பயணத்தின் இறுதியில் சில வார்த்தைகள்....!அன்புச் சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

2007ஆம் ஆண்டு மே மாதத்தில் நமதூர் அல் அமீன் பள்ளி பிரச்சனை கிளம்பி, காவல்துறை குவிக்கப்பட்டு ஊரே பதட்டமாக இருந்தது. அல் அமீன் பள்ளி நிர்வாகிகள் மீது பொய்வழக்கு புணையப்பட்டு தலைமறைவாக இருந்தனர். இந்தச் சூழலை வெளிநாடுகளிலுள்ள அதிரைவாசிகளுக்குத் தெரிவிப்பதற்காக அல் அமீன் பள்ளி நிர்வாகிகளின் வேண்டுகோளின் பெயரில் அதிரை மின்னஞ்சல் குழுமம் ஒன்றிற்கு மடல் அனுப்பப்பட்டது.

அந்த காலகட்டத்தில் யாஹூ குழுமத்தில் தமிழ் யூனிகோட் எழுத்துருக்களை வாசிப்பதில் சிலருக்கு சிரமம் இருந்தது என்றதைத் தொடர்ந்து, வலைப்பதிவர் அதிரைக்காரன், தாம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் பதிவு செய்து அதற்கான சுட்டியை யாஹூ குழுமத்தில் வைத்தார். இதன் பின்னர் சில சகோதரர்கள் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் மூலமும் தந்த தகவல்கள் அவ்வப்போது பதியப்பட்டு வந்தன.

பின்னர், அதிரை எக்ஸ்பிரஸை கூட்டு வலைப்பதிவாகச் செயல்படுத்தினால், அல் அமீன் பள்ளி நிலவரங்களை மட்டுமின்றி அனைத்து உள்ளூர் செய்திகளையும் வெளிநாட்டில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து நமதூர் தன்னார்வ சகோதரர்கள் சிலர் இணைக்கப்பட்டனர். இதற்கிடையே அதிரை எக்ஸ்பிரஸில் பலரும் கட்டுரைகளை, தகவல்களை அனுப்பி அவற்றைப் பதியும்படி கேட்டனர். வலையேற்றுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, மேலும் பல சகோதரர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸில் நேரடியாகப் பதியும் வசதியும் வழங்கப்பட்டது.

தளத்துக்கு வருகை தரும் நமதூர் சகோதரர்களிடையே கலகலப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் அதிரையின் நடப்புகளைச் சுருக்கமாக எத்திவைக்கவும் அரட்டை (CHAT) வசதியும் ஏற்படுத்தப்பட்டது. அதிரை எக்ஸ்பிரஸில் வெளியான சில கட்டுரைகள், பின்னூட்டங்கள் மற்றும் சாட் மூலம் நமது சகோதரர்களைக் காயப்படுத்தியதாகப் புகார் வரும்போது, எக்ஸ்பிரஸ் சார்பில் மன்னிப்பு கோரியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட பதிவுகளை/பின்னூட்டங்களை நீக்கியும் வந்துள்ளோம்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விருப்பு வெறுப்பின்றி அனைத்து தரப்புச் செய்திகளையும் பதிவுசெய்து நடுநிலை ஊடகமாக அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளம் திகழ்ந்ததை வாசகர்கள் நன்கறிவர். அதிரை எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டிருந்தாலும், அதிரை அல்லாதவர்கள் நூற்றுக்கணக்கில் வாசகர்களாக இருந்தனர். அதிரை முஸ்லிம்கள் மட்டுமின்றி நமதூர் சகோதரர்களுடன் பணியாற்றும் பிறமத சகோதரர்களும் அதிரை எக்ஸ்பிரஸின் வாசகர்களாக இருந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகளில், வாசகர்கள் எண்ணிக்கையில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக அதிரை எக்ஸ்பிரஸ் திகழ்ந்துள்ளது என்பதை தமிழ் வலைப்பதிவுகளை கண்காணித்தவர்கள் அறிவர்.

அதிரை எக்ஸ்பிரஸின் தொடக்க காலங்களில் அரசியல், சட்டம் சார்ந்த செய்திகள் முன்னிலைப் படுத்தப்பட்டன. நமது பங்களிப்பாளர்கள் ஊடகத்துறையில் முன்அனுபவம் இல்லாதிருந்ததால் பங்களிப்பாளர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்தன. சில பங்களிப்பாளர்களோ, நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்யாமல் சில பதிவுகளைப் பதிந்து நிர்வாகிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தி இருந்தனர். சிலர் பங்களிப்பாளர்களுடன் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக சிலர், ஏனைய நிர்வாகிகளை எதிரியாகக் கருதியதோடு, இதற்கு எதிராக தவறான பரப்புரைகளைப் பரப்பி ஓரளவு வெற்றியும் கண்டனர்.

பணிச்சூழல் காரணமாக சகோ. அதிரைக்காரனுக்கு இணைய இணைப்பு அரிதாகி இருந்த சூழலில் தாயகத்திலிருந்து பங்களித்த சிலர், அதிரைக்காரனைவிட அதிகமான பங்களிப்பை வழங்கினர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஊர் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட அச்சகோதர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.

எங்கோ நேர்ந்துவிட்ட தவறுக்கு அதிரை எக்ஸ்பிரஸின் தற்போதைய நிர்வாகிகளே காரணம் என்ற சந்தேகத்திற்கு ஆட்பட்டு அதிரை எக்ஸ்பிரஸின் முக்கியப் பங்களிப்பாளர்களாக இருந்தவர்கள் அதிரை எக்ஸ்பிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்தபோது, "உள்ளூர் பங்களிப்பாளர்களாகிய நீங்கள் விலக வேண்டாம்; வெளிநாட்டிலிருக்கும் நான் விலகிக் கொள்கிறேன்" என்ற அதிரைக்காரனின் கோரிக்கையையும் ஏற்காமல், தனித் தளம் கண்டுவிட்டனர். இப்படியாக அதிரை எக்ஸ்பிரஸில் இருந்து பிரிந்து தனித்தனியாகத் தளம் கண்டு இன்று சுமார் 50 வலைப்பூக்கள் அதிரைக்கென்று உள்ளன.

பொதுவாக, அதிரை வலைப்பதிவர்கள் ஒரு கருத்தை இணையத்தில் எழுதும் முன் அதன் சாதக/பாதகங்களை அலசி ஆராயாது எழுதிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அப்படியே, ஆவலில் எழுதிவிட்டாலும் அதற்கு எதிரான மாற்றுக் கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் குறைவான நம் மக்கள், பின்னூட்டங்களில் தனி நபர் தாக்குதலில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

ஒரு கருத்துக்கு மாற்றமான கருத்துகள் வந்தால், அதனை எழுதியவர் விளக்கம் அளிக்கும்போது, விளக்கத்தை ஏற்றல் அல்லது விளக்கத்துக்கு மறுப்பு என்ற பொதுவெளி நாகரிகத்தை பின்பற்றாது பதிவிட்டவரின் தனிப்பட்ட விசயங்களை எழுதத் தொடங்குகின்றனர். தாம் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பு வரும்போது அதற்குத் தொடர்ந்து பதில் அளிப்பவரையும் "விடாக்கண்டன்" என்று அடையாளப்படுத்தி, தங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து வராதபடி செய்து விடுகின்றனர்.

அதிரை எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்ட நோக்கம் அல் அமீன் பள்ளி பிரச்சினை வெளிநாடுவாழ் அதிரைவாசிகளுக்கு உண்மையாகச் சென்றடையவேண்டும் என்பதே. இவ்விசயத்தில் பெற்ற நம்பகத்தன்மையைத் தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸ் உள்ளூர் செய்திகளுக்கான நம்பகமான தளமாக அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவ உதவிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, அக்கம்பக்க ஊர்களின் முக்கிய நிகழ்வுகள், தனிநபர் அனுபவங்கள் ஆகியவை பதிவுகளாக வெளியாகி அதிரையின் அதிகமான வாசகர்களைக் கொண்ட கூட்டுவலைத்தளமாக இதுவரை விளங்கி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

தொடங்கப்பட்டது முதல் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதன் பங்களிப்பாளர்கள் எங்கிருந்தாலும் இதில் வெளியாகும் செய்திகள் மற்ற தளங்களைவிட சமூக அக்கரையைக் கொண்டவை என்பதை நம்பும் வாசகர் வட்டம் இன்றளவும் அதிகரித்து வருகிறது. இதன் பங்களிப்பாளர்களாக இருந்தவர்கள் விலகியபோதும், தனித்தளம் கண்டபோதும் எங்கள் அணுகுமுறைகள் மாறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் சிறுபாதிப்புகூட ஏற்படாமல் நடுநிலையாகச் செயல்பட்டதை மாற்றுக்கருத்துள்ளவர்களும் ஒப்புக்கொண்டனர். கடந்த காலங்களில் சிலரால் சிதைக்கப்பட்ட இதன் பங்களிப்பாளர்கள் மீதான நன்மதிப்பை எங்கள் நேர்மையான அணுகுமுறைகளால் மீட்டெடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!

இதன் பங்களிப்பாளர்களின் கூட்டுமுயற்சியால் அதிரையின் நிகழ்வுகளை நேரலை, காணொளி மற்றும் எழுத்து வடிவில் சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டது. எனினும், இணையத்தில் அதிரைவாசிகளை ஒருங்கிணைத்து ஒரே தலைமை, ஒரே தளம் என்ற எங்களின் முயற்சிக்கு ஏனைய வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பின்மை மற்றும், ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையாலும் பலகசப்பான அனுபவங்கள் தொடர்கதையாக உள்ளன.

அதிரை வலைப்பூக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பலரும் முயன்றார்கள். அத்தகைய முயற்சிகள் அனைத்துக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தது. இதற்காக அதிரை எக்ஸ்பிரஸ் வலைப் பதிவை நிறுத்திக் கொள்ளவும் தயார் என்றும் கூறியிருந்தது. ஆனால், பிற சகோதரர்களிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. ஆனாலும் ஒருங்கிணைப்பு முயற்சியின் முதல்படியாக அதிரை எக்ஸ்பிரஸின் சேவை இன்று முதல் நிறுத்தப்படும். தன்னார்வ பங்களிப்பாளர்கள் தாங்கள் விரும்பிய தளங்களில் தொடர்ந்து இயங்குவார்கள். இன்ஷா அல்லாஹ். பழைய பதிவுகள் அப்படியே இருக்கும். facebook, twitter கணக்குகளும் இனி பராமரிக்கப்படமாட்டாது. இதன் பங்களிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அக்சஸ் நீக்கப்படும், பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும் என்று அறியத்தருகிறோம்.இத்தளத்தின் பெயரை எவரேனும் துர்ப்பிரயோகம் செய்யக்கூடாது என்பதால் கூகில் கணக்கிலிருந்து அழிக்கப்படாது.

அதிரை எக்ஸ்பிரஸில் வெளியான பின்னூட்டங்கள், அரட்டைகள் மற்றும் பதிவுகள் மூலம் நமது சகோதரர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மீண்டும் மன்னிப்புக் கோருகிறோம். ஊர் நலனை நாடி அதிரை எக்ஸ்பிரஸின் தொடக்கம் முதல் பல்வேறு சோதனைகளிலும் கைகொடுத்து இறுதிவரையில் பங்களித்த, எங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்கப்படுத்திய, வழிநடத்திய அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பதைப்போல் இணைய தளமில்லாதபோது இலுப்பைப்பூவாக அதிரை எக்ஸ்பிரஸ் செயல்பட்டு, ஊர் மக்களின் இணையக் குரலாக விளங்கியது. அதிரை மக்களின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்து விழிப்புணர்வூட்ட அதிரை எக்ஸ்பிரஸ்தான் இருக்கவேண்டும் என்ற நிலையில்லை. இதே நோக்கத்துடன் செயல்படும் எவருக்கும் நிச்சயம் எங்கள் ஒத்துழைப்பும் ஊக்கமும் உண்டு.

அதிரை எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் குழுமம் வழக்கம்போல் செயல்படும். ஊர் நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். adiraiexpress@googlegroups.com என்ற குழுமத்தில் இணைய விரும்பும் அதிரைவாசிகள் தங்கள் முகவரிகளைக் கொடுத்து இணைந்து கொள்ளலாம்.

அதிரை எக்ஸ்பிரஸ் குழு சார்பில்,

அபூசுஹைமா.
Share:

ஹஜ் கவிதை, அருட்கவி மு தாஹா!


ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் !
   அதிரை அருட்கவி அல்ஹாஜ்
   மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.

ஆதி இறைவன் இல்லம் ஒன்றே
அழகாய் ஹஜ்ஜு செய்திடவே
வேதம் தன்னில் “கடமை” என்றே
விளக்கம், சொன்னான் இறையோனே!
ஓதும் வேதம் வழியில் சென்றால்
உண்டாம் சொர்க்கப் பதியன்றோ!
கோது போக்கி ஏதம் நீக்கக்
குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம் !

பாவம் எண்ணி வருந்தி யழவும்
பாதை காட்டி அறம் செய்தும்
சாபம் நீங்க உறவைத் திருத்தி
சார்ந்து வணக்க வழிபாட்டில்
கோபம் கொன்று குணத்தில் ஒளிரும்
குன்றாய் நிற்க வழிகாட்டி
ஏமம் ஆகி இறையை நெருங்க
இலங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

நகத்தை வெட்டி அகற்றி முடிகள்
நபிசொல் படியே குளித்திடவும்
அகத்தில் கறையை அகற்றி மறுமை
அடையாளத்தைக் காண்பித்தே
முகத்தில் கண்ணீர் வழிய பக்தி
முறையாய் “இஹ்ராம்” கட்டிடவும்
தகைக்கும் வெயிலை குளிராய்க் காட்டி
தளிர்க்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

கருப்பர், சிகப்பர், வெள்ளையர் இன்னும்
காணும் பற்பல நிறத்தினரும்
இருப்பார் கஃபா இல்லத் தருகே
எல்லாம் ஒருதாய் மக்க ளென
“இறைவா!” உன்முன் வந்தோம் வந்தோம்
இணையே இல்லை உனக்கென்றே
நிறைவாய் “தல்பியா”ச் சொல்லிச் சொல்லி
நிற்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

தந்தை ஆதம் கட்டி “தவாபு”
தகையாய்ச் செய்ய நபிமார்கள்
சிந்தை மகிழச் சுற்றி சுற்றி
சிறந்தார்; நபியாம் இபுறாஹீம்
அந்த பாலகர் இஸ்மா யீலும்
அழகாய்க்கட்டி முடிக்க அதை
எந்தை அஹ்மது நபிவழிகாட்டி
எழுந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் !

நெஞ்சம் உருக, நிலைதடுமாற
நிறைவாய் ஏழு முறை சுற்றி
கெஞ்சிக் கெஞ்சி இறையைப் புகழ்ந்து
கேட்க, நாட்டம் நிறை வேற,
அஞ்சி அஞ்சி அகத்தை ஒடுக்க
அழுக்கு நீங்கி அருள் சுரக்க,
மிஞ்சும் தூய்மை மேலாய் மலர
மிளிர்ந் தெழும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

சொர்க்கக் கல்லாம் ஹஜருல் அசுவத்தை
தொட்டு தொட்டு முத்தமிட
தர்க்கம் இல்லாச் சரித்திரம் – இஸ்மாயீல்
தங்கப் பாதம் பட்டவுடன்
பெருக்கெடுத்தோடும் “ஜம் ஜம்” தண்ணீர்
பெருமை கண்டு குடித்திடவும் !
உருகிக் கேட்க இறையருள் பெறவும்
உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

தண்ணீர்க்காக அன்னை ஹாஜிரா
தாவி ஓடிய செயல் நினைந்தே
கண்ணீர் விட்டு நாமும் ஓடிக்
கருத்தைத் துலக்கி சொர்க்கம் பெற
புண்ணிய சீர்சபா மருவாக் கிடையே
புகுவார் கூட்டம் காட்டிடவும்
மண்ணும் விண்ணும் கடலும் புகழ
மலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் !

பாவமெல்லாம் விட்டோம் என்று
படைத்தோன் முன்னால் உறுதி செய
தோய்ந்தே உள்ளம் தலைமுடி களைந்தே
துயரம் மாயும் நிலை காட்ட
மாய்ந்து வஞ்சக நெஞ்ச மெல்லாம்
மாண்பாம் மலரில் மணம்வீச,
ஆய்ந்தே உலகம் அதியம் கொள்ள
அலர்ந்தது ஹஜ்ஜாம் அருள்மாதம் !

அரிய ஹஜ்ஜு நிறைவு பெறுமாம்
அரஃபா வந்துத் தங்கிடவும்
கரிய பாவம் எல்லாம் உலர்ந்து
கரையைக் கடக்கச் செய்திடவும் !
உரிய “ஹாஜி” பட்டம் பெறவும்
உயர்ந்த படித்தரம் பெற்றிடவும்
தரித்தே இறையின் அருளில் இன்புறத்
தாங்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

அருளின் கடலாம் முஜ்தலிபாவில்
அழகாய்த் தங்கி அருள்பெறவும்
குருபா னீ யைக் கொடுத்து மினாவில்
கோதில் இறைக்கே பணிந்திடவும்
பெரும்பகையான ஷைத்தான் ஓடப்
பேணிக் கற்கள் எறிந்திடவும்
உரிய வழியை முறையாய்க் காட்டி
உதிக்கும் ஹஜ்ஜாம் அருள்மாதம் !

மாமணம் கமழும் மதீனா நகரில்
மாநபி தம்மைத் தரிசிக்கவும்
தூமனம் கொண்டு ஸலவாத் தோதி
தூய்கலீஃபாக்களை நினைந்திடவும்
காமணம் வீசும் கஸ்தூரி வாடை
கனிந்த நபியைச் சூழ்ந்திடவும்
தாயாய் வந்துத் தாங்கி நிற்கும்
தகையாம் ஹஜ்ஜாம் அருள்மாதம் !
Share:

குழ்ந்தைகள் நிகழ்ச்சி (காணொளி)!

கடந்த மார்ச் மாதம் நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா குழந்தைகள் நிகழ்ச்சியின் சிறு தொகுப்பு காணொளி இது. காலம் கடந்து வெளியிடப் பட்டாலும் குழந்தைகள் நிகழ்ச்சி ரசிப்புக்குறியதே. அதன் நோக்கில் வெளியிடப் படுகிறது.


Share:

இன்டர்நெட் தரும் வேலை!

இன்டர்நெட் தரும் வேலை!

இன்டர்நெட் தரும் வேலை! ஆமாங்க!  மைக் பேக் (Mike Peg) - கன்னடா நாட்டுக்காரர். இவருக்கு கூகுளில் பணிப்புரிய வாய்ப்பு கிடைத்தது. இவர் செய்ததேல்லாம் இது தான்! கூகுள் மேப்ஸ் பற்றியும், அதன் பயன்பாடுகளையும் பற்றி மிக அருமையாக தன்னுடைய ப்ளாக்கில் எழுதினார். உதாரணத்திற்க்கு கூகுள் மேப்ஸை எப்படி 100 வழிகளில் பயன்படுத்தலாம் என "நச்சுன்னு" ஒரு பதிவை எழுதினார். கூகுள் இவரது வலைப்பதிவை கவனிக்காமல் இல்லை. இவரது திறமையை மதித்து Google Maps APIஇல் Product Marketing Managerஆக பணிப்புரிய வாய்ப்பளித்தது!

உங்கள் திறமைகளை இணையத்தில் காட்டுங்கள்! உங்கள் திறமைகளை கவனிக்க இங்கே ஆட்கள் உண்டு! உங்கள் திறமைகளை மற்றவர்கள் அறியும்  தன் திறமையை உலக்குக்கு காட்டுங்கள் .
Share:

மத்திய அமைச்சரை சந்தித்தார் நகர தலைவர்

நமதூரின் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் இன்று மதியம் மத்திய நிதி இணை அமைச்சர் ss.பழனி மாணிக்கத்தை சந்தித்து நமதூரின் அடிப்படை தேவைகளையும் சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட கோரியும் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 1மணி நேராம் நீடித்தது .

அமைச்சார் அவர்கள் நமதூரின் முக்கிய கோரிக்கைகளை உடனடியாக அமல்படுத்தபடும் என உறுதியளித்தார் சந்திப்பின் போது நகர திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர் .
படங்கள் விரைவில்....
Share:

புகாரி ஷரிஃப் ஆரம்பம்

நமதூர் ஜாவியாலில் பல நெடுங்காலாமாக ஓதிவரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் நாளை காலை தொடங்க இருப்பதாக புகாரி ஷரிஃப் கமிட்டியார் தெரிவித்னர்.

தினமும் காலை சுபுஹூ தொழுகைக்குபின் திக்ரு மஜ்லீசும் அதனை தொடர்ந்து புகாரி ஷரிஃப் மஜ்லீசும் நடைபெறும்.

இதில் அப்துல்காதர் ஆலிம்,முகமது குட்டி ஹள்ரத் உள்ளிட்ட மார்க்க அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பு சொற்ப்பொழிவாற்ற உள்ளனர்.

இந்த புகாரி ஷரிஃப் மஜ்லீஸ் தொடர்ந்து 40 நாட்க்கள் நடைபெரும்.பெருநாள் அன்று அசர் தொழுகைக்கு பின் நடைபெறும்.

தினமும்சரியாக காலை 7:45 மணிக்கு கதவு சாத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

Share:

பேரூர் மன்ற தலைவர் பதவியேற்பு(காணொளி)

கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அஸ்லம் அவர்கள் ஆற்றிய உறையின் காணொளி இவர்தனது பேச்சின் பொழுது அதிரையின் சுகாதார பிரச்சனையை ஆணித்தரமாக எடுத்துறைத்து பதவியேற்ற 21 வார்டு உறுப்பினர்களை ஒத்துழைப்பு தறுமாரு கோரினார்.

Share:

தரகர்தெரு முஹல்லா சார்பில் ஜனாப்.தாவூத்கனி அவர்களின் வாழ்த்து

மக்கள் கருத்துக்களை ஆட்சியாளர்களிடம் கொண்டுசெல்லும் அடுத்தகட்ட முயற்சியாக அதிரை எக்ஸ்பிரஸில் வெளிநாடுவாழ் அதிரைவாசிகள் தங்கள் கோரிக்கைகளை பதிவுசெய்து வருகிறார்கள். 

அதன் தொடர்ச்சியாக தரகர்தெரு (ஆசாத் நகர்) முஹல்லா சார்பில் துபாயில் பணிபுரியும் சமூக சேவகர் சகோ.தாவூத் கனி அவர்கள் அதிரையின் புதிய சேர்மனுக்கு தமது முஹல்லா சார்பில் வாழ்த்தும் கோரிக்கையை சகோ.தாவூத்கனி அவர்கள் தமக்கே உரிய பாணியில் வைக்கிறார்.

குறிப்பு: நமதூர் தரகர் தெருவின் பெயரை 'ஆசாத் நகர்' என்று சமீபத்தில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட தகவலை சகோ.தாவூத் கனி தெரிவித்தார்கள்.
Share:

ஒரு சகாப்தத்தின் ஆரம்பம் !

ஜனாப் அஸ்லம் அவர்கள் வென்ற விதம் , சற்றே சிந்திக்க வைக்கின்றது ! அவர் செய்த நற்தொன்றுகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. அல்லாஹ்வின் உதவிகொண்டு கடந்த காலங்களில் அவர் செய்த நற்காரியங்களை பட்டியிலிட்டால் அவரரே விரும்ப மாட்டார் என்ற காரணத்தினால், அதை விவரிக்க விரும்பவில்லை. ஒவ்வொரு இளைஞனும் இது போன்ற சேவைகளில் ஈடுபட்டால் ஈருலகிலும் நன்மை நம்மை வந்து சேரும். எவ்வித பிரதி பலனையும் எதிரபாராமல் செய்யும் தொன்றே , நம்மை அறியாமல் நமக்கு பலனை தரும்.

இன்று அவர பேசியதிலிருந்து , ஹாஜி ஜனாப் M.M,S அப்துல் வஹாப் அவர்களை நினவு கூர்ந்து பேசிய விதம் தனது நன்றி உணர்வை காட்டுகிறது.

சுகாதாரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசிய விதமும், அவர் பிறந்தது அதிரை என்றாலும் வளர்ந்தது சீமை என்பதால் வளர்ந்த, வாழ்ந்த இடத்தில் கிடைத்த அனுபவத்தை தனது பிரதான கொள்கையாக மேற்கொண்டுருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடியதே !

சுருங்கச் சொன்னால், அவர் அதிரையின் ஒபாமா, என்று சொன்னால் அது மிகையாகது. 45 வருட ஆட்சியயை கைப்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல..

அப்துல் ரஜாக்
Share:

வாழ்த்துகள் அதிரை பதிவர்களே!


கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து அதிரை எக்ஸ்பிரஸ் என்கிற இணைய வலைப்பூ மூலம் முதல் முறையாக நமதூர் மக்களுக்கு (அதிலும் குறிப்பாக) வெளிநாடுவாழ் அதிரைவாசிகளுக்கு,அதிரையில் நிகழும் செய்திகளை உடனுக்கு உடன் தந்து வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரிய காரியமாகும்.

இப்பணிக்கு மெரு௬ட்டும் விதமாக அதிரை பிபிசி,அதிரை.இன்,அதிரைநிருபர், அதிரை அனைத்து முஹல்லாஹ் ௬ட்டமைப்பு போன்ற பல இணைய வலைப்பூக்கள் அதிரைவாசிகளுக்கு அவ்வப்போது ஊரில் உள்ள நிகழ்வுகளை பதிவுகளாகவும்,காணொளி நேரலையகாவும்,ஆடியோவாகவும், புகைப்படமாகவும் சிறந்த முறையில் தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, பாரட்டக்குரியது. (அல்ஹம்துலில்லாஹ்)

பாராட்ட ஒவ்வொறு மனமும் ஏங்கித்தானே இருக்கும்? பாராட்டிக் கொள்ளுங்கள்.

நமதூர் இணைய தளங்கள் செய்தவைகளை என் நினைவில் உள்ளவரை பட்டியலிடுகிறேன்.

1) ஊரில் நடக்கும் எல்லாவிதமான நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் தருகின்றன.

2) ஊரில் உள்ள அனைத்து சகோதரர்களின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றன.

3) ஊரில் உள்ள பைத்துல்மால், சங்கங்களில் உள்ள வரவு செலவுகளை துல்லியமாக தருகின்றன.

4) கடல்களைத் தாண்டி இருக்கும் நமதூரைச் சார்ந்தவர்களின் பெருநாள் சந்திப்புகளைக் காண முடிகிறது.

5) அவ்வப்போது வேலை வாய்ப்புகளையும் நினைவூட்டுகின்றன.

6) நம்மவர்களில் யாரேனும் இறந்து விட்டால், மரண அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

7) மருத்துவர்களின் ஆலோசனைகள் மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

இதுபோன்று துபாய் வரலாற்றில் முதன் முதலில் நடைபற்ற A A M F -ன் முதல் பொதுக்குழுவை நேரலையில் ஒளிபரபியது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் என்னும் இடத்தில் அறிவிக்கப்பட்ட தகவல்களை பதிவுகளாகவும், ஆடியோவாகவும் ஒளிப்பரப்பியது நமதூர் மக்களுக்கு மிகுந்த பயனளித்தது.

இதுவரையும் தமிழ் நாட்டில் BLOGSPOT வலைப் பூக்களில் யாரும் இது போன்று நிகழ்ச்சினை நடத்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (அல் ஹம்துலில்லாஹ்)

இப்பணிகளைச் செய்து வரும் இணைய வலைப்பூ நடத்தி வருகிற சகோதரர்களுக்கு, இக்காரியங்களில் மேலும் பல முனேற்றம் காண அதிரை FACT சார்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். இச்சிறப்பான காரியங்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனைத்து வலைப்பூ நிவாகிகளுக்கும் ஒரு சிறிய அன்பான வேண்டுகோள்:

நமதூரில் அனுபவஸ்தர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள்,கணினி வித்வான்கள்,மூத்தவர்கள் ஆலோசனைகளைப் பெற்று,எல்லா வலைப்பூகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இன்னும் அதிக பலன்களைப் பெறலாம். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

ஆக்கம் : சிராஜுதீன் M.S.T
Share:

பதவி ஏற்பு புகை படங்கள்!!

படங்களை பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்.


முழு நீள கானொளி விரைவில்....
Share:

சேர்மன் பதவியேற்பில் சகோ. அஸ்லம் பேச்சு (காணொளி)

அதிரை பேரூராட்சித் தலைவராகப் பதவியேற்றுக் கொண்ட சகோ. அஸ்லம் அவர்கள் பதவியேற்பின் போது உரையாற்றிய காணொளி.
நன்றி: அதிரை.இன்
Share:

பதவி பிரமாணம்...

அதிரை உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சகோ அஸ்லம் மற்றும் 19 வார்டுகளை சார்ந்த உறுப்பினர்கள் இன்று பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பந்தலில் பதவி பிரமாணம் ஏற்று கொண்டார்கள்.

மற்ற பெண் வேட்பாளர்களில் சிலர் பேரூர் மன்றத்தில் பதவி பிரமாணம் ஏற்று கொண்டனர் .

இதன் கானொளி மற்றும் புகைப்படங்கள் விரைவில்.....
Share:

பதவியேற்பு விழா துவங்கியது!

அதிரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற சகோ.S.H.அஸ்லம் அவர்களின் பதவியேற்பு விழா சற்று முன் துவங்கியது, கொட்டும் மழையில் நம்தூர் முக்கியஸ்தர்கள் மற்றும் மக்கள் முன்னிலையில் இவ்விழா நடந்து கொண்டு இருக்கிறது.

Share:

பேரூராட்சி தலைவர் சகோ.அஸ்லம் அவர்களுக்கு அய்டாவின் வாழ்துரைகளும் வேண்டுகோள்களும், (காணொளி)!

பேரூராட்சி தலைவர் சகோ.S.H.அஸ்லம் அவர்களுக்கும், மற்றும் 21 வார்டு உறுப்பினர்களுக்கும், அய்டா (ஜித்தா)வின் பாராடுக்களும், வாழ்த்துக்களும் சில வேண்டுகோள்களும்.  (காணொளி).

Share:

துபாய்வாழ் மிஸ்கீன் பள்ளி முஹல்லாவாசிகள் கோரிக்கை

அதிரை உள்ளாட்சித் தேர்தலில் சகோ.அஸ்லம் வெற்றி பெற்றதை தொடர்ந்து துபாய்வாழ் அதிரைவாசிகள் அதிரை எக்ஸ்பிரஸ் மூலம் வாழ்த்துக்களையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கிறார்கள். 

இதன் தொடர்ச்சியாக மிஸ்கீன்பள்ளி (புதுத்தெரு) முஹல்லாவாசிகளின் காணொளி பேச்சு:


Share:

சேர்மன் சகோ. அஸ்லம் அழைக்கிறார்! (காணொளி)

25-10-2011 அன்று நடைபெறும் அதிரை பேரூராட்சித் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோ. அஸ்லம் அவர்கள் அதிரையின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

காலை சரியாக 9 மணிக்கு சித்தீக் பள்ளியில் துஆ செய்த பின் ஊர்வலமாகச் சென்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.


நன்றி: அதிரை.இன்
Share:

அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு - தூரம் ஒரு தடையல்ல!

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் அதிரைவாசிகளிடையே புத்துணர்வை ஏற்படுத்திய அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த சூட்டோடு இக்கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் அதிரையில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் முன்னோட்ட ஏற்பாடாக சென்னையில் வசிக்கும் 'சேஸ்காம்' அப்துல் ரஜாக் அவர்களின் முயற்சியால் வெவ்வேறு பகுதிகளிலுள்ள அதிரைவாசிகளுடன் உள்ளூர் முக்கிய பிரமுகர்களைக் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும்,பணி நிமித்தமாக வெவ்வேறு பகுதிகளில் வசிப்பதால் அவர்களை இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.அதன்படி அதிரையிலுள்ள இணைய தொழில்நுட்ப இளைஞர்கள்குழு (அதிரைபிபிசி) இதற்கு முன்வந்தது. அதன்படி, சென்னையிலிருக்கும் பிரபல வழக்கறிஞர் அல்ஹாஜ்.A.J.அப்துல் ரஜ்ஜாக் B.A.B.L., தூத்துகுடியில் வசிக்கும் பிரபல அதிரை கல்வியாளரும் சமூகசேவகருமான அல்ஹாஜ். M.S.T.தாஜுதீன் B.A., அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவர் அல்ஹாஜ் M.S.சஹாபுத்தீன், கெளரவ ஆலோசகர்களுள் ஒருவருமான பேரா.M.A.அப்துல் காதர் M.A.M.Phil ஆகியோருடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதியிலுள்ள அதிரைவாசிகளும் கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோ.அஸ்லம் S.H. அவர்களும் கலந்து கொண்டு சர்வ தேசங்களிலும் வசிக்கும் அதிரைவாசிகளிடம் தனக்கு சேர்மனாகும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.


அபூதாபியிலிருந்து சகோ.சாகுல் ஹமீது, துபாயிலிருந்து சகோ.B.ஜமாலுதீன்,சகோ.முஹம்மது ஹுசைன் மற்றும் கனடாவிலிருந்து சகோ.'மான்'ஷேக் ஜலாலுதீன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை தொலைபேசி மூலமாகப்பேசி தெரிவித்தனர்.


பல்வேறு நாடுகளிலிலுள்ள அதிரைவாசிகள் பலரும் இதை அதிரைபிபிசி, அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் அதிரை.இன் ஆகிய தளங்களில் ஒலிவடிவில் நேரலையாகக் கேட்டதோடு, கருத்துப்பரிமாற்ற சாளரம் வழியாக கருத்துக்களையும் தெரிவித்தனர்.குறைந்தகால அவகாசத்திற்குள் இதைச் சிறப்பாக அமைத்துத் தந்த சகோ.மொய்னுத்தீன் மற்றும் சகோ.முஹம்மது ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.இணையதொழில்நுட்ப வரலாற்றிலேயே இத்தகைய நேரலையாக பல்வேறு பகுதிகளிலுள்ளவர்களையும் ஒருங்கிணைப்பது இதுவே முதல்முறை.


இத்தகைய முயற்சிகள் மூலம் அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பை துரிதப்படுத்துவதற்கு தூரம் ஒரு தடையல்ல என்பது நிரூபனமாகியுள்ளது. இதை சாத்தியப்படுத்திய அனைத்து நல்லுங்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
Share:

அனைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு - நேரலை

அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் உதவியால் நேற்று நடந்த அனைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு நேரலை சிறப்பாக நடேந்தேறியது.

மேலத்தெரு சகோ. ஜமாலுதீன் (Dubai), வழக்கறிஞர் A.J. அப்துல் ரஜாக் , M.S .தாஜுதீன்,  பேராசிரியர் அப்துல் காதர், A . ஷாகுல் ஹமீது (ABU DHABI )  ஷேக் (CANADA ) , M.S சிஹபுதீன் ,  மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஜனாப்  அஸ்லம்  CHAIRMAN ELECT
அனைவரும்  தங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

ஹாஜி  A.J.  அப்துல் ரஜாக் அவர்கள் சமுதாய ஒற்றுமை மற்றும் தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவருக்கு தனக்கே உரித்தான வகையில் நல்ல ஆலோசனைகளை தெரிவித்தார். சகோ ஜமாலுதீன் ரத்தினச் சுருக்கமாக அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குறித்து ஆழ்ந்த சிந்தனையுடன் பேசியது எலோரையும் கவர்ந்தது. ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்கள் தெளிவான நோக்கத்துடன் தன் விளக்கத்தை தெரிவித்தார். பேராசிரியர் அவர்கள் தனது துபாய் பயணத்தில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வுக்கு எந்த பெயரைச் சூட்டுவது என்ற குழப்பத்தில் இருந்த போது, அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு நேரலை என்ற தலைப்பை நாங்களாகவே தேர்ந்தெடுத்தோம், அதற்கு உரிதான்வர்களிடத்தில் கேட்காமலேயே!

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து அப்துல் ரஜாக் நடத்திக் கொடுத்ததோடு, அதிரை BBC பொறுப்பாளர்களும் சீரிய முறையில் தங்களின் சேவையை தர தவறவில்லை. அவர்களு  நன்றி உரித்தாகட்டும். இந்நிகழ்ச்சியைத் தங்கள் வலைத் தலங்களிலும் இடம் பெறச் செய்த அதிரை.in, adiraiexpress வலைத்தலங்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறோம்.
ஒலி பரப்பில் இடை இடையே தடங்கல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறோம். வரும் காலங்களில் நல்ல முறையில் சேவை செய்யக் காத்திருகின்றோம்.

அப்துல் ரஜாக்
Share:

பொறுப்பு ஏற்பு அழைப்பிதழ்!


நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகோதரர் அஸ்லம் அவர்கள் மற்றும் 21 வார்டு உறுப்பினர்களும் நாளை காலை பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர் .

நமதூர் சகோதரர்கள் அனைவரும் பணிநிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர். இன்னும் தேர்தல் நேரத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சகோதர்கள் எனக்காக துஆ செய்த நல் உள்ளங்கள் என எனது வெற்றிக்காக அல்லும் பகலும் அயாரது உழைத்த அன்பர்கள் அனைவரையும் நேரில் அழைப்பு கொடுக்க எண்ணினாலும் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் நமதூர் இணையதளங்களில் வாயிலாக அழைப்பு கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்.

எனவே அன்புள்ளம் கொண்ட அதிரை நகர பொதுமக்கள், வாக்காளர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள் அனைவரும் இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று நாளை காலை நடைபெற இருக்கும் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கு தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . வஸ்ஸலாம்.

என்றும் மக்கள் நலப்பணியில் . SH.அஸ்லம்
Share:

19வது வார்டு உறுப்பினர் சகோ சவுதா ஹாஜா அவர்களுக்கு ...

பத்தொன்பதாம் வார்டு உறுப்பினர் சகோதரி சவுதா அவர்களுக்கு(சகோ ஹாஜா)கீழ்கண்ட செய்தியை பாருங்கள்.இதில் எந்த நேரத்தில் ஆபத்து ஏற்படுமோ என்ற நிலை உள்ளது.எனவே இந்த மின் கம்பத்தை உடனே அகற்றி ஆவன செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்.


கீழே உள்ள கட்டுரை சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.
------------------------------------------------------------------------------------------------------
அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில்  குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே,பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.


இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன  செய்ய வேண்டும். 
Share:

பாபரி மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை ஏன்?


இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருகின்ற நவம்பர்19 ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாபர் மஸ்ஜித் மீட்பு யாத்திரை நடத்துவது என சென்ற மாதம் நடந்த பொதுகுழுவில் தீர்மானிக்கப்பட்டது அதன் படி இந்த ரத யாத்திரை வரும் நவம்பர் மாதம் ஆம் தேதி மேலப்பாளையத்தில் தொடங்கி பல்வேறு இஸ்லாமிய ஊர்களுக்கு சென்று நம் பக்கம் உள்ள நியாயங்களை கூறிவருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த மீட்பு யாத்திரை ஏன் என்ற தலைப்பில் சென்னை மண்ணடியில் வடசென்னை மாவட்டத்தின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இதில் மசூதா ஆலிமா ,செங்கிஸ்கான் ,அபூபக்கர் (தொண்டியப்பா) மற்றும் தேசியத்தலைவர் எஸ் எம் பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டு இந்த மீட்பு யாத்திரையின் அவசியத்தை எடுத்துரைத்தனர் இதில் நூற்றுகணக்கான பெண்கள் உள்பட கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மீட்பு யாத்திரை டிசம்பர் 1ஆம் தேதியன்று நமதூர் அதிரைக்கு விஜயம் செய்ய இருப்பதாக பேச்சாளர்கள் கூறினார் .
Share:

பணம் பாதாளம் வரை பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் !

1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார் மகாத்மா காந்தி. அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமிடு போன்று குவியாது, கடல் போன்று பரந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற ஜகாத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா உமர் (ரளி) போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.

சங்கத் தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தழைத்திருந்தது என்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடவோலை முறையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டு கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்து கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடைபெறும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஒரு கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தைக் காட்டுவதிற்காக தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதிரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே காவடி தூக்கச் சென்று விட்டன. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகளிடம் பல லகரம் கொடுத்துத்தான் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டு கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லதான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.

பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திலிருந்து, சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மேன்சன் ஹவுஸ் பிராந்தியை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் "உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார்" என்று ஒலிபெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால், அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். நமது சமுதாயத்தினரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவாக முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?

அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெட்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பை ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தை விட்டு சமுதாய நலன் கருதி சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்தவர்களுக்கு வெண் சாமரம் இனிமேலும் வீசத் தான் வேண்டுமா? கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா? அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே? 

டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
Share:

அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நேரலை

அல்லாஹ் இன்று இரவு இந்திய நேரப்படி 9 30 IST நடைபெற இருக்கும் அணைத்து முஹல்லாஹ் ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முக்கிய பேச்சாளர்களும், நிகழ்ச்சி நிரலும்.

இது ஒரு LIVE STREAMING நிகழ்ச்சியாக இருப்பதால் ஒலிபரப்பில் ஈடுபடுபவர்கள் தாங்கள் பேசும் தொலைபேசி அருகில் கம்ப்யூட்டர் இல்லாதவாறு பார்த்துகொள்ளவும், காரணம் ஒலிபரப்பில் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. கிழே கொடுத்துள்ள நிகழ்ச்சி நிரலை விட சிறு நேரம் அதிகரிக்கலாம்.

9 . 30 PM கிராத்
9. 35 PM நிகழ்ச்சி பற்றி சிறிய விளக்கம் BY அப்துல் ரஜாக்
9. 40 PM பேராசிரியர் அப்துல் காதர் அவர்களின் முன்னுரை 10நிமிடம்
9.. 40 PM ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்கள் சமுதாய ஒற்றுமை , மத நல்லிணக்கம் குறித்து 15 நிமிடம்
9.. 55 PM ஹாஜி M.S தாஜுதீன் அவர்கள் சமுதாய நலன் மற்றும் மேம்பாடு குறித்து 15 நிமிடம்

இதர பேச்சாளர்கள் வெளிநாடுகளின்ருந்து பேச ஆர்வம் தெரிவித்துள்ளனர், பேச விரும்பும் நபர்கள் என்னை தொடர்புகொள்ளவும் நேரம் குறைவாக இருப்பதால் குறுகிய நேரமே ஒதுக்க இயலும் என்பதை அறியவும்.
E MAIL aiabdulrazak@gmail.com Mobile +919841044165 Abdul Razak

மேற்படி நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பும் ஏற்பாடும் செய்த adirai BBC மனார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.இந்நிகழ்ச்சியை adirarai bbc, adiraixpress adirai. in கேட்கலாம்
Share:

லண்டனில் கொண்டாட்டம் !!!

உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட சகோதரர் அஸ்லம் அவர்கள் அமோக வெற்றி பெற்றதையடுத்து வெளிநாடு வாழ் அதிரைவாசிகள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் வரிசையில் இன்று இரவு லண்டனில் வசிக்கும் நூற்று கணக்கான அதிரை வாசிகள் ஓரிடத்தில் குழுமி இரவு உணவுடன் இந்த கொண்டாட்டத்தை கொண்டாடுகின்றனர். அதன் காணொளி மற்றும் புகை படங்கள் நமது அதிரை எக்ஸ்பிரஸ்சில் விரைவில்...
Share:

சங்க உறுப்பினர்களா? மமக உறுப்பினர்களா?


நமது ஊரில் நடைபெற்ற பேரூராட்சித் தேர்தலில் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஆதரவுடன் 19ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு சகோ. செளதா மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் ஆதரவுடன் 17ஆவார்டு உறுப்பினர் பதவிக்கு சகோ. ரஃபீக்கா ஆகியோர் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

இந்த இரு வேட்பாளர்களையும் ஆதரித்து சங்கங்களின் சார்பில் பிரச்சாரமும் செய்யப்பட்டது. இவர்களும் வெற்றி பெற்றுவிட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிலையில், மமகவின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பெயர்களை தமுமுகவின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் நமதூர் சங்கங்களின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இச்சகோதரிகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 

தேர்தலுக்கு முன் ம.ம.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட நோட்டீசில் "மமகவின் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்" என்ற வாசகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதில் அளித்த மமக பொருளாளர், இது அச்சுப் பிழை என்று கூறினார்கள்.

ஆனால், இந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும், அவர்கள் மமகவைச் சார்ந்தவர்கள் என மமக தலைமை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது வருந்தத் தக்கது. இது சங்கத்தையும் நம் சமுதாயத்தையும் ஏமாற்றும் செயல் அல்லவா?

"சங்கத்துக்கு ஆதரவாக இருக்கிறோம். சங்கத்தை எதிர்ப்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ?

ஆக்கம் : அஹ்மது சாஜித்
Share:

துணை சேர்மன் J.பாஞ்சாலன்(JP) !!

துணை சேர்மனாக கரையூர் தெருவைச் சார்ந்த பாஞ்சாலன் JPஅவர்களை நியமிக்க திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து நாளை மறுநாள் பதவி ஏற்பு நிகழ்சிகளுக்கும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .

தலைவராக ஜனாப் அஸ்லம் அவர்களும் துணைத் தலைவராக கரையூர் தெருவை சார்ந்த திரு பாஞ்சாலன் அவர்களும் அவர்களுடன் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் பதவி ஏற்க உள்ளனர் .

இந்த பதவி ஏற்பு விழாவிற்காக சிங்கப்பூர் மற்றும் சென்னையிலிருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்ள இருப்பாதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்தவேண்டும் என தீர்மானித்துள்ளதாக தெரிகிறது .
Share:

ஜொலித்த இரு வைரங்கள் - காணொளி!


ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஆதரவுடன் சுயேட்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 19 மற்றும் 21ஆவது வார்டு உறுப்பினர்களின் நேர்காணல்.

19ஆவது வார்டு உறுப்பினர் சகோ. சௌதாவின் கணவர் சகோ. அஹமது ஹாஜா


21ஆவது வார்டு உறுப்பினர் சகோ. முஹம்மது இப்ராஹீம்


நன்றி: அதிரை.இன்
Share:

மாற்றமே; மாற்றமில்லாதது - சகோ.ஜமாலுதீன்

உள்ளாட்சி தேர்தல் முடிவைத் தொடர்ந்து அதிரையின் நலன் விரும்பிகளின் கருத்துக்களைப் பதிவு செய்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு  வழங்கி வருகிறோம். 

அவ்வகையில், துபையிலிருக்கும் சகோ.ஜமாலுதீன் அவர்கள் மனம்விட்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

Share:

அதிரையில் அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு கலந்துரையாடல்

இன்ஷா அல்லாஹ் இன்று 23-10-2011 ஞாயிற்றுக் கிழமை அதிரையில் நடைபெற உள்ள அதிரை அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு ஆலோசனை அமர்வின் நேரலை உரையாடல் இந்திய நேரம் இரவு 9:30 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலுள்ள அதிரைவாசிகள் நேரலை உரையாடலில் பங்குபெறும் வகையில் கீழ்காணும் நேரப்படி கலந்துகொள்ளலாம்:

சவூதி அரேபியா              =    07:00 PM                 ஐக்கிய அரபு அமீரகம்    =    08:00 PM

மேற்கண்ட நாடுகளிலிலுள்ள அதிரைவாசிகள் தங்கள் மேலான ஆலோசனைகளை மின்மடல் முகவரி aiabdulrazak@gmail.com யிலோ அல்லது இப்பதிவின் பின்னூட்டத்திலோ தெரிவிக்கலாம். மறக்காமல் தங்கள் பெயர், செல்பேசி எண் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டால் மேலதிக தொடர்புகளுக்கு வசதியாக இருக்கும்.

அதிரையின் முஹல்லா ஜமாத்துகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியின் முன்னோட்டமாக நடைபெறும் இந்த இணையவழி நேரலை நிகழ்வில் அதிரைவாசிகள் அனைவரும் பங்குபெறும்படி அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.


இப்படிக்கு,
அனைத்து முஹல்லா ஒருங்கிணைப்பு குழு சார்பில்
அப்துல் ரஜாக் (சேஸ்காம்) சென்னை
Share:

ஹாஜிகள் வருகை!!!

அதிரையிலிருந்து புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் நேற்று இரவு தனியார் பேருந்து மற்றும் தஞ்சை வழியாக இரயில் மூலமாகவும் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
அவர்களை வழியனுப்ப அவர்களது குடும்பத்தினர்கள் ஏராளமானவர்கள் வந்துள்ளனர் .

பயணிகளை மட்டும் சென்னை சூளையில் உள்ள ஹஜ் கமிட்டியிற்கு அழைத்து சென்று அவர்களது உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட் சம்பந்தமான வேலைகளை முடித்துக்கொண்டு அவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட பிரத்த்யோக இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

இவ்வருடம் ஹஜ்ஜிற்கு அதிரையிலிருந்து மொத்தம் 72 பேர் தேர்வாகியுள்ளனர் அதில் முதல் கட்டமாக 24பேர் வருகின்ற 25ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுகின்றனர் .
Share:

அல் அமீன் பள்ளியும் அதிரை அரசியலும்!

அதிரையில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதும் சிலரால் முன்வைக்கப்படும் பிரச்சனையாக அல் அமீன் பள்ளி பிரச்சனை மாறிவிட்டது உண்மையிலேயே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற பொதுவான பிரச்சினைகளுடன் அல் அமீன் பள்ளிவாசல் பிரச்சினையும் முக்கியப் பிரச்சினையாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது இந்தப் பிரச்சினையை முன்வைத்து அதிமுக-மமக கூட்டணியினர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்களித்து ஓரளவு வாக்குகளைக் கவர்ந்தனர்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதும் 2008ஆம் ஆண்டு 21ஆவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் போதும் அல் அமீன் பள்ளிப் பிரச்சனை அரசியலாக்கப்பட்டது.

அல் அமீன் பள்ளி பிரச்சினை ஒன்றும் பாபர் மசூதிபோல் தேசியளவிலான பிரச்சினை அல்ல. அல் அமீன் பள்ளி எழுவதால் முஸ்லிமல்லாதவர்களுக்கு எத்தகைய அச்சுறுத்தலோ அல்லது இடையூறோ ஏற்படப் போவதில்லை. பேருந்து நிலையம் அருகே கோவில், தேவாலயம் ஆகியவை ஏற்கனவே இருக்கும் நிலையில் முஸ்லிம்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ஊரில் பள்ளிவாசலும் அமைவது சமயநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அல் அமீன் பள்ளியை நிர்வகித்துவரும் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் பெயரில், பள்ளிவாசல் பிரச்சினையை மையமாக குறிப்பிட்டு இவர்களுக்கா உங்கள் வாக்கு? என்று கேட்கப்பட்டு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அனைத்துக் கட்சியின் ஆதரவையும் பெற வேண்டிய பள்ளி நிர்வாகிகள், நேரடியாக யாரையும் குறிப்பிடா விட்டாலும்  குறிப்பிட்ட கட்சியினருக்கு சாதகம் / பாதகம் ஏற்படும் வகையில் இவ்விசயத்தில் மூக்கை நுழைத்திருக்க வேண்டியது அவசியமில்லை. இனியும் அல் அமீன் பள்ளி பிரச்சனையில் அரசியலை நுழைப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வின் இறையில்லம் கட்டப்படுவதில் முஸ்லிமான எவருக்கும் மாற்றுக்கருத்தோ அல்லது தடுக்க வேண்டும் என்ற எண்ணமோ கிஞ்சித்தும் இருக்க வாய்ப்பில்லை. ஐவேளை தொழாத முஸ்லிம்கூட ஒரு பள்ளிவாசலுக்கு இடையூறாக நிற்கமாட்டான். எனவே, நடந்துவிட்ட பிரச்சினையில் இருபக்கத் தவறுகளையும் ஆய்வுக்குட்படுத்தி அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் விட்டுக்கொடுத்து விரைவில் இதற்கான தீர்வு காணப்பட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவுக்குப் பின் அதிரை எக்ஸ்பிரசுக்கு பேட்டி அளித்த, பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோ. அஸ்லம் அவர்கள் அல் அமீன் பள்ளி பிரச்சனையைத் தீர்ப்பது தம்முடைய முதல் பணியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இதைக் கருத்தில் கொண்டு, அல் அமீன் பள்ளி நிர்வாகிகள் பேரூராட்சித் தலைவர் அஸ்லம், ஆலிம்கள் மற்றும் ஊரின் முக்கியப் பிரமுகர்களுடன் கலந்தாலோசனை செய்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
Share:

பதவியேற்பு!

அதிரை பேரூராட்சியின் தலைவர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.

அதிரை பேரூராட்சியின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதிரை சேர்மனை நேரடியாகவும், 21 வார்டு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 21ஆம் தேதி நடந்தது . இந்த தேர்தலில் தலைவராக வெற்றி பெற்ற சகோ. அஸ்லாம் அவர்களும், 21 வார்டுகளின் உறுப்பினர்களும் வரும் 25ஆம் தேதி பொறுப்பு ஏற்றுக் கொள்வார்கள்.

இதற்காக அதிரை பேரூராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேலைகளை அதிரை பேரூர் மன்ற ஊழியர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர் .

Share:

சகோ. அஸ்லம் பெரிய ஜுமுஆ பள்ளியில் நன்றியறிவிப்பு! (காணொளி)

அதிரை பேரூராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோ. அஸ்லம் தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்வதற்காக மேலத்தெருவில் உள்ள பெரிய ஜுமுஆ பள்ளியில் ஜுமுஆ தொழுகைக்குப் பின் நன்றி அறிவிக்கும் காட்சிகள்.


நன்றி: அதிரை.இன்
Share:

பேரூராட்சித் துணைத் தலைவர் யார்?

நடந்து முடிந்த பேரூராட்சி மன்றத் தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் நகரசேர்மனாக சகோ. அஸ்லம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பேரூராட்சி துணைத் தலைவரை வெற்றிபெற்ற வார்டு மெம்பர்கள் விரைவில் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில் பேரூராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களை கட்சி ரீதியில் வரிசைப்படுத்தினால் திமுக அதிக உறுப்பினர்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.அடுத்தபடியாக சுயேட்சைகள் ஐந்து வார்டுகளிலும் அதிமுக நான்கு வார்டுகளிலும், ஷம்சுல் இஸ்லாம் சங்கம், தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் கரையூர் தெரு சங்கம் தலா இரு வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு மெம்பர்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அதிரையின் அனைத்து மத, கட்சி மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் துணை சேர்மன் பதவிக்கு முஸ்லிம் அல்லாத ஓர் உறுப்பினரை அனைத்துக்கட்சிகளுக்கும் பொதுவானவராக ஒப்புக்கொள்ளப்படுபவரையே தேர்வு செய்யும் வாய்ப்புள்ளது.

அவ்வகையில், கரையூர் தெரு சங்கம் சார்பில் ஏற்கனவே இருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனினும், ஆளும் கட்சியுடன் தொடர்புடைய பெரும்பான்மை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரே துணை சேர்மன் பதவிக்குத் தகுதியானவர் என்ற அடிப்படையில் கரையூர் தெரு மற்றும் அதிரை இந்து சகோதரர்களின் நன்மதிப்பைப் பெற்ற திரு.பிச்சை அவர்கள் துணை சேர்மனாகும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரூராட்சியில் கட்சி வாரியான பட்டியல்.

வார்டு
வேட்பாளர்
கட்சி
சின்னம்
வாக்குகள்
பலம்
2
உதயகுமார் மீ.
அதிமுக
இரட்டை இலை
392

3
சிவக்குமார் க.
அதிமுக
இரட்டை இலை
329

4
பிச்சை அ.
அதிமுக
இரட்டை இலை
352

15
ஷாஜஹான் பீவி சா.
அதிமுக
இரட்டை இலை
236
4
10
சபுரன் ஜமீலா நை.
காங்கிரஸ்
கை
116
1
19
செளதா அ.ஹா
ச.இ.ச
வைரம்
207

21
முகமது இப்ராஹிம் செ.
ச.இ.ச
வைரம்
498
2
5
விஜய ரெத்தினம் சி.
க.தெ.ச
-
0

6
பாஞ்சாலன் ஜெ.
க.தெ.ச
-
0
2
7
காளிதாஸ் நா.
சுயே.
மேற்சட்டை
492

8
சாகுல் ஹமீது அ.
சுயே.
தென்னைமரம்
123

16
நிலோபர் மு.
தா.இ.ச.
தண்ணீர் குழாய்
487

17
ரபீக்கா மு.
தா.இ.ச.
தண்ணீர் குழாய்
487

18
அபுதாஹிர் நூ.
சுயே.
அரிக்கேன் விளக்கு
312
5
1
அய்யாவு க.
திமுக
உதயசூரியன்
313

9
பசுல் கான் கு.
திமுக
உதயசூரியன்
350

11
உம்மல் மர்ஜான் அ.
திமுக
உதயசூரியன்
357

12
செய்யது முகமது நூ.மு.
திமுக
உதயசூரியன்
304

13
அப்துல் காதர் ஹ.
திமுக
உதயசூரியன்
253

14
முகமது சரீப் மு.
திமுக
உதயசூரியன்
314

20
சித்ரா த.
திமுக
உதயசூரியன்
234
7

திமுக
7
அதிமுக
4
சுயேட்சை
3
ஷ.இ.ச.
2
தா.இ.ச.
2
க.தெ.ச.
2
காங்கிரஸ்
1

Share: