Sunday, July 31, 2011

அதிரை பைத்துல்மால் துபை கிளை சிறப்பு அமர்வு தீர்மானங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரை பைத்துல்மால் துபை கிளையின் நிர்வாகிகள் திட்டமிட்டபடி 28-07-2011 அன்று டேரா-கோட்டைப்பள்ளி முதல் மாடியில் இஷா தொழுகைக்குப் பிறகு கலந்து கொண்டனர். பல்வேறு காரணங்களால் வழக்கமாகக்கூடும் பலர், இந்தசிறப்பு அமர்வில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் துபை மற்றும் அஜ்மானிலிருந்து 10பேர் கலந்து கொண்டனர்.

சகோ.ஷபீர் காக்கா அவர்கள் தலைமை ஏற்க, சகோ.S.M.A ஷாகுல் ஹமீது கிராஅத்துடன் ஆலோசனை அமர்வை தொடங்கி வைத்தார். சகோ.ஜமாலுதீன் அதிரை பைத்துல்மால் தலைமையகத்திலிருந்து வந்திருந்த ரமலான் 2010 முதன் 27-07-2011 ஆம்தேதி வரையிலான சேவைகளை வாசித்தார்.

முந்தைய வருடங்களில் பைத்துல்மால் அமர்வுகளில் அதிரையைச் சார்ந்த அமீரகவாசிகள் சுமார் 30-40 பேர்கள் கலந்து கொள்வதுண்டு.சமீபத்திய அமர்வில் துபை கிளை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவுக்கான காரணம் அலசப்பட்டது. பொருளாதார மந்தநிலை மற்றும் வேலை இழப்புகளால் அதிரைவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்ததும்,சென்ற ஆண்டுகளில் தங்குமிட வாடகை உயர்வு காரணமாக புறநகர்களுக்கு இடம்பெயர்ந்ததும் காரணங்கள் என்று தெரியவந்தது. எனினும், சகோ.முஹம்மது ஹுசேன்,சகோ.முஹம்மது சாலிஹ் போன்ற ABM அபிமானிகள் தொலைதூரத்திலிருந்து வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் வழக்கம்போல் இவ்வாண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அதிரை பைத்துல்மாலுக்கான நிதி உதவிகளை ஜகாத்,ஃபித்ரா, ஸதகா வசூல்கள் மூலம் பெற்று அனுப்பி வைப்பது என்றும் துபை மற்றும் சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் பொறுப்புதாரிகளை நியமித்து வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

துபையில் சகோ.S.M.A ஷாகுல் ஹமீது,M.Z.அமீனுத்தீன்,N.ஜமாலுதீன்,அமீர் ஹம்ஸா மற்றும் சகோ.ஜாஃபர் அலி குழுவினர் நமதூர் சகோதரர்களின் தங்குமிடங்களுக்குச் சென்று வசூலிப்பது என்றும், ஷார்ஜாவில் சகோ.ஷபீர் காக்கா மற்றும் அபுதாபியில் சகோ.முஹம்மது யூசுப் ஆகியோரும் பொறுப்பேற்று பைத்துல்மாலுக்கான நிதிகளை வசூலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

பைத்துல்மாலின் கடந்த 18 ஆண்டுகள் சேவைகளை சுற்றறிக்கையாக (NOTICE) பிரிண்ட்செய்து விநியோகிப்பது என்றும், ரமலான்ஃபித்ராவாக UAE திர்ஹம் 20 என்றும் முடிவு செய்யப்பட்டது.

இன்ஷா அல்லாஹ், அதிரை பைத்துல்மாலின் சேவைகளை வெளிநாட்டிலுள்ள அதிரவாசிகளும் பயன்பெறத்தக்க வகையில் குவைத் கிளை அறிமுகப்படுத்தியுள்ளதுபோல் ரெகரிங்க் டெபாசிட் மூலம் வட்டியில்லாக் கடன்களை வேலை தேடிக்கொண்டிருக்கும் அதிரைவாசிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்வது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
ABM செயலர், துபைகிளை
31-07-2011

Saturday, July 30, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார், அம்லா காரணமா ?


ஜோஹன்ஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார். இன்று 22ம் ஆண்டை அடையும் அவர் இஸ்லாத்தை பற்றிய சில கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார். தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும் எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்க நினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன் முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர் முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும் இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லா மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில் தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும் அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும் ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றனர் என்றனர். 2006 ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட் வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்:ஹாபில்:நைனா முஹம்மத் @ரியாத்

சுருக்கமாக ஓர் அகல பாதை அறிக்கை. இது புதுசு.ரயில் சத்தத்தை தவிர மற்ற எல்லாருடைய பேச்சு(பேட்டி) சத்தத்தையும் நம் காதுகள் எப்படியோ கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.. அப்படி கேள்விப்பட்டதையே இங்கு பதிகின்றேன்.. வருமா வராத.. வரும் ஆனால் வராதா என்பதெல்லாம் உங்கள் கற்பனை திறனுக்கே விட்டுவிடுகின்றேன்.. 


பட்ஜெட்டில் அறிவித்த புதிய ரெயில்கள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே துறை இணை அமைச்சர் முனியப்பா கூறினார்.
தஞ்சை ரெயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

Friday, July 29, 2011

நினைவலைகள்: ரேவடியும் குள்ளநரிக் கூட்டமும்


அந்த காலத்தில் உள்ள வீதிகள் மிகவும் அற்புதமாகவும் அழகாகவும் காணப்படும். நமது ஊரால் மறக்க இயலாத இடம் ரயில்வே ஸ்டேஷன். பசுமையான, அமைதியான இடம். படிக்கும் காலங்களில் அங்கே தான் சென்று படிப்பது. எதிரே உப்பளம் மிகவும் குளிர்ச்சியான பகுதி. அப்படியே சற்று நகர்ந்தால் ரேவடி - அதாவது ரயில்வே கேட்டை தாண்டியதும் கடலுக்கு செல்லும் வழியில் முன் பகுதியே அப்பகுதியாகும்.

குதிரை வண்டியின் சலங்கை சத்தம் ஒரு பக்கம், இயற்கை வளங்கள், தாவரங்கள், நீரோடைகள், குளிர்ந்த காற்று ஒரு விதமான நிசப்தம், காதுகளுக்கு இனிமையான பறவைகளின் ஓசைகள், இப்பாதைகளில் ஓடிக்கொண்டு இருக்கும் புகைவண்டியின் சப்தங்கள், உப்பளங்களிருந்து சரக்குகளைச் சுமந்து செல்லும் கழுதைகளின் கூட்டங்கள் மற்றும் லாரிகளும். இவைகளுக்கு இடையில் கடலில் இருந்து நமது மார்க்கெட் நேரத்தை அடைய மீன்களை சுமந்து ஓடிக் கொண்டு இருக்கும் மீனவக் கூட்டங்கள், காதுகளைப் பதம் பார்க்கும் விதமாக கடல் அலை ஓசைகள், இத்தனை இயற்க்கையையும் தாண்டிச் முன்னேறி செல்லும் எங்கள் கூட்டம். மாடுகள் காணப்பட்டதும் வேட்டை…

தாகம் எடுக்க சுற்றிலும் பார்த்தாலும் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும். அதில் ஒரு நண்பருக்கு கண்ணில் பட்டது தென்னந்தோப்பு. தேங்காய் இளநீர் குடிக்கலாம் என திருட முயன்ற நேரத்தில் துரத்தியது நாய்கள் கூட்டம். பயம் மற்றும் பசியில் பிடித்த ஓட்டம் ரயில்வே கேட்டை அடைய கண்ணில் பட்டது ஓர் அழகிய ரோஜா கூட்டம் போல சிவந்த கனிந்த நிலையில் சப்பாத்தி கள்ளிச் செடியில் உள்ள பழம் மிகவும் சுவையாக இருந்தது. நேரம் சென்று கொண்டே இருக்க அழைப்பு ஓசை (மஃரிப் பாங்கு) கேட்க, அதனுடன் ஊடுருவி வருகிறது அதிரை பேரூராட்சியின் மாலை 6 மணி சங்கு ஓசை… வீடு சென்றதும் எங்கள் முதுகிலும் விழுந்தது அடியோசை…

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை உங்கள் தெருவில் ஒரு மாடு, ஆடுகளை காண முடியுமோ!”

குள்ள நரிகள் கூட்டம் சேர என்ன செய்வது என சிந்தனையில் இருக்க, காதில் ஒரு சப்தம். ஆம், புகைவண்டியின் நீண்ட ஒசை. உடனே உருவாகியது தான் ரயில் விளையாட்டு. 50-60 மீட்டர் நீளம் உள்ள கயிறு எடுத்துக் கொண்டு இரண்டு முனைகளையும் இணைத்தால் ரயில் ரெடி. இவ்விளையாட்டால் ஒரே ஓட்டம் தான். உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் சிறந்த உடற் பயிற்சியாகவும் தேனீயாக பறக்கவும் முடிந்தது அந்த வயதில்.

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை இந்த விளையாட்டைப் பற்றி யார் கூறுவர்?

டேய்…. நாளைக்கு பள்ளிக்கூடம் லீவு எங்கே போகலாம்…? ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வருகிறது தொழுகைப் பள்ளிக்கு அருகில் அமைந்து இருக்கும் குளமும் அதன் பின்புறம் அமைந்து இருக்கும் விளையாட்டு மைதானமும். பட்டம் பறக்க விடுவது, எவருடைய பட்டம் மிக உயரத்தில் பறக்கும் என போட்டிகள் நிறைந்த மைதானமாக காட்சி தரும். அன்றைய நாட்களில், அதிகாலை தொடங்கி உச்சி வரை நீடிக்கும் விளையாட்டுப் போட்டிகள் கண் மூடிதனமாக விளையாடப்படும்.

அறியா அந்த பருவத்தில். விளையாட்டு முடிந்து வரும் வழியில் ஜில் எனக் காற்றோடு மிக நீண்ட சுத்தமான வெட்டி குளம். அதில் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும். எருமை மாடுகள் குளத்தில் உள்ள பாசிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கும். மாடோடு மாடாக எங்கள் கூட்டமும் இறங்க - பந்து எரிந்து விளையாடல், நீச்சல் போட்டிகள் என…. அதிகாலை வீட்டை விட்டு வெளியேறிய இப்படை வீட்டை அடைந்ததும் முதலில் உம்மாவிடம் அன்பு சாப்பாடு (அடிதான்). பிறகு தான் வயிற்றுக்கு கிடைக்கும். முடிந்ததும் வேட்டியில் (கைலி) கை-வாய்களை துடைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி மாலை விளையாட்டு தொடக்கம்.

பாவம்! இன்றைய இளைய தலைமுறை இந்த விளையாட்டைப் பற்றி எப்பொழுது அறிவது?

தொடரும்.....

ஆக்கம் :  எம். அக்பர் அலி (அபுதாபி)

பள்ளிவாசல் நிர்வாகிகள் கவனத்திற்கு !

அரசு வழங்கும் அரிசிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு தமிழக அரசு சார்பில் பச்ச அரிசி வழங்கி வருகிறது.

அதற்காக நாடு முழுதும் பள்ளிவாசல்களில் விண்ணப்பங்கள் அளித்துவரும் இவ்வேளையில் இந்த ரிசியை வாங்கக் கூடாது என்றும் ஹராம் என்றும் சிலர் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிகிறது.

இதன் எதிரொலியாக தமிழ்மாநில ஜமா அத்துல் உலமா சபையின் துணைத் தலைவரும் சென்னை மாவட்ட தலைவருமான மன்னடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் தலைமை இமாம் ஒய் எஸ் எம் முஹம்மத் இல்யாஸ் காஸிமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் .


தமிழ் நாடு அரசு ரமலான் மாதம் நோன்பாளிகளுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக வழங்கி வரும் அரிசியில் நோன்புக்கஞ்சி தயாரிக்கலாம். இஸ்லாமிய சட்டப்படி அரசு வழங்கும் இந்த சலுகையினால் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை .

எனவே தமிழ் மாநில பள்ளிவாசல் நிர்வாகிகள் ,முத்தவல்லிகள் , ஜமாஅத்தார்கள் தமிழக அரசு வழங்கும் இந்த சலுகைகளை பெற்று நோன்பாளிகளுக்கு பலனளிக்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்..

இந்த அறிவிப்பு வெளியிடும் பொழுது தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநில தலைவர் ஏ. இ.எம். அப்துல் ரஹ்மான் உடனிருந்தார் .

இந்த அறிவிப்பை முஹல்லா வாசிகள்அந்த அந்த பள்ளி நிர்வாகத்திடம் எடுத்து செல்லவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் -நன்றி
செய்தி: அபு

Thursday, July 28, 2011

தஞ்சையில் ஒரு முன்னுதாரண மருத்துவமனை!

ஞ்சாவூரில் மாதத்துக்கு ஒரு மருத்துவமனை முளைக்கிறது. அடித்தட்டு மக்களுக்கு இவற்றால் பயன் ஏதும் இல்லை. தஞ்சாவூர் எல்லையில் துலுக்கம்பட்டி கிராமத்தில் அடித்தட்டு மக்களுக்காகச் செயல்படுகிறது 'தஞ்சாவூர் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்’. சோழ மண்டலத்தில் புற்று நோய்க்கான ஒரே தனி மருத்துவமனை இது. இந்த மருத்துவமனை, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரின் கூட்டு முயற்சி!

''தஞ்சாவூர்தான் எங்களுக்கு அடையாளம் தந்தது. இந்த ஊருக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று எங்களுக்குள் எழுந்த கேள்விக்குப் பதில்தான் இந்த மருத்துவமனை! 2007-ல் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 'ஜீவா நூற்றாண்டு அறக்கட்டளை’யை உருவாக்கினோம். முதலில் மருத்துவர்கள் வெ.ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், மைக்கேல், அப்துல் ஹக்கீம், கௌசல்யா ராணி, கூத்தபெருமாள் எனத் தொடங்கிய இந்த வட்டம், கொஞ்சம் கொஞ்சமாக தஞ்சை ராமமூர்த்தி, தமிழறிஞர் சிவகாமசுந்தரி என்று விரிந்து, இப்போது 120 பேர் இதன் உறுப்பினர்கள். இவர்களுடன் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கமும் கதர் கிராமத் தொழில் வாரிய ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கமும் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள்.


புற்றுநோயின் தாக்கம் கணிசமாக இருக்கும் இந்த மாவட்டங்களில் புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் இல்லை. பயணச் செலவு, அலைச்சல்... எல்லாவற்றையும் தாண்டி நல்ல சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொடுக்க வேண்டிய விலையும் அதிகம். புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தை நாங்கள் இங்கு தொடங்க இதுதான் காரணம். எங்கள் மருத்துவமனையில் கட்டணம் குறைவு. மருந்துகள் அடக்க விலைக்கே விற்கப்படுகின்றன. தவிர, பொருளாதார ரீதியாக மிகவும் கீழ் நிலையில் இருப்பவர்களுக்கான மருத்துவச் செலவில் சரிபாதியை அறக்கட்டளையே ஏற்கிறது'' என்கிறார் மருத்துவமனை நிர்வாகிகளில் ஒருவரான டாக்டர் மருதுதுரை.

''கழுத்துகிட்ட சின்னதா ஒரு கட்டி வந்துச்சு. உள்ளூர் டாக்டர்கிட்ட காட்டினப்ப, கேன்சர்னு சொல்லி இங்கே அனுப்புனாங்க. என் வாழ்க்கையே போச்சுனுதான் நினைச்சேன். ஆனா, இப்ப கம்மியான செலவுல நல்லபடியா ஆபரேஷன் பண்ணிட்டாங்க. மருந்துக்கான செலவுல பாதிக்கு மேல அறக்கட்டளை மூலமா கட்டிட்டாங்க. இங்க இருக்கிற எல்லோருக்கும் நன்றிக் கடன்பட்டு இருக்கேன் தம்பி'' என்கிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அம்மாப் பேட்டையைச் சேர்ந்த மாரியப்பன்.


நன்றி

என் விகடன்நினைவலைகள்: மாட்டு வண்டியும் நொங்கு வண்டியும்....!


மாட்டு வண்டியும் நொங்கு வண்டியும்....!
"சார் இவ்வுலகம் முழுவதும் ஒரு நாள் மட்டும் மின்சாரம் இயங்காவிட்டால் உலகின் நிலை எவ்வாறு இருக்கும்" என ஒரு விஞ்ஞானியிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இந்த உலகம் அப்படியே 1980-க்கு கீழே சென்று விடும். அதாவது 1980-ல் இவ்வளவு அறிவியல் வளர்ச்சி அடையவில்லை மற்றும் இன்று நாம் அனுபவிக்கும் வசதி வாய்ப்புகள் இல்லை என்று அந்த விஞ்ஞானி கூறினார். உண்மை தான்……..

சற்று அந்த பசுமையான நினைவலைகளை என் மனம் அலசியது…

ஆம் 20-22 வருடங்களுக்கு மேல் இருக்கும்….. 

மாட்டுவண்டிகள் அதிகமாக பயன்படுத்திய காலம் அது. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முதல் இரவே சிறு தேய்காய் குறும்பையின் முகத்தைச் சீவி எடுத்துவிட்டு வெண்மையான பகுதியில் வண்டியின் சக்கரத்தில் உள்ள மையை எடுத்து நண்பர்களின் முகம், உடல் முழுதும் நாசப்படுத்துவது அல்லது மற்ற வண்ணச் சாயங்களை எடுத்து தெளிப்பது, சில பெரிய மனிதர்களிடம் வாங்கிக்கொள்வது (அடி, உதை தான்) அந்த இனிமையான கடந்த காலம் மீண்டும் என்னிடம் வருமோ!

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகள் இதைப்பற்றி அறிய வாய்ப்பு இல்லை!

நமது பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என எங்கள் தெருவில் பெண்களுக்காகவே ஒரு மார்க்கெட் உருவாக்கினார்கள் நமது பெரியோர்கள். இன்றும் அல்லாஹ் உதவியால் இந்த மார்கெட்டுக்கு அதிரையைச் சுற்றி உள்ள கிராமத்தில் இருந்து உணவு பொருட்கள் மற்றும் தாணியங்களும் விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். சிறந்த பழமையான சந்தைகளில் ஒன்று என்றும் அதைச் சொல்லலாம்.

நொங்கு சீசன் வந்துவிட்டால், கிராமவாசிகள் வண்டி வண்டியாக நொங்குகளை அள்ளி வருவர். விற்பனை அமோகம். அதுவும் குளிர்ச்சியான திரவப் பொருள். யாராவது நொங்கு சாப்பிட்டுவிட்டு கீழே போட மாட்டார்களா என குரங்குக் கூட்டம் போல காத்து இருப்போம். எங்களுக்கு தேவை வெறும் குறும்பை இரண்டு தான். இதற்கு மத்தியில் ஒரு குச்சியைப் பொருத்தி, வாகனமாக உருவாக்கி, இதை இயக்க நீண்ட ஒரு குச்சியை பயன்படுத்தி இயக்குவோம். தெரு முழுவதும் உல்லாசப் பயணம் தான். இவை மட்டும் இல்லாமல் மாட்டுவண்டி போட்டி போல எங்கள் மத்தியிலும் போட்டிகள். என் மனம் குளிர்ந்து முடிந்துபோன அந்த வசந்த காலம் என்னிம் மீண்டும் வருமோ!

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை இதைப்பற்றி அறியுமோ!

என் இனிய விளையாட்டு முடிந்த கையோடு அடுத்த வரவு மண்பாண்டங்கள். பெண்கள் மார்கெட்டுக்கு வண்டி, வண்டியாக மண்ணில் தயாரித்த வீட்டு உபயோகத்திற்குரிய சட்டி, பானை மற்றும் இதர சாமான்கள். (சமையல் பாத்திரங்கள்) மண் பானையில் உள்ள குடிநீரை அருந்துவது ஒரு சுவைதான். இன்று கிடைக்குமா? குளிர் நீர் கிடைக்கும். ஆனால் சுவை நீர்? இவையில்லாமல் சிறுவர்களுக்கு என மண்ணில் செய்த விளையாட்டுப் பாத்திரங்களும் அடங்கும். அறியாப் பருவத்தில் விளையாடிய அந்த காலம்?

பாவம்! இன்றைய இளைய தலைமுறைகளை அந்த விளையாட்டு பொருட்களை நீங்கள் காண முடியுமோ!

விளையாடிய சோர்வு முடிவடைவதற்குள் நாக்குக்கு ருசியாக, இனிப்பாக கரும்பு சீசன் பல்லும் உடைகிறது! சுவையில் நாக்கும் மூழ்கிக் கொண்டே இருக்கின்றது. பொங்கள் நாளில் மாடுகளுக்கு கொம்பில் வர்ணம் பூசி, சில மாடுகளுக்கு கொம்பில் பணத்தை கட்டி விடுவார்கள். அதை அபகரித்துக் கொள்ள எங்கள் சிறுவர் கொள்ளைக் கூட்டம் கூடும். நீண்ட கம்பின் முனையில் கூர்மையான ஒரு சாதனத்தை பொருத்தி மாடுகள் இருக்கும் இடத்தை தேடியவனாக….

தொடரும்....

ஆக்கம் :  எம். அக்பர் அலி (அபுதாபி)

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும். நமதூர் புதுத்தெரு (தெற்கு) மர்ஹூம்.அப்துல் மஜீத் அவர்களுடைய மனைவியும், முஹம்மது இக்பால், அப்துல் ஜப்பார், அஹமது அன்வர், ஃபைசல் அஹமது (துபாய்),அப்துல் ஹாதி (குவைத்) ஆகியோரது தாயாருமான ஜொஹரா அம்மாள் அவர்கள் இன்று 28-07-2011 (வியாழன்)  காலை  11:30 மணியளவில் வஃபாத் ஆகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள். அல்குர்ஆன் 21:35  


நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம் அன்றியும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வர வேண்டியிருக்கிறது. அல்குர்ஆன் 50:43
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ளும் பொறுமையை அன்னாரது குடும்பத்தாருக்கு வழங்குவானாக. ஆமீன்
.

புதுப்பள்ளி - புதுமைகளின் பள்ளி! (Part-4)


யாருக்குத்தான் தாய்வீட்டுப் பெருமையைச் சொல்லக் கசக்கும்? நமதூர் வழக்கப்படி என்புகுந்த(வீட்டு) முஹல்லா பள்ளி செக்கடிப்பள்ளி மற்றும் சித்தீக் பள்ளிகளாக இருந்தாலும், புதுப்பள்ளியில் தொழுவதுதான் ஆத்ம திருப்தி!?!. என்னதான் காற்றோட்டமான சூழலில் செக்கடிப்பள்ளி இருந்தாலும் பரிச்சயமான முகங்களும்,உரிமையுடன் நலன் விசாரிக்கும் உறவுகளும் புதுப்பள்ளியில்தான் எனக்கதிகம் என்பதாலோ என்னவோ இந்தப்பள்ளிமீது தீராக் காதல்!

அதிரையின் பெரும்பாலான பள்ளிகள் அந்தந்த பகுதி கமிட்டி உறுப்பினர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. ஆனால் புதுப்பள்ளியோ உலமாக்களின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களுடன் நிர்வகிக்கப்பட்டது.(இதேபோல் நிர்வகிக்கப்பட்ட மற்றொரு பள்ளி மரைக்கா பள்ளி என்று நினைக்கிறேன்)

நீண்ட நெடுங்காலமாக புதுப்பள்ளிக்கு தொழில்முறை இமாம் இல்லாமலேயே பள்ளி இயங்கியது.பெரும்பாலும் மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் (அப்பா) அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களே இமாமாக இருந்து தொழுகை நடத்தி வந்தனர். எனக்குத் தெரிந்து ஏறத்தாழ 3-4 தலைமுறைகளாக குடும்பத்திலிருந்து குறைந்தது ஒரு ஆலிமாவது உருவாகும் குடும்பம் அனேகமாக அபூபக்கர் ஆலிம் அவர்களின் குடும்பமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்! முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களுக்குப்பிறகு அவர்களின் மூத்த மகன் முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் அதிரை மட்டுமின்றி இலங்கையிலும் பிரபலம்.


அதிரை மட்டுமின்றி அண்மை ஊர்களிலிருந்தும் 'பத்வா' விளக்கம் பெற மக்கள் வந்தபடியிருப்பர். (மர்ஹும் முஹம்மது அபுபக்கர் ஆலிம் அவர்கள் இலங்கையிலும் பிரபலமானவர்களாயிருந்தனர். நமதூருக்கு தெற்கத்திப் பட்டினங்களிலிருந்து பலரும் கொழும்பு சபுராளிகளாயிருந்தபடியால் அவர்களுக்கும் அபூபக்கர்ஆலிம் அவர்களை நன்கு பரிச்சயம் இருந்தது.)

ஒரு சமயம் புதுப்பள்ளியில் முஅத்தினாக இருந்தவர்,பள்ளி வளாகத்தில் பல்வேறு பூச்செடிகளையும் அழகுச் செடிகளையும் உருவாக்கி ஒரு பூங்கா போல் உருவாக்கி வைத்திருந்தார். தினமும் நீரிரைத்து,களை/கிளைகளை நீக்கி அழகு படுத்துவார்.சிலகாலம் வெளியூரில் பணியாற்றிவிட்டுவந்த மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்கள் 'பள்ளியின் நிர்வாக நிதியிலிருந்து அத்தியாவசியமானவற்றிற்கு செலவழிக்க வேண்டுமேயொழிய இதுபோன்ற ஆடம்பர/அழகு வேலைகளுக்கு வக்ஃப் செய்யப்பட்ட பள்ளியின் நீரையும் மின்சார மோட்டாரையும் பயண்படுத்துவது தேவையற்றதும் வீணானதும் ஆகும்' என்று கண்டிக்கவே அந்த செடிகொடிகள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டு பலன் தரும் தென்னங்கன்றுகள் நடப்பட்டன.

இன்று இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி இடம்பெரும் இஸ்லாமிய சட்ட விளக்க விவாத நிகழ்ச்சிகளை வீட்டுக்கூரைகளில் 'டிஷ் ஆன்டெனா' முளைக்க பல ஆண்டுகளுக்கு முன்பே முஹம்மது அலிய் ஆலிம் அவர்கள் புதுப்பள்ளி வளாகத்தில் நடத்துவார்கள்.ஒவ்வொரு நாளும் இஷாவுக்குப்பின் அந்த மஜ்லிஸில் பல்வேற விசயங்களைப்பற்றிய 'பிக்ஹ்' விளக்கங்கள் எளிமையாக விவாதிக்கப்பட்டு விளக்கப்படும்.திருமணம் ஆன புதுமாப்பிள்ளைகளுக்கு மார்க்க ரீதியிலான பாலியல் விளக்கங்கள் தேவைப்படுவோருக்கு தனியாகவும் நடந்தது! ;)

புதுப்பள்ளி நிர்வாகத்தில் மிகமுக்கிய பங்காற்றிய மர்ஹும் A.S.M.ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் மற்றும் அ.மு.க. உதுமான் மரைக்காயர் குறிப்பிடத்தக்கவர்கள்.சட்ட ரீதியிலான குடும்ப, சிவில் பிரச்சினைகளுக்கு இவர்களின் பஞ்சாயத்துகள் பெரும்பாலும் உலமாக்களின் வழிகாட்டுதலோடு இருந்தது. மரைக்காயர் பள்ளி உயர்நீதிமன்றம் என்றால் புதுப்பள்ளி அதிரைக்கு உச்சநீதி மன்றம்! என்று சொல்லுமளவு மார்க்கமும் சட்டமும் பின்னிப்பிணைந்த பஞ்சாயத்தாக புதுப்பள்ளி பஞ்சாயத்து விளங்கியது.

ரமழான்மாத இரவுகளில் தராவிஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஹிஸ்பு பயிற்சி நடத்தப்பட்டு, தேனீர் மற்றும் நார்சாவும் வழங்கப்படும். பின்னிரவில் ஹிஸ்பு முடிந்து வீடுதிரும்பும்போது சில இளைஞர்களின் சேட்டைகளால் மாற்று மதத்தவருடன் உரசல்கள் எழுந்ததால், அத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க தராவீஹ் தொழுகைக்குப்பின் நடந்து வந்த ஹிஜ்பை அஸருக்குப் பிறகு மாற்றிவைத்து ரமலான் இரவுகளில் அமைதி ஏற்பட முன்மாதிரியாகத் திகழ்ந்தது புதுப்பள்ளியே.


-தொடரும்-

முன் மாதிரி வார்டு உறுப்பினர்

அலோ.... யாரு செய்யதாக்காவா? நாங்க இன்னாரு பேசுறேன் .

ம்ம் சொல்லுங்க ராத்தா.. 

அதாவது எங்கூட்டு கூப்பனுக்கு எதுவும் தர மாட்டேங்கிரானுவோ கேட்டாக்கா பட்டுகோட்ட தாசில்தார பாக்க சொல்லுரானுவோ எனக்கு யார தெர்யும் வாப்பா இந்த கூப்ன கூட நீதான் எடுத்து தந்தா .
சரி ராத்தா நான் இப்போ பஞ்சாயத்து போர்டு கூட்டத்து இருக்கேன் சாயங்காலம் உங்க ஊட்டுக்கு  வர்றேன்.

இப்படி ஏராளமான பணிகளை செய்யும் 12வது வார்டு உறுப்பினர் நூர்லாட்ஜ் செய்யதாக்காவை இப்பகுதி மக்கள் மறக்கவே மாட்டார்கள்.


அந்த அளவிற்கு இவர் ஏராளமான மக்களின் பிரச்சனைகளை ஓயாது செய்து கொண்டு  இன்று 12வது வார்டுமக்களின் நட்ச்சத்திர உறுப்பினராக மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார் என்றால் மிகையாகாது .

மக்களின் அன்றாட பிரச்சனையான சுகாதாரம் , குடிநீர் ,கழிவு நீர் வடிகால்  , தெருவிளக்கு ,அரசால் வழங்கபடும் சலுகைகள் வாக்காளர் பெயர் சேர்த்தல் / நீக்கம்,  பிறப்பு  /இறப்பு சான்று, குடும்ப அட்டை விண்ணப்பித்தல்  /புதுபித்தல்,
சாலைவசதி உள்ளிட்ட ஏராளமான மக்கள் பிரச்சனைகளை தானாக முன்வந்து பெற்று தர போராடி வருகிறார் .

சமிபத்தில்12வது வார்டில்  உள்ள நுகர் பொருள் வழங்கும் கடையை சேது சாலைக்கு மாற்ற உத்தரவிட்ட பட்டுகோட்டை தாசிலதாரை அணுகி இந்த கடையை அகற்ற கூடாது என வாதிட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் அதே வார்டில் கடையமைக்க போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த கடை மாற்றத்தால் ஏராளமான மக்கள் நுகர் பொருளை வாங்க சிரமபட்டதில் என் வீட்டாரும் அடங்குவர் .
தற்பொழுது அனைவரும் நிம்மதியாக நுகர் பொருள் வாங்க வித்திட்டார் .

இவரின் இது போன்ற மகத்தான சேவைகளை  மக்கள் என்றென்றும்  மறக்க மாட்டார்கள் என்பது ஐயமில்லை  !

இது போன்ற உங்கள் வார்டு முன் மாதிரி உறுப்பினர்களை பற்றிய உங்களின் ஆக்கங்களை அதிரை எக்ஸ்பிரசில் பதிந்து கொள்ளலாமே.

Wednesday, July 27, 2011

அதிரை பைத்துல்மால் (துபை கிளை) அறிவிப்பு


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் அதிரை பைத்துல்மால் துபை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ரமலான் சிறப்பு ஆலோசனை அமர்வு, துபை-டேராவிலுள்ள கோட்டைப்பள்ளி முதல் மாடியில் இன்ஷா அல்லாஹ் இஷா தொழுகைக்குப்பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரம்  : இஷா தொழுகைக்குப் பிறகு

நாள்  : 28-07-2011 / வியாழன்

இடம்  : கோட்டைப்பள்ளி, துபை-டேரா

தொடர்புக்கு : 050-4737200, 055-5188249


துபை மற்றும் அருகிலுள்ள அதிரைவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அதிரை பைத்துல்மால் துபை கிளை நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்,

ABM-துபை கிளை செயலர்

24-07-2011


அதிரையில் தீ விபத்து !


5 லட்ச்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் !

நமதூர் கடற்கரை தெருவை சேர்ந்தவர் காதர் முகைதீன் (42). சென்னையில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவுஜியா அம்மாள் அவர்கள் அதே தெருவில் குடியிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு நேற்று காலை சென்றார்.

இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது வீடு தீடிரென வீடு தீப்பிடித்து எரிந்தது.
இதில் 15 பவுன் நகை ரொக்க பணம் ரூ. 55 ஆயிரம், வாசிங் மிஷின், கிரைண்டர், தொலைக்காட்ச்சி பெட்டி ,இரண்டு கம்ப்யூட்டர்கள் என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இதனை பொதுமக்கள் தண்ணிர் , மணலை கொண்டு அணைக்க முயன்றனர் தீ மள மள வென பரவியதால் அதிக பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக நமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீ யணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து(?) வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

ஆட்கள் தேவை !

துபையில் உள்ள பிரபல கூரியர் நிறுவனத்துக்கு பைக் மெசஞ்சர் 30 நபர்கள் தேவை உடனடி பயணம் தங்குமிடம் இலவசம் உள்ளிட்ட சலுகைகளை மேற்கண்ட நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்த நிறுவனத்திற்கான ஆட்கள் நேர்முக தேர்வு கூடிய விரைவில் சென்னையில் நடை பெற இருப்பதாக MJ ட்ராவல்ஸ் உரிமையாளர் தெரிவித்தார்

பல்வேறு நாடுகளுக்கு பணியாட்களை அனுப்பும் உரிமத்தை மத்திய அரசால் பெறப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் MJ ட்ராவல்ஸ் எனும் இந் நிறுவம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது .

மேலதிக விபரங்களுக்கு ...
செல்லிடப்பேசி :9894555982 ,9551310938 ,தொலைப்பேசி எண்: 04373 242728

**நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நீங்களே அறிந்து கொள்ள வேண்டும் **

மரண அறிவிப்பு.

ஆஸ்பத்திரி தெரு, ஆய்ஷா ராத்தா 
ஆஸ்பத்திரி தெரிவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிம் அவர்கள் மனைவியும் ஏரோ வேல்ட் ட்ராவல்ஸ், அப்துல் வாஹித், மொஹிதீன், அன்சாரி , யூசுப்  ஆகியோரின் தாயார் மற்றும், மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா ராத்தா நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள. 


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

அன்னாரது ஜனாஸா இன்று (27-07-2011-புதன்) காலை நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டது.

ஒரு கடையநல்லூர்வாசியின் கண்ணீர், கதை அல்ல நிஜம்

1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள் .வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது .ஏனென்றால் எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் ,என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் .எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து ,பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .

சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் .மனம் படபடத்தது.அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் .இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் .அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -ஐ பார்க்க சென்றோம்.காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் .நாளை காலை உனக்கு பிளைட் என்றார் .நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம்.

காலையும்,மதியமும் சாப்பிடவில்லை .கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற ,வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன்.இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் .என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .

மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் .வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா .நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது .இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது .காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் .எனக்கு வாய்த்த அரபியோ ஒரு நல்லவர் எனக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் செய்து கொடுத்தார் .எனக்கு வேலை மளிகை கடை போன்ற ஒரு கடையில் .இங்கு இதை பக்கால என்பார்கள் .

நான் ஊரிலிருது வரும்போது எனக்கு மூன்று பெண் குழந்தைகள் .நான் இங்கு வருகின்ற சமயத்தில் தென்காசி சென்று என் குடும்பத்தாருடன் எடுத்த கருப்பு வெள்ளை போட்டோவை என் கையோடு கொண்டு வந்தேன் .இரவு வேலை முடிந்து வந்தவுடன் என் குடும்பத்தாருடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தேன் என் கண்களில் மளமளவென கண்ணீர் வழிந்தது .யாரும் இல்லாத ரூமில் நான் சப்தமிட்டு அழுதேன் .என்னையே பிரமிக்க வைத்தது .அன்று கலங்கிய கண்கள் சிறுது காலங்களுக்கு பிறகு நான் நாடு போய்வந்த பின்பு எனக்கு மீண்டும் இரண்டு குழந்தைகள் பிறந்தன அதில் ஒன்று ஆண்மகன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .

இத்தனை காலங்கள் நான் இங்கு கழித்து நான் தேடிய செல்வங்களில் என்னுடைய அனைத்து பெண் குழந்தைகளை சிறப்பாக வாழக்கூடிய அளவுக்கு அவர்களுக்கு நல்ல கணவர் அமைத்து கொடுத்தேன் .என் மகனையும் பட்ட படிப்பு படிக்க வைத்தேன் .ஆனாலும் எனக்கு இன்னும் சுமை குறையவில்லை .என் மகன் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்தேன் .அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் சுட்ரிதிரிவதாக என் மனைவி என்னிடம் கூறினாள்.காலங்கள் கடந்தால் எனக்கு கை கொடுப்பான் என நினைத்திருந்த என் மகனும் கை கொடுக்கவில்லை .தயவுசெய்து என் மகனை போன்று எந்த ஆண்மகனும் இருந்துவிடாதீர்கள் .

இப்போது சவூதி அரேபியா 6-ஆண்டுகளுக்கு அதிகமாக இருப்பவர்கள் ஊர் திரும்பவேண்டும் என்று ஓர் உத்தரவு பிறப்பித்தவுடன் எப்படி வெளிநாடு வேண்டாம் என ஓடி ஒழிந்தேன் அன்று இருந்த மனநிலை போன்று இன்றும் எனக்கு இருக்கிறது .காரணம் என்று பார்த்தால் சேமிப்பு இல்லாத வாழ்க்கை .தற்போது நமதூர் நண்பர்கள் ஊருக்கு போய் வரும்போது பிற நண்பர்களிடம் தன்னை பெருமையடிதுக்கொள்வதை பார்த்திருக்கிறேன் ,எப்படி என்றால் நான் லீவில் 50 ஆயிரம் செலவு செய்தேன் ஒரு லட்சம் செலவு செய்தேன் என்று சொல்கிறார்கள் .ரிஸ்க் என்பது ஒரு குறிப்பிட்ட காலங்களில் தான் வரும் நாம் அதை சரிவர பயன்படுதிக்கொள்ளவில்லை என்றால் அல்லாஹ் அதன் பரக்கத்தை நிறுத்திவிடுவான் .முறையான திட்டமிதுதல் இல்லாமல் இனி வரும் காலங்களில் என்னை போன்று இருக்காமல் முறையாக திட்டமிட்டு உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் அமைத்துக்கொள்ளுங்கள்.

அன்பான சகோதரர்களே ,நண்பர்களே இது என்னுடைய வாழ்கையில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு ,இதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் .மேலும் என்னுடைய ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களுடைய வரவுகளையும் ,செலவுகளையும் முறையாக திட்டமிட்டு எதிர்கால வாழ்க்கைக்காக சேமிப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் .

அல்லாஹ் உங்கள் குடும்பத்திற்கும் ,என் குடும்பத்திற்கும் நல் அருள் புரிவானாக ! ஆமீன் .


இப்படிக்கு

கண்ணீரோடு …!
நானும் ஒரு கடையநல்லூர்வாசி

மின்னஞ்சல் வழி வந்து மனதை உருக்கியது

டீவிரவாதி தெரியுமா?

தினமலர் தீவிரவாதிகள் விசயத்தில் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சம் காட்டும் என்பதற்கு இன்றைய செய்தி இன்னொரு சாம்பிள்! தினமலர் செய்தியை அப்படியே படித்துவிட்டு தலைப்பை மீண்டும் ஒருமுறை சத்தம்போட்டு சொல்லுங்க.திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீமாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடிகுண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.தினமலர்

எனக்கு என்ன வருத்தம் என்றால் பெரும் பொருட்சேதமும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்திருந்த ராமகிருஷ்ணனை ஒரு இடத்தில்கூட தீவிரவாதி என்றோ அல்லது அவரது மதத்தையும் சேர்த்து __ தீவிரவாதி என்றோ செய்தி வெளியிடவில்லை.

தீவிரவாதம், தீவிரவாதி என்பதற்கெல்லாம் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் என்ன அளவீடு வைத்துள்ளன? டீவிரவாதி என்றாவது குறிப்பிட்டிருக்கலாமே!

தவறைச் செய்யாதீர்கள்... பெண்களே!

முதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம்(?). ஆனால் பெண்கள் செய்யக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என்று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமுதாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாமல் போய்விடுகிறது . ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பலபிரச்சனைகள் எழும்.

உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம்(?) இதை இந்த சமுதாயம் பெரிதாக எடுத்துகொள்வது இல்லை . இதனால் தவறு இளைத்தவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இதனால் அவளும் அவளது குடும்பமும் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்

இதேப்போல, திருமணத்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு வைத்துகொண்டால் அது அந்த பெண்ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.

ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம்(?). அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சமுதாயத்தில் சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய்விட்டாள் என்று கூறுவார்கள்.

இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால் ஏற்படும் அவமானமே அவர்களை நிலைகுலையச் செய்துவிடும். உற்றார், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற்றோரின் நிலையை காணும் பொழுது மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது .

பெற்றோர்கள் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் மனநிலை பாதித்து மருத்துவமனை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்றுவிடுவதும். தந்தை இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.

உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர்களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடியுமா? கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.

இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற்கு திருமணமாகாத சகோதரிகள் இருப்பின் இவர்களின் எதிர்காலமும் பாதிக்கபடுவது நிச்சயம்,இதனால் அவர்களது வாழ்க்கை இன்னும் மோசமாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய்வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்களும் உண்டு.

சமுதாயத்தின் ஆணி வேரே நீங்கள் தான் ( பெண்தான்). இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் பாதித்தாலும் அதனால் பாதிக்கப்படுவது முழு மரமும்தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் நீங்கள் செய்யும் இந்த தவறால் இன்று உங்கள் குடும்பம் என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்து கொண்டுள்ளார்கள் என்பதை தயவு செய்து சிந்தித்து செயல் பட வேண்டும் .

இஸ்லாம் நமக்கு காட்டித்தந்த வழிமுறை படி வாழ்ந்தால் வழிதவறேல் இருக்காது !

நன்றி :அப்துல்வகாப்


Tuesday, July 26, 2011

அல் அமீன் பள்ளி நிர்வாகிகளின் கோரிக்கை மற்றும் அறிவிப்பு!

உலகெங்கும் உள்ள அதிரைவாசிகளுக்கு அல் அமீன் பள்ளி நிர்வாகிகள் எழுதியுள்ள கோரிக்கை மடல் மற்றும் வரவு செலவுக் கணக்கு விபரங்கள்...
இந்தியன் டீயும் இனிப்பு போண்டாவும்!!

அதிரையை சார்ந்தவர்கள் சென்னை மண்ணடியில் கால்பதிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை அவர்கள் அன்றாடம் வேலைநிமித்தமாகவோ அல்லது விசா வேலையாகவோ மெட்ராஸ்க்கு அடிக்கடி வர நேரிடும் .

செக்கடி மேட்டில்லிருந்து ஏறியதும் விடியற்காலை பொழுதில் மன்னடி வந்து இறங்கும் நம் மக்களுக்கு வரபிரசாதமாய் கிடைப்பது தான் இந்த இந்தியன் (இஞ்சி டீ) இனிப்பு போண்டாவும் பஸ்ஸ உட்டு இறங்கியதும் நேரா மஜ்பா லாட்ஜ் கீழே உள்ள இந்த இந்தியன் டீகடையில் போய் ஒரு டீயும் போண்டாவும் உள்ளே தள்ளிய உடனே தான் நம்மில் பலருக்கு உசுரே வரும்

அப்படி இந்த இந்தியன் டீயில் என்னதான் இருக்கிறது ?வாங்க அந்த கடையின் முதலாளியை கேட்ப்போம்..
ஸலாத்துடன் உள்ளே நுழைந்த நம்மை பார்த்து டேய் தம்பி இங்கே ரெண்டு டீயை குடுடா என்று பணியாளை கூவினார்... வழக்கம் போல் நாமும் அந்த டீயை ருசித்து கொண்டே கரீம்பாய் (கடையின் ஓனர்) யிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம் இந்த டீ மற்றும் போண்டாவின் ருசிக்கு என்ன கரானம்ன்னு கேட்டோம் ...

நாம் : காக்கா உங்க கடை டீ மட்டும் எப்போவுமே ஒரே மாதிரியான சுவையா இருக்குதே என்ன காரணம்?

கரீம் பாய் : அதாவது நாங்க எங்க வாப்பா காலத்துல இருந்து இந்த கடைய நடத்திக்கிட்டுவர்றோம். எங்க வாப்பா டீக்கு பசும்பாலும் நயமான இஞ்சியும் பாவிச்சு சுவையா கொடுப்பாங்க அந்த காலத்துலேயே நல்ல யாவாரம் அதுக்கப்புறம் அவங்களுக்கு வயசானதாலே இந்த தொழிலை எங்க கிட்ட ஒப்படைச்சாங்க இத நாங்க நல்ல முறையில நடத்திகிட்டு வர்றோம்

இன்னமும் நாங்க பசும் பாலுதான் யூஸ் பண்ணுறோம் அதனால எங்க கடை டீக்கு என்னைக்குமே கிராக்கி இருக்கு பசும் பால காய்ச்சு அதிலிருந்து எடுக்கும் பாலாடையை இனிப்பு போண்டாவுக்கு யூஸ் பண்ணுறது நால அதுவும் ரொம்ப ருசியா இருக்கும்

நாங்க அதிக லாபம் எதிர் பாக்குறது இல்ல உழைக்கிற உழைப்புக்கு அந்த அல்லா நமக்கு பரக்கத்த தர்றான் .இந்த கடைய நான் பாத்துகுர்றேன் ஜோன்ஸ் தெரு கடைய என் தம்பி மொவன் பாத்துகுர்றான் ... என்றவாறே அந்த கடையில் இருக்கும் எச்சில் கிளாஸ்களை எடுத்து கொண்டு சுத்தம் செய்ய உள்ளே சென்று விட்டார் .

இந்த கடையில் எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும் காலையில் சூடான இனிப்பு போண்டாவும் கீரை போண்டாவுக்கு மவுசு ஜாஸ்த்தி!

சுபுகு தொழுத வுடன் நம்ம ஊரு மக்களை இந்த டீ கடையில காணலாம். அதே போல் இலங்கை சுற்றுலா ,வியாபார பயணிகளையும்
விட்டு வைக்க வில்லை இந்த இந்தியன்...

சந்திப்பு :JP

புதுப்பள்ளி - புதுமைகளின் பள்ளி! (Part-3)

மார்க்க அடிப்படைகள ஓரளவு தெளிவெபெற்ற தர்பியத்துல் இஸ்லாமிய்யா மாணவர்கள், சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டு HIYA என்ற அமைப்பை உருவாக்கி, ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே முஹல்லாவில் செயல்பட்டுவந்த 'சமுதாய நலமன்ற'த்தின் சேவைகளைத் தொடர்ந்தனர். ஹியாவின் துவக்கம் மர்ஹூம் அலிய் ஆலிம் அவர்களின் துஆ மற்றும் வழிகாட்டுதலுடன் நடந்தது. ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சேவைகளில் சில....


நமது பெண்களில் சிலர் ஷிஃபா அருகிலுள்ள வெள்ளக்குளத்தில் குளிக்கின்றனர். பஸ்ஸில் சென்று வருபவர்கள் அவர்களை வேடிக்கை பார்க்கின்றனர் என்பதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, கருச்சமணி குளத்தின் பெண்கள் கரையைத் தூய்மைப்படுத்தி, பெண்கள் அங்கு குளிக்க ஏற்பாடு செய்தனர்.


சிறுநீர் கழித்துவிட்டு, நீரைக் கொண்டு சுத்தம் செய்ய இயலாத நோயாளிகளைக் கருத்தில் கொண்டு, டேலா கட்டிகளைச் செய்து, அதிரையின் பல பள்ளிகளுக்கும் சப்ளை செய்தனர்.


விருந்து நடைபெறும் வீடுகளில், விருந்து பரிமாற ஆண்கள் இல்லை எனில், ஹியாவைத் தொடர்பு கொண்டால், அவர்கள் பரிமாறும் பணியை மேற்கொண்டனர். ஹியாவின் இந்தச்சேவை முஹல்லா கடந்தும் வரவேற்பைப் பெற்றது. புதுமனைத்தெரு முஹல்லா விருந்துகளில் ஹியா இளைஞர்கள் சஹன் பரிமாற அழைக்கப்பட்டனர்!

மாதந்தோறும் பெண்களுக்காக தெரு பயான் ஆஸ்பத்திரி தெரு - தட்டாரத் தெரு சந்திப்பில் நடைபெறும். நமதூர் ஆலிம்கள் மட்டுமின்றி,மர்ஹூம் அய்யம்பேட்டை ஜியாவுத்தீன் ஹஜ்ரத்,கம்பம் பீர் முஹம்மது ஹஜ்ரத்உள்ளிட்ட சிறப்புப் பேச்சாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாதத்தில் ஒரு நாள் புதுப்பள்ளிவாசலை முழுமையாகக் கழுவி தூய்மைப் படுத்தினர்.

ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் சேவையைக் கண்டு, செக்கடிப் பள்ளியில் நூருல் இஸ்லாம் வெல்ஃபேர் அசோசியேஷன் (நிவா) என்ற பெயரிலும் மேலத்தெருவில் தாஜுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு என்ற பெயரிலும் புதிய இளைஞர் அமைப்புகள் தோன்றியமை குறிப்பிடத் தக்கது.(நெடிய பாரம்பர்யம் கொண்ட மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம், ஹியாவின் சேவைகளால் கவரப்பட்டு புத்துணர்வூட்டப்பட்டது என்று நினைக்கிறேன்)


தினமும் சுபுஹுக்குப்பின் தெருத்தெருவாக சென்று கழிவுநீர் அடைப்பு மற்றும் உடைப்புவிபரங்களையும் குப்பை நிறைந்துள்ள பகுதிகளையும் விவரமாக சேகரித்து எழுதி பஞ்சாயத்து
அலுவலகம் சென்று சேர்மன் மர்ஹும் M.M.S சுல்தான் அப்துல் காதர் அவர்களிடம்,அதிரை பேரூராட்சி துப்புரவு தொழிளாலர்கள் பணிக்கு கிளம்பும்முன் கொடுத்து விடுவதால். சேர்மன் அவர்களும் அந்த பட்டியலையே அவர்களுக்கு அன்றைய அஸைன்மென்டாக கொடுத்து விடுவார்கள்.

அந்த பட்டியலில் காணப்படும் குறைகள் அன்றே சரிசெய்யப்படும்.
இதன் மூலம் சேர்மன் அவர்களிடம் சங்கத்துப் பிள்ளைகளுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. ம.மீ.செ குடும்பத்து விசேஷங்களுக்கு ஹியாவுக்கு பிரத்தியோக அழைப்பும்அனுப்புவார்கள். தெருப்பாகுபாடு கடந்த ஹியாவின் செயல்பாட்டுக்கும் அங்கீகாரத்துக்கும் இது ஒரு உதாரணம்.வாரந்தோறும் முஹம்மது அப்துல்லாஹ் ஆலிம் வீட்டு வாசலில் பேச்சுப் பயிற்சி முகாம். சங்கத்துப் பிள்ளைகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.

அதிரை சமுதாய நலமன்றம் சார்பில் முன்னர் இயங்கி வந்த நூலகம் மூடப்பட்டு, அங்கிருந்த நூல்கள் மூலையில் முடங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த நூல்களை தூசு தட்டி புதுப்பள்ளியில் மீண்டும் நூலகம் தொடங்கப்பட்டது. புதிய பல நூல்களையும் தருவித்துச் செயல்பட்டது.


சமூகத்தில் அநாச்சாரங்கள் தலைதூக்கும்போது ஹியாவின் துண்டுப் பிரசுரங்கள் சாட்டையாய் சுழலும். மார்க்க மற்றும் சட்ட அறிஞர்கள் துணையுடன் அச்சடிக்கப்படும் ஹியாவின் துண்டுப்பிரசுரங்கள் யாரையும் நேரடியாகத் தாக்காது. ஆனால் மறைபொருளாய் அதன் வீச்சு சம்பந்தப்பட்டவர்களை போய்சேரும். தீயொழுக்கம், மணமுறிவு அநீதிகள் போன்றவற்றை மார்க்க ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டும்.

ஊர்க்காவல் மற்றும் தற்காப்புக்காக செட்டியாக்குளம் பின்புறம் அஜீஸ்காக்கா கொல்லையில் புதுத்தெரு கார்சா காக்கா ஏற்பாட்டில் சிலம்பம் (கம்புச் சண்டை) பயிற்சி முகாம்.

புதுத்தெரு தைக்கால் ஆண்டுவிழா கந்தூரிபோல் உருவாகியபோது அதிரையின் உலமாக்களை கொண்டு அதை மார்க்கப் பிரச்சார விழாவாக்கி மற்றொரு 'தர்ஹா' உருவாகாமல் தடுத்தது.

ஏழைகள்,ஆதரவற்றோர்,வெளியூரிலிருந்து வந்து குடியேறியோர் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் தகவல் தெரிந்த நிமிடம் முதல் சங்கத்துப் பிள்ளைகள் அங்கு ஆஜராகி,பள்ளிகளில் மரண அறிவிப்பிலிருந்து நல்லடக்கம்செய்வது வரை அனைத்து சேவைகளையும் அக்குடும்பத்துக்கு செய்து கொடுக்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் அகால மரணமடையும் அநாதைகள், யாசகர்கள், வழிப்போக்கர்கள் முஸ்லிம்களாக இருந்தால் மருத்துவமனை நிர்வாகம் சங்கத்துக்கு தெரிவிக்கும். சங்கத்து பிள்ளைகளே அவர்களுக்கு குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழவைத்து நல்லடக்கம் செய்வர்

அதிரையில் பல பள்ளிகளில் முஅத்தினாக பணிபுரிந்த குடும்பம் ஏதும் இல்லாத 'சாபு' பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு கவனிப்பாரின்றி கிடந்தபோது அவரை தர்பியத் மதரஸாவில் வைத்து பராமரித்து கழிவரை வரைக்கும் சவுக்குக் கம்பினால் நடைமேடை/சாரம் கட்டி அவருக்கு நடைபயிற்சி அளித்து நோயிலிருந்து மீளும்வரை பராமரித்தனர்.


--தொடரும்---

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

சிறுபான்மையின மாணவர்களின் 10-ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் வரை முழு கல்விச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.

இந்திய சிறுபான்மையினர் நலத்துறை வெளiயிட்டுள்ள அறிக்கையில் 10-ம் வகுப்பிலிருந்து முனைவர் பட்டம் வரை கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.

இதற்கான முழு விபரத்தை காண கீழ் காணும் சுட்டியை CLICK செய்யவும்,மேலும் இச்செய்தியை சமுதாய மக்களிடம் கொண்டு செல்லும் படியும் வேண்டுகிறோம்.
 
http://www.minorityaffairs.gov.in/Postmetric

Monday, July 25, 2011

மரண அறிவிப்பு .

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முஹம்மத் தம்பி ஹாஜியார் அவர்களின் மகனும், மர்ஹூம் அ. ஜ. கபீர் ஹாஜியார் அவர்களின் மருமகனும், ஹாஜி.மீ.மு.அப்துல்மஜீத் அவர்களின் சகோதரருமாகிய, மீ. மு. அமீன் ஹாஜியார் அவர்கள் இன்று (24.07.2011) இரவு சென்னையில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".

Sunday, July 24, 2011

என்ன‌ங்க‌ அநியாய‌ம் இது? (காணொளி இணைப்பு)


ஊரு, உலகத்துலெ எவ்ளோ பெரச்சனையலுவோ தலெவிரிச்சி ஆடுது. வெலெவாசி ஒயர்வு, பெட்ரோல், டீச‌ல் வெலெ ஒயர்வு, பள்ளி, கல்லூரிக்கட்டணம் ஒயர்வு, மின்கட்டண ஒயர்வு, மின் தடை, போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும், எங்கு பாத்தாலும் ஊழல், லஞ்சம், நில அபகரிப்பு, உணவுப்பொருட்களின் வெலெவாசி ஒயர்வு மற்றும் பதுக்கல், கடத்தல், சில மாநிலங்களில் பசி, பட்டினி, பஞ்சம், வேலெயில்லாத் திண்டாட்டத்துனாலெ அன்றாடம் சர்வ சாதாரனமாக்கப்பட்ட கொலை, கொள்ளை, வன்புணர்வு, ஒரு புறம் தீவிரவாத தாக்குதல்கள் (காவித்தீவிரவாதமா? இல்லை கபோதி தீவிரவாதமா? தெரியவில்லை பட்டிமன்றத்தில் தலைப்பிட்டு விவாதிக்கப்பட வேண்டியவை) குழந்தைகள் கடத்தல், போலி சாமியார்களின் காம அட்டூழியங்கள், கருப்பு பண பதுக்கல், கள்ளச்சந்தை என்று நாட்டில் ஏக‌ப்பட்ட பிரச்சினைகள் பெருச்சாலி போன்று ஆங்காங்கே மேய்ந்து/ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில்,

"நிமிசத்திற்கு எத்தனையோ லட்சங்கள் வருவாய் ஈட்டக்கூடிய, சிறுவயதிலிருந்து இந்திய அணியில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு, ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாண்டு ப‌ல‌ கோடான‌ கோடிக‌ளையும், விலையுய‌ர்ந்த‌ ப‌ரிசுப்பொருட்க‌ளையும் சிறுவயதிலேயே ச‌ம்பாதித்து இன்று இந்தியாவின் ந‌ட்சத்திர‌ கிரிக்கெட் வீர‌ன் என்றும் கிரிக்கெட்டின் க‌ட‌வுள் என்றும் ஊராலும், உல‌க‌த்தாலும் புக‌ழ‌ப்ப‌ட்டு நாட்டின் மொத்த ஊட‌க‌த்தின் க‌வ‌ன‌த்தையே த‌ன் ப‌க்க‌ம் திருப்பி வைத்துள்ள‌ "ச‌ச்சின் டெண்டுல்க‌ர்" க்கு இந்தியாவின் உய‌ரிய‌ விருதான‌ "பார‌த‌ ர‌த்னா" விருது வ‌‌ழ‌ங்க வேண்டுமென‌ ம‌ஹாராஷ்ட்ர‌ மாநில‌ முத‌ல்வ‌ர் விலாஸ்ராவ் தேஷ்முக் க‌ச்ச‌லைக் க‌ட்டிக்கொண்டு க‌ள‌த்தில் இற‌ங்கியுள்ளார். நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்ச‌க‌மும் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அத‌ற்காக‌ ம‌த்திய‌ உள்துறை அமைச்ச‌க‌த்துக்கு சிபாரிசு க‌டித‌ம் எழுதி அதை அப்ப‌டியே முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த‌ விளையாட்டுத்துறையை பார‌த‌ ர‌த்னா விருது வ‌ழ‌ங்கும் பட்டியலில் உட‌னே சேர்க்க‌ச் சொல்லி வலியுறுத்தி பார‌த‌ப் பிர‌த‌ம‌ருக்கு க‌டித‌ம் எழுதி இருக்கின்ற‌த‌ன் அவ‌சிய‌ம் தான் என்ன? அவசம் தான் என்ன?

அவ‌ர் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்ப‌ணிப்புட‌ன் சிறப்பாக விளையாண்டு நாட்டிற்கு நல்ல பெயரையும், புகழையும், பெருமையும் தேடித்தந்துள்ளார் என்ப‌தில் மாற்றுக் க‌ருத்து யாருக்கும் இல்லை தான். அவ‌ர் என்ன‌ நாட்டுக்காக‌ சும்மாவா விளையாண்டார்? ஒவ்வொரு போட்டிக்கும் ப‌ல‌ கோடிக‌ளை ச‌ம்ப‌ள‌மாக‌ப் பெற்றும் அத‌ற்கு மேல் விள‌ம்ப‌ர‌த்தில் ப‌ல‌ நூறுகோடிக‌ளையும் ச‌ம்பாதித்தும் அல்லவா? அர‌ங்கில் சிற‌ப்பாக‌ விளையாண்டார். நமக்கெல்லாம் விளையாட்டு அரங்கில் நுழைய இலவச டிக்கெட்டா கொடுத்தார்கள்? இல்லை, தொலைக்காட்சியில் காண இலவச மின்சாரம் தந்தார்களா?

நாட்டை செழிப்பாக‌வும், வ‌றுமைக்கோட்டிற்கு கீழே அன்றாடம் செத்து, செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் மண்ணின் கோடான கோடி ம‌க்க‌ளை கைப்பிடித்து மேலே கொண்டு வர முயற்சித்தாரா? அறிவிய‌ல் ம‌ற்றும் ம‌ருத்துவ‌த்துறையில் சிற‌ப்பான‌ ஆராய்ச்சி செய்து அதை நாட்டிற்காக‌ அர்ப்ப‌ணித்தாரா? தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டாரா? இல்லை நாட்டின் க‌டும்குளிரும் குண்டு ம‌ழையும் பொழியும் எல்லையில் நின்று அந்நிய நாட்டு படையுடன் ச‌ண்டையிட்டாரா? அல்லது நாட்டிற்கு பெருமை ம‌ட்டும் சேர்த்து விட்டு ரோட்டோர‌ குடிசையில் வாழ்ந்து வ‌ருப‌வ‌ரா? ந‌ல்லா வெளையாண்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ருக்குத்தான் த‌க்க‌ ச‌ன்மான‌ங்க‌ளும், வெகுமான‌ங்க‌ளும், ப‌ரிசுப்பொருட்க‌ளும், ப‌ண‌ முடிச்சுக‌ளும் ஊராலும், உல‌க‌த்தாலும் உட‌னுக்குட‌ன் கொடுக்க‌ப்ப‌ட்டு விட்ட‌தே? அவ‌ருக்கு எப்ப‌டியாவ‌து பார‌த‌ ர‌த்னா விருதை வாங்கி கொடுத்து விட‌ வேண்டும் என்று இராப்ப‌க‌லாய் உற‌ங்காம‌ல் துடியாய் துடித்து வ‌ரும் ம‌ஹாராஷ்டிர‌ முத‌ல்வ‌ரும், நாட்டின் விளையாட்டு ம‌ற்றும் உள்துறை அமைச்ச‌ர்க‌ளும், பார‌த‌ பிர‌த‌ம‌ரும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் சொத்தில் ஒரு ப‌ங்கை அவ‌ருக்கு கொடுத்து அதை ஒரு பெரு விழாவாக எடுத்து ம‌கிழ‌ வேண்டிய‌து தானே? யார் த‌டுத்தார்க‌ள்? இல்லை வேண்டாம் என்றார்க‌ள்?

போட்டியில் நன்றாக விளையாண்டால் தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவார்கள். சரிவர விளையாட வில்லை எனில் தூக்கி எறிந்து கும்மியடிச்சி கேவலப்படுத்தி அட்ர‌ஸில்லாம‌ல் ஆக்கி விடுவார்கள்.

தமிழகத்தின் ஒரு கிராமத்தில் சொந்த வீடு கூட இல்லாத ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 1200க்கு 1171 மார்க்குகள் வாங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பிடித்து மருத்துவராக வேண்டும் என்ற தன் உயரிய கனவுடன் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்து மேற்கொண்டு அங்குள்ள கட்டணம் செலுத்த இயலாமல் அதை அப்படியே விட்டு விட்டு மேற்படிப்பெல்லாம் வீட்டின் பொருளாதார சூழ்நிலையால் தனக்கு ஒத்துவராது என்றெண்ணியவனாக தன் தந்தையுடன் ஒத்தாசையாக மண்வெட்டியுடன் வரப்பு வெட்ட கிளம்பி விட்டான் அந்த ஒரு இளைஞன். இவன் போல் எத்தனை லட்சம் இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். இந்த வாலிபனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரைக்கப்பட்டால் பாரத ரத்னாவிற்குத்தான் பெருமையாக இருக்குமே ஒழிய இவனுக்கல்ல....(இவனுக்கெல்லாம் நம்மை கொடுக்கிறார்களே என்று அது பெருமைப்படும்).சச்சின் டெண்டுல்கரின் மேல் நமக்கு எவ்வித பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாட்டில் பல பிரச்சினைகள் பூதமாக உருவெடுத்து தாண்டவமாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இதெல்லாம் தேவைதானா? என்பதே கேள்வி. சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள‌ நாட்டின் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து அதை வைத்து ஊரறிய, உலகறிய ஒரு பெரு விழாவில் சச்சின் போன்ற ஏழைகளுக்கு வேண்டிய விருது கொடுத்து மகிழ்ந்தார்கள் என்றால் பரவாயில்லை.

அர‌சிய‌ல், புகழ், ஆட்சி, அதிகார‌ம் என்று கையில் வ‌ந்து விட்டால் உல‌க‌ பொருளாதார‌ மாமேதைக‌ளும், புள்ளிய‌ல் ம‌ற்றும் க‌ணித‌ மேதைக‌ளும், உல‌க‌ வ‌ங்கியின் செய‌லாள‌ராக‌ ப‌ரிந்துரைக்கப்ப‌ட்ட நாட்டின் திட்டக்குழு வல்லுநர்களும் கூட‌ க‌டைசியில் மழுங்கினிக‌ளாக‌வும், ம‌ந்தாண்டைக‌ளாக‌வும், சாதாரன மனிதர்கள் போல் ஆகி விடுவார்க‌ள் போலும்......

இறைவா! நாம் ப‌ல்ல‌க்கில் செல்ல‌ விரும்ப‌வில்லை; மாறாக‌ நாலு பேர் எம்மை பார்த்து கேவ‌லமாக எதற்கும் ப‌ல்லிளிக்க‌ வைத்து விடாதே....!

ஆத‌ங்க‌த்தில் சாதார‌ன‌ குடிம‌க‌னாக‌....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

திடீர் ஆபத்துகளை விட்டுப் பாதுகாப்புப் பெற...


உஸ்மான் இப்னு அஃபான் (ரளி) அவர்கள் கூறியதாக அபான் இப்னு உஸ்மான் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

بِسْمِ اللّهِ الَّذِىْ لايَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الاَرْضِ وَلا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ

பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு காலை நேரத்தை தொடங்குகிறேன். அவன் எத்தகையவன் எனில், வானத்திலும் பூமியிலும் அவனது திருநாமத்தோடு எந்தப் பொருளும் தீங்கு இழைக்காது. அவன் யாவற்றையும் கேட்பவனும் யாவற்றையும் அறிந்தவனம் ஆவான்.

என்ற துஆவை எவர் காலையில் மூன்று முறை ஓதுவாரோ மாலை வரை அல்லாஹ் அவரை திடீர் ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பான். எவர் இதனை மாலயில் மூன்று முறை ஓதுவாரோ காலை வரை அல்லாஹ் அவரை திடீர் ஆபத்துகளை விட்டும் பாதுகாப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, திர்மிதி

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: எவர் வீட்டை விட்டு வெளியாகும் போது,

بِسْمِ اللهِ  تَوَكَّلْتُ عَلَى اللهِ لا حَوْلَ وَلا قُوَّةَ اِلاَّ بِا للهِ الْعَظِيْمِ

பொருள்: அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு வீட்டை விட்டு வெளியாகின்றேன். இன்னும் அவன் மீதே அனைத்துக் காரியங்களுக்கும் பொறுப்பை சாட்டிவிட்டேன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களை விட்டும் ஆபத்துகளை விட்டும் தவிர்ந்து கொள்ள முடியாது. நன்மைகளையும் செய்ய முடியாது.

என்று ஓதுவாரோ, அவரைப் பார்த்து ஒரு வானவர் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்.

1. அனைத்து ஆபத்துகளில் இருந்தும் உமக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுவிட்டது.

2. அல்லாஹ் உமது காரியங்களை நிறைவேற்றுவதற்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டான்.

3. உனக்கு அனைத்து காரியங்களிலும் நேர்வழி காட்டப்பட்டுவிட்டது.

அறிவிப்பாளர்: அனஸ் (ரளி)

நூல் : திர்மிதி

ஆக்கம்: மௌலவி முஹம்மது இப்ராஹீம்

தகவல்: மு.செ.மு. நெய்னா முஹம்மது

Saturday, July 23, 2011

புதுப்பள்ளி - புதுமைகளின் பள்ளி! (Part-2)


புதுப்பள்ளியில் மரியாதைக்குரிய உஸ்தாத் அப்துல் மஜீத் அவர்கள் மூலம் குர்ஆன் மட்டுமே ஓதுவதற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது.குறைந்தபட்ச மார்க்கக்கல்வியும் அவசியம் என்று கருதி, அரபு ,உர்தூ மொழிப்பயிற்சியுடன் மார்க்கச் சட்டங்களையும் கற்றுத்தர ஒரு மதரசா தேவை என்பதை உணர்ந்து, மர்ஹூம் 'லக்கி'அப்துல் ரஹ்மான் ஹாஜியார், திருநெல்வேலியிலிருந்து மெளலவி முஹம்மது அலி கோயா ஹஜரத் அவர்களை அழைத்து வந்து 'தர்பியத்துல் இஸ்லாமியா பயிற்சி கலாசாலை' என்ற பெயரில் குர்ஆன் மதரஸா ஒன்றைத் தொடங்கினார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக அவர்களுக்கு ஏற்ற நேரங்களில் வகுப்புகளை அமைத்து பாடங்கள் நடந்தன. அழகு தமிழில் அதிரை தந்த புலவர் பஷீர் அவர்களின் 'புதுமலர்கள்' நூல்கள், ஆரம்ப அரபி அறிவை ஊட்டும் நூல்கள், அரபு இலக்கண நூல்கள் எனப் பலவும் கற்றுத் தரப்பட்டன.

8 முதல் 12 வயதுள்ளவர்களுக்கு (د) 'தால்' ஜமாத் என்றும், பதின்ம (Teenage) வயதினருக்கு (ج) 'ஜீம்' ஜமாத் என்றும், கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் மற்றும் திருமணம் ஆனவர்களுக்கு (١) 'அலிஃப்' ஜமாத் என்றும் பாடங்கள் தரம் பிரிக்கப்பட்டு குர்ஆனின் அடிப்படைகளில் தொடங்கி கடமையான குளிப்பு மற்றும் இல்லற ஆலோசனைகள் வரை அவசியமான மார்க்க / ஒழுக்கக் கல்விகள் போதிக்கப்பட்டன. இந்தியாவிலேயே LKG முதல் Phd.வரை இஸ்லாமியப் பாடங்கள் கற்பிக்கக் கூடிய கல்லூரி அனேகமாக 'தர்பியத்துல் இஸ்லாமிய பயிற்சி கலாசாலை' மட்டுமே என்று நினைக்கிறேன்!

இன்றளவும் மார்க்க அடிப்படைகளிலிருந்து விலகாது,இஸ்லாமிய போதனைகளை தற்போதும் உறுதியாகப் பின்பற்றி வரும் அதிரைச் சகோதரர்கள் பலர், கண்ணியத்திற்குரிய ஹஜ்ரத் முஹம்மது அலி கோயா அவர்களின் பட்டறையில் புடம் போடப்பட்ட மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

தர்பியத்துல் இஸ்லாமியா மதரஸாவில் ஆண்கள் மட்டுமே பயின்று வந்த சூழலில் பெண்களுக்கும் ஒரு மதரஸா தேவை என்பதை உணர்ந்து 'ஹிதாயத்துன் நிஸ்வான்' என்ற பெயரில் புதிதாக கட்டிடம் உருவாக்கப்பட்டு நடைபெற்று வந்தது. சில காரணங்களால் இந்த மதரஸா மூடப்பட்டது. பின்னர் மர்ஹூம் துக்ளக் இப்ராஹீம் ஹாஜியார் அவர்களின் முயற்சியில் 1-5 ஆம் வகுப்புகள் வரையில் படிக்கக்கூடிய பாலர் பள்ளி ஒன்று இதே பெயரில் நடந்து வருகிறது! அதிரையில் உள்ள பள்ளிகளிலேயே முதன் முறையாக அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி என்ற பெருமை இப்பள்ளிக்கு உண்டு.

1970 களில் கட்டப்பட்ட புதுப்பள்ளிதான் வெகுகாலத்திற்குப் பிறகு கட்டப்பட்ட பள்ளியாகும். அதற்கு முன்பிருந்த பள்ளிகள் ஏறத்தாழ சமகாலத்தில் கட்டப்பட்டிருந்தன. புதுப்பள்ளிக்குப் பிறகு ஹனீப் பள்ளி, சித்தீக் பள்ளி, மக்தூம் பள்ளி, வண்டிப்பேட்டை பள்ளி மற்றும் பல புதிய பள்ளிகள் கட்டப்பட்ட போதிலும் இந்தப் பள்ளியே என்றென்றும் புதுப்பள்ளி என்று அழைக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் இளைஞர்கள் ஒன்று இணைந்து ஒரு சங்கம் உருவாக்க வேண்டும் என்ற ஆவலில் மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் பரிந்துரையின் பேரில் புதுப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு முஹல்லா இளைஞர்கள் சகோ.சம்சுதீன் (அமெரிக்கா), ஜாகிர் ஹுசைன் (அபுதாபி), செய்யது ஹுசைன், அப்துல் ரவூப், அபூபக்கர், அன்சாரி, ஷைக் உமர் இன்னும் பலர் இணைந்து 'ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு (HIYA)' என்ற ஒன்றை உருவாக்கி இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்

ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டபோது,அதன் தலைவராக அமுக முஹம்மது யூசுஃப் காக்கா தலைவராக இருந்தார்கள், பிறகு 'கவியன்பன்'அப்துல் கலாம் தலைவராக இருந்தபோது அடியேன் துணை செயலாளராக இருந்துள்ளேன். (ஹியா முதல் பைத்துல்மால் துபை கிளை உட்பட சவூதி மற்றும் அமீரகத்திலும் செயலாளர் (Secretary) பதவி என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது!) மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்களின் துஆவுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 1987 வரை புதுப்பள்ளி மற்று சுற்றுவட்டார முஹல்லாக்களில் பொது மற்றும் மார்க்கப் பணிகளில் முன்மாதிரி அமைப்பாகச் செயல்பட்டு வந்தது ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு!

அதிரையில் மர்ஹூம் பழனிபாபாவை அழைத்து வந்து பிரசங்கம் செய்ய முதன்முதலில் திட்டம் தீட்டியது ஹியா அமைப்புதான். பின்னர் முஸ்லிம் லீகினர் கேட்டுக் கொண்டதன் பேரில் விட்டுக் கொடுக்கப்பட்டது. ஹியாவைப் பற்றி எழுதும்போது மறக்க முடியாத நபர் மர்ஹூம் முஹம்மது அப்துல் காதிர் (மொம்மாகார்). மீராமெடிக்கல் எதிர்புறமுள்ள ஜெர்மன் கபீர் காக்கா, ஹாஜா ஹுசேன் காக்கா மற்றும் பாட்சா காக்கா ஆகியோரின் இளவல். சவூதியில் பணியிலிருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு முஹம்மது அப்துல் காதிர் உயிரிழந்தார். (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்).

தொடரும்...

முதல் பகுதி http://adiraixpress.blogspot.com/2011/07/blog-post_21.html

சமூக நல்வாழ்வு பேரவையின் அவசர வேண்டுகோள் !

திருவாரூர் - காரைக்குடி மார்க்கம் அகல ரயில் பாதை பனி இன்னும் துவங்காத நிலையில் அவசர அவசரமாக மன்னார்குடி அகலரயில் பாதை திட்டத்தை அமல் படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் முனைப்புக்காட்டி வருகிறது.

இதனால் நம் பகுதி அகல ரயில் பாதை திட்டம் மேலும் தள்ளி போகவும் அல்லது தடை படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதை நமது சமூக நல்வாழ்வு பேரவையின் அச்சமாக உள்ளது .

மேலும் இந்த தடத்தின் அகல ரயில் பாதை வேலை இன்னும் மூன்றாண்டுகளில் நிறைவேற்றபடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி .ஆர் பாலு அவர்கள் தொலைகாட்சி செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பதை நாம் கூற இயலாது எனவே இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாட நமது பேரவை முடிவு எடுத்துள்ளது

இதற்க்குனடான செலவுகளை நம்பகுதி மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ரிட் மனு தாக்கல் செய்து நம்பகுதிக்கு அகல ரயில் பாதை கொண்டுவருவதை லட்ச்சியமாக கருதும் நமது சமூக நல வாழ்வு பேரவைக்கு தங்களது பங்களிப்பை நல்குவீர்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறது .

மேலும் விபரங்களுக்கு

ஹாஜி அஹமது அலி ஜபார்
மொபைல்:9791190405

Friday, July 22, 2011

உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களுக்கு AIM வேண்டுகோள்47:33 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
47:33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.

உலகெங்கும் வாழும் அதிரை சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சமீபகாலங்களில் நமதூரின் பிரதான வலைத்தளங்களின் மூலமாக நீங்கள் அதிகம் கேள்வியுறும் அதிரை இஸ்லாமிக் மிஷனின் [AIM] நிஜங்களை உங்களுக்கு சுருக்கமாக இதன்வழி மறுஅறிமுகம் செய்ய விரும்புகிறோம்.

துவக்கம்
2000 ஆம் ஆண்டு அமீரகத்தில் வாழ்ந்த அதிரை சகோதரர்கள் ஒன்றுகூடி நமதூரின் நலனுக்காக, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் தங்களுடைய வாழ்வுதனையும் அமைத்து, அதனையே ஊருக்கும் உபதேசித்திட ஒருங்கிணைத்த அமைப்பே AIM. இதனால் விளைந்த முதல் நன்மை நமதூரின் தெரு வேற்றுமைகள் உள்ளத்தால் இணைந்த சகோதரர்களின் வெளிப்புற செயல்களினால் வெறுண்டோடின.

முதன்முதலாக ஃபித்ராவை அமீரகத்தில் கூட்டாக வசூலித்து அதிரை முழுவதும் ஏழைகளை தேடிச்சென்று விநியோகம் செய்யும் அறிய பணியை அதிரைக்கு அறிமுகப்படுத்தியதே AIM தான்.

கடந்த மூன்றாண்டுகளாக, இயக்கம் வளர்க்க போட்டோ எடுக்காமல், பயனாளிகளை கேவலப்படுத்தாமல், நாங்கள் இத்தனை பேருக்கு வழங்கினோம் என மார்தட்டிக் கொள்ளாமலும், வீடு தேடிச்சென்றும் இஸ்லாம் கூறும் அழகிய முறையில் விநியோகித்தும் வருகிறோம்.

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِن رَّبِّهِمْ ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ
47:2. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.

தத்து இயக்கங்கள்
அமீரகத்தின் துபை மாநகரில் AIM ஆரம்பிக்கப்பட்டாலும் அதிரையில் அதன் எண்ணங்களை செயல்படுத்திட ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிரையில் செயல்படும் மாநிலம் தழுவிய இயக்கங்களின் அதிரை கிளைகளை ஆதரிக்க வேண்டிய சூழல்கள் ஏற்பட்டன, இதன்வழி இவ்வியக்க தேவைகளின் புரவலராகவும் மாறியது AIM. இவ்வியக்கங்கள் தங்களின் பெயரில் செய்த பெரும்பாலான மக்கள் பணிகள் மற்றும் ஏகத்துவப் பணிகளின் பின்னும் அதிரை இஸ்லாமிக் மிஷன் மட்டுமே இருந்தது என அடித்துச் சொல்ல முடியும்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், ஒரு இயக்கம் சீண்டுவாரில்லாத நிலையில் இருந்தபோது AIM களமிறங்கி அவர்களுக்கு அதிரையில் கிளையை நிறுவி இன்றைய பள்ளி வரை கிடைத்திட செய்தது. அது அன்றைக்கு அழகிய செயலாக தெரிந்ததன் விளைவு.

கேடுகள்
அதிரை இஸ்லாமிக் மிஷன் தன்னுடைய செயலில் தூய்மையானதாக இருந்தாலும் தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயக்கப் பிளவுகள் அதிரை இஸ்லாமிக் மிஷனையும் வெகுவாக பாதித்தது, தெரு வேற்றுமைகளை களைந்து ஒன்றுபட்ட சகோதரர்களை இயக்கங்கள் மீண்டும் கூறுபோட்டு சென்றன. புரவலர்களாய் போனவர்கள் இயக்கங்களின் ஆதரவாளர்களாய் மாறியதால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடு இது.

இன்றைய AIM
பல்வேறு இயக்கப் புயல்களையும் தாண்டி இன்றும் தன் சக்திக்குட்பட்ட பணிகளை கடந்த மூன்றாண்டுகளாக தானே நேரடியாக களத்தில் நின்று செய்து வருகிறது, இனி எந்த ஒரு இயக்கத்திடமும் அதிரை இஸ்லாமிக் மிஷனை அடகு வைப்பதில்லை என்ற முடிவுடன்.

நாம் இயக்கங்களின் தூணாக இருந்தநிலை மாறி இன்று பல்வேறு இயக்கங்களும், சங்கங்களும், தனிநபர்களும் நம்முடைய நற்பணிகளுக்கு தங்களுடைய நல்லாதரவை வழங்கி வருகின்றனர்.

1. தஃவா பிரச்சாரங்கள்
2. கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்
3. ஃபித்ரா விநியோகம்
4. கல்விப் பணிகள்

என நம்முடைய பணிகள் இன்றும் தொடர்கின்றன, அல்ஹம்துலில்லாஹ்.

Adirai Educational Mission [AEM] என அழைக்கப்படுகின்ற அதிரை கல்விச்சேவையகத்திலும் AIM ஓர் முக்கிய அங்கம்.

ALM பள்ளிக்கூடத்தில் நடைபெற்றுவரும் அதிரை ஜூம்ஆவை நடத்தும் கூட்டுக்குழுவிலும் ஓர் அங்கம்.

இதேபோன்று எந்த இயக்கத்துடனும் சேர்ந்து தஃவாவையும் நற்செயல்களையும் இணைந்து செய்யவும் சகோதரத்துவத்துடனும் நடந்து கொள்ளவும் தயார் ஆனால் அதிரை இஸ்லாமிக் மிஷனின் நட்புறவு இனி அடகு நிலைக்குச் செல்லாது இன்ஷா அல்லாஹ்.

2011ல் AIM இதுவரை
அதிரை இஸ்லாமிக் மிஷன் 2011 நடத்திய பிரதான செயல்பாடுகளை தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
1. பள்ளியிருந்தும், கல்லூரியிருந்தும், பலருக்கு வாய்ப்பிருந்தும் கல்வியில் பின்தங்கியுள்ள அதிரை மாணவர்கள் மத்தியில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த ஜனவரி 14 15 ஆகிய தேதிகளில் கல்விச்சேவகர்கள் CMN சலீம், பேராசிரியர் இளையான்குடி ஆபிதீன் தமிழ்மாமணி பஷீர் ஆகியோரை கொண்டும், சகோதர வலைத்தளமான அதிரை நிருபர் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையினருடன் இணைந்தும் மாபெரும் இருநாள் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட்டது.
2. இயக்க வேறுபாடுகளால் சிதறுண்டு போயுள்ள தஃவா களத்தை சீரமைக்குமுகமாக, கடந்த பிப்.18ந்தேதி ஏகத்துவ அழைப்பாளர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களை கொண்டு மறுமை குறித்து அச்சமூட்டி எச்சரிக்கும் பொது நிகழ்ச்சியொன்றும் நமதூர் மக்களின் மிகுந்த வரவேற்புக்கிடையே நடத்தப்பட்டது.(குறிப்பு: இந்நிகழ்வின் இலவச சீடிக்கு 0552829759 என்ற எண்ணில் தொடர்பு கொள்க! தேரா, துபை)
3. சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்றாலும் கடந்த மூன்றாண்டுகளாக AIMன் தனித்தன்மையுடன் நடத்தப்பட்டு வரும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் இந்த வருடம் மே 1 முதல் 20 வரை சீருடனும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் நடத்தப்பட்டது, இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சியும் தஃவா நோக்குடன் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது இதில் மவ்லவி அன்சாரி ஃபிர்தவ்ஸி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு பயனுரையாற்றினார்கள்.

குறிக்கோள்கள்
ஓன்றாய் இருந்து பல்வேறு இயக்கங்களாய் போன தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் பழகும் வாய்ப்பை அதிரை இஸ்லாமிக் மிஷனின் இன்றைய நிர்வாகிகளுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளது பெரும் அருட்கொடையே. இந்த அறிமுகத்தின் வழியாக இன்ஷா அல்லாஹ் மீண்டும் முடிந்தவரை ஏகத்துவவாதிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வர பாடுபட்டு வருகிறது AIM.

நம்முடைய முயற்சிகளை ஜாக் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் பரிசீலிக்க இணங்கியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் பிற இயக்கத்தினர்களையும் தொடர்பு கொள்வோம்.

'நீங்கள் விசுவாசங் கொள்ளும்வரை சுவனம் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை விசுவாங்கொண்டவர்களாக ஆக மாட்டீர்கள் ஒரு செயலை நீங்கள் செய்வீர்களானால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். அச்செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (அதுவே) உங்களுக்கு மத்தியில் ஸலாமைப்1 பரப்புங்கள்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லீம் 42)

என்ற நபிமொழிக்கேற்ப, இன்ஷா அல்லாஹ் வரும் கல்வியாண்டின் முடிவில் நடைபெற இருக்கின்ற கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழாவை ஒரு மாநாடாக நடத்தி, பல்வேறு இயக்கங்களின் சமுதாயத் தலைவர்களை சமுதாய பொதுப்பிரச்சனைகளின் ஒற்றுமை என்ற பொருளிலும், ஏகத்துவ அழைப்பாளர்களை குர்ஆன் ஹதீஸூடன் ஒன்றுபடுவோம் என்ற பொருளிலும் ஒரே மேடையில் ஏற்றும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பல்வேறு காரணங்களால் அதிரை இஸ்லாமிக் மிஷனிலிருந்து பிரிந்து சென்றவர்களும் மீண்டும் ஒன்றிணைந்து தங்களுடைய தூய பணிகளை தொடர வேண்டும் எனவும் மனதார வேண்டுகிறோம், மனம் விட்டுப்பேசவும் தயார். புதிய சகோதரர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

பல்வேறு இயக்கங்களில் நீங்கள் இன்னும் தொடர்ந்தாலும் அதிரை இஸ்லாமிக் மிஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் AIM உறுப்பினராக, தான் சார்ந்துள்ள இயக்கத்திணிப்பை AIMக்குள் வலியுறுத்தாதவராக தாராளமாக கலந்து கொள்ளலாம்.

எதிர்கால திட்டங்கள்
மறைந்து வரும் மக்தப்களை (சிறார்கள் குர்ஆன் மற்றும் அரபி எழுத, ஓத கற்பிக்கும் ஆரம்பப்பாட சாலைகள்) மீண்டும் அனைத்து தெருக்களிலும் ஏற்படுத்துவது. இன்றைய பள்ளிக்கூட நேரங்களே மக்தப்களின் முதன்மையான வில்லன்கள் இதற்குத் நிரந்தர தீர்வுகாண முயல்வது.

முழுநேர பள்ளிக்கூடம் துவங்குவது, இதில் பயிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்து வெளியேறும் போது ஓர் இஸ்லாமிய அறிஞராகவும் பரிணமிக்க வேண்டும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான தனித்தனி மதரஸாக்களை நிறுவி முழு நேர கல்வி போதிப்பது மற்றும் குடும்பப் பெண்களும் பணியிலுள்ள ஆண்களும் பயனுரும் வகையில் பகுதி நேரக்கல்வியை ஏற்படுத்துவது.

இனி தஃவா களமே பிரதானம் என்று அதிரை இஸ்லாமிக் மிஷன் முடிவு செய்துவிட்ட நிலையில் அதற்கேற்ற இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை ஏற்படுத்துவது.

இன்னும் காலத்திற்கேற்ற பல நல்லறங்கள்.

இவையனைத்தையும் நிஜமாக்கிட அல்லாஹ்வின் உதவியும் கருணையும் நமக்கெல்லாம் அவசியம். அல்லாஹ்விற்காக AIM உடன் கரம் கோர்த்திட வாரீர், நல்லாதரவு தாரீர் என அனைத்து அதிரை சகோதரர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

4:36 وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا
4:36. மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும் தாய் தந்தையர்க்கும்இ நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் (பிரயாணம் தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும் வழிப்போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

முஃமினானவருக்கு அவர் செய்த நல்லவை(அமல்)களுக்கு பகரத்தை இவ்வுலகில்(மட்டும்) கொடுத்துவிட்டு மறுமையில் கொடுக்காமல் நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைக்க மாட்டான்.
(நூல்: முஸ்லீம் 60)

அற்புதமான மேற்காணும் குர்ஆன் வசனத்தையும், நபிமொழியையும் எங்களுக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவர்களாக நிறைவு செய்கின்றோம், வஸ்ஸலாம்.
http://www.blogger.com/img/blank.gif
குறிப்பு : இங்கே காணப்படும் 'நாங்கள் செய்தோம்' என்ற சுட்டல்கள் பெருமையின் வெளிப்பாடுகள் அல்ல, மாறாக அவை நம்மையறியா சகோதரர்களின் கவனத்திற்காக மட்டுமே.

இவண்
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)

email: aimuaeadirai@gmail.com
www.aimuaeadirai.blogspot.com

தகவல்: சகோ.S.அப்துல் காதிர்-மேலத்தெரு