கவும் பாவங்கள் மன்னிகப்படவும், நல்ல எண்ணத்துடன் ரமளான் மாதத்தை அணுகுங்கள்.
ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.' நூல்: புகாரி. 1899.

ரமலான் மாதத்தில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) கூறினார். நூல்: புகாரி.1901


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அதிரை ஏ.எம்.பாரூக்


Share:

அதிரை முஸ்லிம்களே எங்கே சென்றீர்கள்?

அஸ்ஸலாமு அலைக்கும்,


அதிரையில் பல முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் இருகின்றன. அங்கு பயிலும் முஸ்லிம் மாணவர்களின் பங்கு 80 %, அனால் அங்கு பணிபுரிவதில் முஸ்லிம்களின் பங்கு மிக குறைவு. அதில் அதிரை முஸ்லிம்களின் பங்கு ஒரு சில பேர்கள் மட்டுமே. இதற்கு காரணம் தான் என்ன?.

ஆசிரியர் பணி தான் மிக சிறந்த பணி. அத்தகைய பணியில் நமதூர் முஸ்லிம்கள் பங்குபெற வேண்டும்.

நமதூர் முஸ்லிம்கள் பங்கு பெறாததற்கு என்ன காரணம்?.

அதிரை முஸ்லிம்கள் கல்வியில் கவன குறைவா?

அதிரையில் கல்வி நிறுவனத்தில் வேலை செய்ய ஏதேனும் தடையா?

இது உங்கள் கவனத்திற்கு.

நாம் இன்று வெளிநாடு செல்கிறோம். அங்கு இதை விட அதிக சம்பளம் தான் கிடைக்கிறதா?. இங்கு குறைந்த சம்பளம் எனில் மாற்றுமத சகோதர்கள் மட்டும் நல்லநிலையில் இருக்கிறார்களே ஏன்?.

மாணவ சமுதாயமே, இனியாவது இந்த நிலை மாறி நல்ல முறையில் கல்வி கற்று. நமதூர் முஸ்லிம்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்து பல ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்!
Share:

பிறையே ரமலான் பிறையே......


இதோ ரமலான் மாதம் வெகு அருகில்...இதுபோன்ற சந்தர்பங்களில் பழைய அந்த சிறுவர் கால நினைவுகளை அசைபோட்டு பார்ப்பதில் சகோதரர் அபூஅசீலா மற்றும் மு.செ.மு. நெய்னா போன்றவர்கள் முன்னோடிகள் என்றாலும், நாம் அனுபவித்த அந்த சிருவர்கால நினைவுகளில், பிறை பார்ப்பது என்பது கொஞ்சம் சுவராஸ்யமான அனுபவம்தான்.ஷஃபான் பிறை15 முதலே நோன்புக்கான கவுன்டவுன் துவங்கிவிடுகிறது, ஷஃபான் பிறை 28 லேயே பிறை காணுவதற்கான பயிற்சி,


மாலை நேரங்களில் சூரிய அஸ்தமன நேரத்தில் நோன்புக்கு முன்பே பிறை இங்கு தெரியும் அங்கு தெரியும் என்று ஒவ்வொரும் ஒரு கருத்து, பிறை 30 முடிந்துதான் நோன்பு துவங்கும் (காலண்டர்படி) என்றாலும் பிறை 29 ல், இன்றே பிறை தென்படாதா என்ற ஏக்கம்.


அன்று மாலை5 மணி முதலே பிறை காண ஒன்று கூடிவிடுவோம், அனைவரின் கண்களும் மேற்கு திசை வானத்தை நோக்கியபடி காத்திருக்க , பெரியவர்களை விட எங்களின் எண்ணிக்கைதான் அதிகம், எங்களுக்கு போட்டியாய் எங்கிருந்தோ வந்த மேகங்களெல்லாம் ஒன்றுகூடி எங்களுக்கு எதிராக வானத்தில் சங்கமமாகிவிடும்.


மஃக்ரிப் வக்து நெருங்க, இருள் சூழ துவங்க, ஊர்முழுவதும் மின்சாரம்

துண்டிப்பு (நல்லநாள், பெரியநாள் எது என்று நம்மை விட மின்சாரத்திற்குதான் நன்றாக தெரியும்..!) அந்த நேரம் பார்த்துதானே மின்சாரம் துண்டிக்கப்படும்.

மஃக்ரிப் பாங்கு, கரண்ட் இல்லாமல், (அன்று எங்க பள்ளிவாசலிலே பாட்டரி எல்லாம் இல்லை).


பாங்குக்கு பிறகு நகரா அடிக்க (பாங்கு முடிந்ததை உறுதி செய்ய) நாங்களெல்லாம் பிறைய கண்டாச்சு..... பிறைய கண்டாச்சு... என்று சும்மாவாச்சும் கத்த அதையும் பெரியவர்களெல்லாம் எங்கள் உற்சாகத்தை கண்டு ரசிப்பார்கள்.சற்று நேரம் கழிந்து யாரோ ஒரு முக்கியஸ்தரின் குரல், “புள்ளயலா இன்றைக்கு நோன்பு இல்லையாம் இலங்கையில பிறை தென்படலயாம் அதனால நாளை இரவுதான் நோன்பு துவங்கும்.(அன்று மறைக்காப்பள்ளியில் கூடும் உலமாக்கள் சபையின் முடிவுகூட இலங்கை வானொலியின் அறிவிப்பை வைத்துதான் இருந்தது இன்று எப்படியோ?).

மறுநாள் உறுதியாய் இன்று இரவு நோன்பு துவங்கும் என்றாலும் மீண்டும் பிறை காண ஒன்றுகூடுவது (இன்று வானம் ரொம்ப தெளிவாய் இருக்கும்).இன்று பிறையை கண்டதற்காக நகரா அடிக்க ஆளாளுக்கு போட்டி,

இதில் ஒருதடவை எங்கள் பள்ளி நகரா கிழிந்தேவிட்டது.இரவு தராவிஹ் தொழுகைக்கு வெளிப்பள்ளி வழியும் அளவுக்கு கூட்டம், (முதல் நாள் அல்லவா). தரவிஹ், வித்ரு தொழுகை முடிந்து ஹிஜ்பு, .இடையில். புகை மணக்கும் தேத்தண்ணி (அதையும் ருசித்து ருசித்து குடிப்பது)

ஹிஜ்பு முடிந்து நார்சா, முதல் நாள் என்பதால் இன்று வாழை பழம்தான் நார்சாவாம்.


எல்லாம் முடிந்து உறக்கம் கண்ணை சொக்கினாலும் கிளித்தட்டு விளையாட்டை மட்டும் விடுவதில்லை, கொஞ்சமாவது விளையாடிவிட்டு உறங்க சென்று விடுவோம். (அடுத்த நாள்முதல்தான் சஹர் வரை கிளித்தட்டு).சஹர் வேலை வர, பக்கிரிசாவின் மேளமும் பாட்டும் கூடுதல் தாலாட்டு, தூக்கத்திலிருந்து எழ மனம் வராமல், வீட்டில் அடித்து எழுப்பியும் எந்திரிக்க மனமில்லாமல், இலங்கை வானொலியில் சஹர் நிகழ்ச்சியில் ஒலிக்கும் கசீதா (அல்லாஹு அல்லாஹு அல்லாஹு அல்லாஹ் ..... அஸ்சூபு ஹுபதா...), துள்ளிக்குதித்து எழுந்து சஹர் உணவை உண்ண தயாராவது.நோன்பு காலங்களில் காலையில் “அர்ரஹ்மான் ஓதுவது அன்றைய பழக்கமாக இருந்தது நமக்கெல்லாம் குர்ஆன் ஓத கற்று தந்த உஸ்தாது, குரல்வளம் மிக்க சிறுவரை தேர்ந்தெடுத்து மற்ற சிறுவர்களுடன் ஊர்வோலமாய் சென்று ஒவ்வொரு வீடாக இந்த அர்ரஹ்மானை ஓதிய அனுபவம் மறக்க இயலுமா? அதெல்லாம் இன்று இருக்கிறதா என்று தெரியவில்லை.இப்படி துவங்கியது அன்றைய நம் ரமலானின் தலை பிறை.எல்லாம் வல்ல அல்லாஹ் இவ்வருடமும் நோன்பையும் நோன்பு மற்றும் ஐந்து வேலை தொழுகையுடன் நிறைவேற்ற வேண்டிய தராவீஹ், வித்ரு, ஃபித்ரா மற்றும் ஜக்காத் இன்னும் பல எல்லா கடமைகளையும் சரிவர நிறைவேற்ற நம் அனைவருக்கும் உதவி புரிவானாக ஆமீன்.

Share: