Thursday, June 30, 2011

தொடங்கியது இலவச கணினி கணக்கெடுப்பு !

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். இதை செயல்படுத்தும் விதமாக முதல்கட்டமாக 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு லேப்-டாப் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதற்காக லேப்-டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் மாதிரி லேப்-டாப் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் லேப்-டாப் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கிவிடும்.

இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எவ்வளவு லேப்-டாப் தேவை என பட்டியல் தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பிளஸ்-2 மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, வகுப்பு வாரியாக பட்டியலிடப்பட்டு வருகிறது.


இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது. பிளஸ்-1 வகுப்பில் மாணவ-மாணவிகள் இன்னும் சேர்ந்து வருவதால் முழுமையாக கணக்கெடுத்து முடியவில்லை. ஆனால் பிளஸ்-2 வகுப்புக்கு கணக்கெடுத்து முடிக்கப்பட்டு விட்டது. வகுப்பு வாரியாக பள்ளி கல்வித்துறை அதிகாரி களுக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிரை மாணவ மாணவிகள் தங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும் .மேலும் தனித்தேர்வர்கள் பட்டுக்கோட்டை எஜுகேசனால் அதிகாரியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டு பதிந்து கொள்ள அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுகொள்கிறது .

Wednesday, June 29, 2011

அதிரை இளைஞருக்கு துபை (89.5 FM) வானொளியில் பரிசு!

சில வருடங்களுக்கு முன்பு வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் சக்தி FM வாணொளி 94.7 அலைவரிசையில் இரவு நேரங்களில் தமிழ் செய்திகளை வழங்கி வந்தது. பின்னர் தொடர்ந்து நடத்த முடியாமல் இழுத்து மூடப்பட்டது!

கடந்த ஒருமாதமாக 89.5 பண்பலை வரிசையில் ஹலோ FM என்ற தமிழ் சானல் 24 மணிநேர தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இடையிடையே நேயர்களுக்கு பரிசுப் போட்டிகள் மற்றும் மணிக்கு ஒருமுறை தலைப்புச் செய்திகள் என்று யூஏஇ தமிழர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

துபையில் பணியாற்றும் நமதூர் இளைஞர் சிராஜுதீன் எஸ்எம்எஸ் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசைப் பெற்றுள்ளார். அழகு சாதனம் மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய பரிசுக்கூடை பரிசாக வழங்கப்பட்டது. வழங்கியவர் திரு.க்ரீஸ்.

நாமும் வாழ்த்தை 'சும்மா' சொல்லி வைப்போமே! துபையில் உள்ளவர்கள் 055-8862362 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். (No Missed Calls please :)))

வாழ்த்துக்கள்!

வேகத்தடை, சாலை விரிவாக்கம் மற்றும் மாணவச் செல்வங்கள்!


முன்னரெல்லாம் அதிரையிலிருந்து இராமநாதபுரம் செல்வதாக இருந்தால் சுமார் 4 மணி நேரங்களுக்கும் அதிகமாகும். இப்போது அப்படி இல்லை. இராமநாதபுரத்திலிருந்து இரண்டே மணி நேரங்களில் அதிரை வந்தடையலாம்.

நீண்டபல ஆண்டுகளாகப் பராமரிப்பே இல்லாமல் இருந்து வந்த சேதுசாலை உலகத்தரத்தில் போடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். சேது சாலை போடப்பட்டபின் தஞ்சாவூரில் இருந்து இராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் கூட அதிரை வழியாக வந்து செல்கின்றன. திருவனந்தரபுரத்திலிருந்து வேளாங்கன்னிக்குச் செல்லும் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்றும் அதிரை வழியாக வந்து செல்கிறது.

இதுதவிர, கேரளாவில் இருந்து முத்துப்பேட்டை தர்கா, நாகூர் தர்கா மற்றம் வேளாங்கன்னி போன்ற இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சேதுசாலை வரமாய் அமைந்துவிட்டது.

இப்படி இப்போதே போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக சேது சாலை மாறிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த சாலையின் போக்குவரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும்.

எந்தக் கவலையும் இன்றி சேது சாலையைக் கடந்து காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளிக்கு நாம் சென்று வந்து கொண்டிருந்தோம். தற்போது போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளிக்குச் செல்லும் நமது மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி உள்ளது.

இதுபோன்று பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கு நமது மாணவச் செல்வங்கள் சைக்கிளில் சென்று வருகின்றனர். அதிரைக்கு வரும் பேருந்துகள், அதிரையிலிருந்து செல்லும் பேருந்துகள் என பிசியாகி வரும் பட்டுக்கோட்டை சாலையும் விரிவுபடுத்த வேண்டிய ஒன்றே. குறைந்தபட்சம் ஷிஃபா மருத்துவமனை வரையிலாவது, சாலையின் இரு பக்கத்திலும் நான்கு அடிகள் வரை விரிவு படுத்தி தலா இரண்டு அடிகள் நமது மாணவச் செல்வங்கள் சைக்களில் செல்வதற்காக தடுப்புகளை ஏற்படுத்தி சிறப்புப் பாதைகளாக உருவாக்க வேண்டும். 

சமுதாய அமைப்புகள் இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய இடங்களில் வேகத்தடைகளை நிர்மானிக்கவும் சாலைகளை விரிவுபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும். நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஆக்கம்: முஹைதீன் சாஹிப்

Tuesday, June 28, 2011

மாணவர்கள் பாடு! (கடைத்தெரு சந்திப்பு பகுதி 2)

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா

வஅலைக்குமுஸ்ஸலாம் தம்பி

இன்னைக்கு மீன் மார்கெட்டுல நிறைய கெலக்கனும் பன்னாவுமா குமிஞ்சு கிடக்குது, போய் வாங்கிட்டு வாங்க

என்னமோ மீன் பிடிக்க தடைன்னு சொல்லிக்கிறாங்களே

அப்படியெல்லாம் ஒன்னும் இங்கே தெரியலையே காக்கா

“அப்ப, நியாயமான விலைக்கு வாங்கிருப்பியே!”

அதெல்லாம் இல்லை காக்கா! விலை எல்லாம் அதே விலைதான் விக்குது

சரி சரி... வீட்டுல உடம்புக்கு சள்ள கடுப்பா இருக்குதுன்னு சொன்னாங்க. கெலக்கன வாகிட்டுப் போய் நல்லா காரமா மொளகுதண்ணி வச்சு தர சொல்லணும்

உடம்பு வலிக்கு மட்டும்தான் இந்த மொளகுதண்ணி வச்சி சாப்பிடனுமா காக்கா

அதெல்லாம் இல்ல தம்பி! தடுமலா இருந்தாக்கூட இந்த மொளகுதண்ணியில கொழய கொழய சோறு போட்டு சாப்பிட்டோம்னா நாசியில உள்ள சளி எல்லாம் கம்ப்ரஸ்ஸர் வச்சு அடிச்சமாதிரி வெளியில வந்து தள்ளிடும்

அதுசரி காக்கா, முதல்வரம்மா அவங்க ஜெயிச்ச திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முன்னமாதிரி ஆடம்பரமா வராம ரொம்ப சிம்பிளா வந்ததா பேசிக்கிறாங்களே

அது எப்படி தம்பி தனி விமானத்திலே வற்றது சிம்பிளா? அதப் பத்தியெல்லாம் நமக்கு கவலையில்லை! நல்ல மாதிரியா ஆட்சி செய்யணும். அதுதான் நமக்கு வேணும்

ஆனா இந்த சமச்சீர் கல்வி திட்டத்திலே ஏதோ அம்மா செய்யிறது மக்களுக்கு திருப்தியா தெரியலையே காக்கா! டென்த் ஸ்டூடன்ஸ் எல்லாம், ஏதோ ஒண்ணாம் வகுப்புக்கு போயிட்டு வற்றமாதிரி வற்றானுங்க. என்னடா பாடமெல்லாம் நடக்குதான்னு கேட்டா ஆரம்பத்துலேருந்து நடக்குதுன்னு சொல்லுறான். நான் என்னமோ ஒன்னாவதுலேருந்து திரும்ப தொடங்குறாங்களோன்னு குழம்பிட்டேன்.

எங்க வீட்டுல நாலாம் வகுப்பு படிக்கிற புள்ள, ‘ஆஹா இனிமே நாங்க மூட்டை தூக்குற வேலையெல்லாம் இல்லை வெறும் ஒரு நோட்டுதான்னு ரொம்ப சந்தோஷமா ஸ்கூலுக்கு போயிட்டு வருதுங்க. பாட புத்தகம் அறிவிச்சதுக்கு அப்புறம்தானே தெரியும், மூட்டை தூக்கப் போறாங்களா. இல்ல வண்டியில வச்சு இழுத்துக்குட்டு போறாங்களான்னு

அப்படி என்னதான் பாடதிட்டத்துல இருக்குதோ

அத பார்த்தா தானே தெரியும், கலைஞரை பற்றியே நிறைய பகுதிகள் இருப்பதாகவும் பேச்சு. அதுதான் அம்மாவுக்கு பிடிக்கலன்னு சொல்றாங்க, இருந்தாலும் பாட புத்தகங்களை பார்த்தாதான் சொல்ல முடியும்

மேத்ஸ், சயின்ஸ், இதுலேயெல்லாமா கலைஞர பற்றி பாடம் இருக்குது? அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு இல்லையே, தமிழ் புத்தகத்திலே இருக்கலாம். அத நீக்கப்பட்ட பகுதியா வச்சுட்டு சமச்சீர் கல்விய தொடரவேண்டியது தானே? இன்னொன்னு சொல்லட்டுமா காக்கா! இந்த கல்வி முறையில, நம்ம அண்டைய மாநிலமான கேரளாவ பயன்படுத்தினா நல்லா இருக்கும்

எப்படி?

அதாவது கேரளாவுல CBSE முறையில்தான் புத்தகங்கள் எல்லா மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படுது. ஆனால் ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு அதே புத்தகத்திலிருந்தே பாடங்கள் பிரித்தெடுத்து நடத்தப்படுது. இதிலே வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற மாதிரி எல்லோருக்கும் ஒரே புத்தகம் என்பதால் பாகுபாடு தெரியாதுல

இத கேட்டா தூங்கிகிட்டு இருக்கிற வை.கோ கண்ணை கசக்கிட்டு விழிச்சுடுவார். கேரளா கல்விமுறை தமிழ்நாட்டுக்கு வரக்கூடாதுன்னு போராட்டம் வேற அறிவிச்சுடுவார். இதெல்லாம் இப்போதைக்கு நடக்குற காரியமா

மத்த விசயத்துல எப்படியோ? கல்வி விசயத்துல இவங்க தவறான முடிவு எடுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன், ஏன்னா? இவங்க ஆட்சிய கொடுங்கோல் ஆட்சின்னு சொன்ன காலத்திலேதான் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுல தோல்வி அடஞ்சவங்க, அக்டோபர் வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்ல, உடனே எழுதலாம் என்ற முறைய கொண்டு வந்தாங்க. அதனால கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போமே

காக்கா பேசுறத பாத்தா இலைக்கு ஓட்டு போட்ட மாதிரி தெரியுதே!

அட! இதுவேறயா? நீ பாட்டுக்கு எதுலயாவது கோத்து விட்டுட்டு போயிடாதே! நான் என் மனசுக்கு பட்டத சொன்னேன்

நான் சும்மா தமாசுக்கு சொன்னேன் காக்கா! யார் ஆட்சி செய்தாலும் நம் மக்களுக்கும் நம் சமுதாயத்துக்கும் நல்லது நடக்கணும். அவளவுதான்,

ம். இந்த நொந்துபோன அரசியல் பேசுனதுல நான் வாங்கின மீன் நொந்து போகப்போகுது.

சரி காக்கா! கெளம்புங்க. இன்ஷா அல்லாஹ சந்திக்கலாம்.


சந்திப்பு தொடரும்

காஸ்ட்லி’யானது பள்ளி கல்வி: இன்ஜி., படிப்பை விட எல்.கே.ஜி.,க்கு கூடுதல் கட்டணம்

தமிழகத்தில், புதிது புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டாலும், கல்விக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பட்டப்படிப்பு மற்றும் இன்ஜினியரிங் படிப்பை விட, எல்.கே.ஜி.,க்கு அதிக தொகை செலவழிக்கும் நிலை காணப்படுகிறது. அரசு கல்லூரிகளில் இருக்கும் மதிப்பு, அரசு பள்ளிக்கு இல்லாததால், தனியார் பள்ளிக்கு பெற்றோர் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

உலகமயமாக்கல் கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததும், ஐ.டி., துறை வளர்ச்சி, தமிழகத்தில், சில ஆண்டுகளாகவே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி., துறை வளர்ச்சியால், ஆங்கில அறிவும், இன்ஜினியரிங் படிப்பும் இருந்தாலே, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை ஆங்கிலவழியில் தரவேண்டும் என்ற ஆசை அனைத்து பெற்றோரிடமும் காணப்படுகிறது. இதனால் அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், முன்னணி பள்ளிகளில் சேர்க்கவும் போட்டி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கையில் ஏற்படும் போட்டியை சாதகமாக எடுத்துக்கொண்டு, தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டணங்களை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுகுறித்த புகார் இரண்டாண்டுகளுக்கு முன்பே எழுந்தது. இதனாலேயே சமச்சீர் கல்வி அமல்படுத்த வேண்டும் எனவும், கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பட்டன. ஆனாலும், தனியார் பள்ளிகள் தங்களுக்குண்டான மவுசை விட்டுக்கொடுக்க தயாரில்லை. சமச்சீர் கல்விக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வந்த, அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் பெரும்பாலானவை, “சி.பி.எஸ்.இ.,’ பாடத்திட்டத்தில் புதிய பள்ளிகள் துவக்கி விட்டன...

இப்பள்ளிகளில் குறைந்தபட்சம், 25 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை எல்.கே.ஜி., கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ப்ளஸ் 2 படிப்புக்கென பிரத்யேக பயிற்சியளிக்கும் சிறப்பு பள்ளிகளில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணம் நிர்ணயித்திருந்தாலும், புத்தக கட்டணம், பஸ் கட்டணம் உள்ளிட்ட இதர செலவினங்களை பட்டியலிட்டு, விரும்பும் கட்டணங்களை வசூல் செய்வதை தனியார் பள்ளிகள் விட்டுக்கொடுப்பதேயில்லை.

இதனால் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டாலும், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சேர்ந்தால் கூட, ஆண்டுக்கு அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய் வரையே செலவாகிறது. இன்ஜினியரிங் படிப்புகளை பொறுத்தவரை கவுன்சலிங் மூலம் சேரும் பட்சத்தில், முதல்தர கல்லூரிகளுக்கு, 40 ஆயிரம், மற்ற கல்லூரிகளுக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதில் பெற்றோரின் சுமையை குறைக்க முதல் தலைமுறை குழந்தைக்கான கல்வி உதவித்தொகையும், கல்விக்கடனும் வேறு உதவி செய்கிறது. மேலும் இக்கல்லூரிகளுக்கு தனித்தனியே லேப் வசதி, பேராசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகள் செய்ய வேண்டியுள்ளது.

இவை எதுவும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு தேவைப்படுவதில்லை. ஆனாலும் இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை படிப்பை விட, பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிக்கின்றனர்.

எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வாங்க, இரண்டு நாட்களுக்கு முன்பே பெற்றோர் வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகிறது. ஆனால், அரசு பள்ளியில், கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் அனைத்தும், அரசே செலுத்தியும், பல்வேறு சலுகைகள் வழங்கியும், மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. செயல்வழிக்கற்றல் திட்டம், படைப்பாற்றல் கல்வி முறை என புதுப்புது கல்வி முறை அமல்படுத்தியும், அரசு பள்ளி குறித்த எண்ணம் மக்களிடையே மாறவில்லை. தமிழக உயர்கல்வித்துறையில் இந்நிலை தலைகீழாக உள்ளது.

அரசு இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு பல்கலைகள், கலை அறிவியல் கல்லூரிகளில் சேரவே அனைத்து தரப்பு மக்களும் விரும்புகின்றனர். இன்ஜினியரிங் படிப்பில் கூட அண்ணா பல்கலை மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் சேரவே, பெரும் பணக்காரர்கள் கூட விருப்பம் தெரிவிக்கின்றனர். இதே போல் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு, செல்வந்தர்களும் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டால் மட்டுமே, தனியார் பள்ளிகள் கட்டணத்தை குறைக்கும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமலர்

அதிரை M. அல்மஸ்

Monday, June 27, 2011

என்ன செய்யப் போகிறோம்...?


அஸ்ஸலாமு அலைக்கும்....

தலைப்பைப் பார்த்துவிட்டு வழக்கம் போல இது நமக்கு வேண்டாதவை என்று போய்விடாதீர்கள். நம் ஊரில் அண்மைக் காலமாக நடந்து வரும் கேவலமான விசயத்தை எப்படிச் சகோதரர்களே விரட்டி அடிக்கப் போகிறோம்? ஏதோ தொடர் ஓட்டப் போட்டி நடப்பது போல அல்லவா நம் பெண்கள் பெற்றோரையும் கணவனையும் தனியே விட்டு ஓடிக் கொண்டு இருகிறார்கள்? இன்ஷா அல்லாஹ், இந்தக் கட்டுரை நம் குடும்பங்களில் பல தாக்கத்தை உண்டாக்கும் என எண்ணுகிறேன்.

நமது ஊரில் நடைபெறும் இந்த அவல நிலைக்கு யார் காரணம்? நாம் வெகுதொலைவில் இருக்கிறோம்; பிள்ளைகள் மீது நம் பாசத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் படிக்கும் பிள்ளைகளுக்கு நாம் வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் விரும்பியதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள்தான் இந்த அவல நிலைக்குக் காரணம். இதைத் தடுத்து நிறுத்த என்னதான் வழி?


நம் ஊரில் நடக்கும் இந்த அவலம் நமக்கு ஒரு செய்தி... எதுவரை என்றால், அது நமது வீட்டில் நடைபெறாதவரை. நமது ஊரைப் பொறுத்தவரை திருமணமானவர்களில் 50 சதவீதம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள். இங்குதான் நாம் முதல் தவறைச் செய்கிறோம். திருமணமான சில மாதங்களில் நம் மனைவிகளைத் தனியாக விட்டுவிட்டு வெளிநாடு செல்கிறோம். வெளிநாடு சென்று  பிழைப்பதைத் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் மனைவியைப் பிரிந்து சென்ற நாம் திரும்பி அவர்களிடம் வர எடுத்துக்  கொள்ளும் அவகாசமோ இரண்டு முதல் நான்கு வருடங்களாகும். இங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

வெளிநாடுகளில் இருக்கும் காலத்தில் நம் வேலையின் காரணமாக மனைவியையும் குழந்தைகளையும் மறந்து விடுகிறோம். அவர்களிடம் குறைந்தது வாரத்தில் இரண்டு முறையாவது தொடர்பு கொண்டு போனிலாவது நம் அன்பைப் பொழிய வேண்டாமா...? வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்களின் நிலைமை இதுவென்றால், பிள்ளைகளைப் பெற்ற தந்தையோ, தன் பிள்ளைகள் விரும்பிய செல்போன் எனும் ஷைத்தானை வாங்கிக் கொடுத்து தன் பிள்ளைகள் பாவம் புரிய தாங்களே துணை போகின்றனர். செல்போனை வாங்கிக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்லாமல் அவர்கள் அதை எதற்குப் பயன் படுத்துகிறார்கள் என்பதைத் தங்கள் மனைவிமார்களிடம் தயவு செய்து கண்காணிக்கச் செய்யுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு...

நமது ஊரைப் பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களில் கணவன் ஊரில் இருந்தால் மட்டும்தான் நம் பெண் பிள்ளைகள் அவர்கள் புகுந்த வீட்டில் தங்குவார்கள். திருமணமனாலும் நம் பெண்பிள்ளைகள் நமது வீட்டில் தான் இருகிறார்கள். ஆகவே அவர்களைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

உங்கள் மகள் திருமணம் ஆனவராக இருந்தாலும் சரியே. அவர்களின் செல்போனை அடிக்கடி சோதனை செய்யுங்கள்.

உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து செல்போனை பயன்படுத்தினால் ஏதோ தவறு நடப்பதாக எண்ணுங்கள்.

உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து போன் பேசினால் அடுத்த முனையில் பேசுவது யார் என உங்கள் பிள்ளைகளிடம் விசாரியுங்கள். விசாரிப்பதோடு இல்லாமல் மறுமுனையில் பேசுபவர்களோடு நீங்களும் பேசி அது யார் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பிள்கைகளின் தோழன் / தோழிகளின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அது சில சமயங்களில் உதவும்.

பெண் பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு நீங்கள் வெளியூர் செல்லாதீர்கள். வீட்டில் யாரையேனும் துணைக்கு வைத்துச் செல்லுங்கள்.

தவறைக் கண்டால்...

இனியும் இந்த அவலம் தொடர்ந்தால் நாம் என்ன செய்வது? எவரேனும் தவறு செய்யக் கண்டால் அதை வெளியுலகதிற்கு தெரியப்படுத்தி அவர்களை ஷரீஅத் சட்டப்படி தண்டிக்கலாமா? அல்லது வேறு தண்டனைகள் தரலாமா? எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இந்த அவலதிற்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்க வேண்டும். இதற்காக சங்கத்தில் பிரத்யேகமாக ஆட்களை நியமித்து ஊரைக் கண்கானிக்கச் செய்யலாமா? உங்கள் கருத்துகளையும் கூறுங்கள். உடனடியாக இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

இன்ஷா அல்லாஹ், இனி வரும் காலங்களிலாவது நமது ஊரையும் நம் குழந்தைகளையும் பாதுகாத்து, நம் குழந்தைகளை சுவனம் புகும் கூட்டமாக வளர்ப்போமாக....!

ஆக்கம்: அதிரை சமூகம்

அவன்-இவன்!. எவன் இந்த பாலா?.


சமீபத்தில் பாலா என்ற இயக்குனன் மரியாதை இல்லா தலைப்பில் “அவன் இவன்” என்று ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளான்!. அதில் வழக்கம் போல, சினிமா கூட்டம் முஸ்லிம்களை சீண்டிப்பார்ப்பது போல, தானும் தன் பங்கிற்கும் இதில் சீண்டிப் பார்த்துள்ளான். இதில் வரும் ஒரு காட்சியில், வியாபாரிகள் அடிமாட்டை வாங்கி, விற்பனை செய்ய அடைத்து வைத்திருக்கின்றார். இவ்வாறு மாடுகள் கறிக்காகவும், வியாபாரத் திற்காகவும் வாங்கி விற்பனை செய்வதை கண்டு, மிருகங்களின் மேல் அக்கறை கொண்ட, படத்தில் தன் மர்மஸ்தானத்தை அம்மணமாக திரையில் காண்பிக்கும் சமஸ்தான ஜமீன்(!) ஹைனஸ், பொங்கி எழுந்து புளூ கிராசிற்கு தகவல் தெரிவிக்கின்றார்.

இதனால் ஆத்திரமடையும் அந்த வியாபாரி,

ஏண்டா!, மாட்ட வெட்டி திங்கிறதுக்கே இந்த உருகு உருகிறே!, எங்கோ இருக்கிற ஒட்டகத்தை அவனுவ இங்க கொண்டாந்து வெட்டி திங்கிராங்கல்ல!. அது பேரென்னடா!. குருதானியா?. என்று அருகில் உள்ளவனிடம் கேட்கின்றான்.

அதற்கு அவன், குர்பானி அண்ணே!. என்று அவனுக்கு சொல்லி கொடுக்கின்றான்.

பின் அவனை போய் கேளு!, அவனைபோய் கேளு!! என்று கத்துகின்றான்.

முஸ்லிம்கள், ஹஜ்ஜுப்பெருநாள் அன்று கொடுக்கும், மார்க்க கடமையான குர்பானியை வம்பிற்கு இழுக்கும் காட்சியை வேண்டும் என்றே வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல், இக்காட்சியை காணும் மக்கள் முஸ்லிம்களின் மேல் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமாய் இந்த காட்சியை அமைத்துள்ளான்!.

சரி…..!. அவன் பங்கிற்கு நம்மை வம்பிற்கு இழுத்து விட்டதினால், இனி நாமும் இவனை நம் விருப்பப்படி தோழுரிப்போம்!. மிருகங்களை அறுப்பது கூடாது என்றால், அதே படத்தில் இந்த ஜமீன், வெள்ளைக்காரனோடு காட்டுக்குள் துப்பாக்கி சகிதம் வேட்டையாட செல்லும் காட்சியை ஏன் நீ வைத்தாய்?. மிருகவேட்டை என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?. மிருகவேட்டை உனக்கு மிருகவதையாக தெரியவில்லையா?. அவ்வாறு வேட்டைக்கு செல்பவர்களை தடுக்கும் வன அதிகாரியை அடித்து உதைக்கும் காட்சியையும் வைத்து கேவலப்படுதியது ஏன்?.

பின் வேறொரு காட்சியில், மிருகவதைக்கான புளுகிராஸ்ஸை துணைக்கு அழைக்கும் இந்த ஜமீன், அருவிக்கரையில் அமர்ந்து, கோழியின் சப்பைக்கறியை (Leg piece) ருசித்து, ருசித்து உண்ணுவது போன்ற காட்சியை வைத்து, தனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று, தனக்கு மிருகங்களின் மேல உள்ள இரட்டை நிலையை வெளிப்படுத்தியுள்ளான். மிருகத்தை வதை கூடாது எனும் இவன், இந்தப்படத்தின் இறுதியில் மாட்டு வியாபாரியை உயிரோடு வைத்து கொழுத்தும் காட்சி, எந்த வதையில் சேரும் என்று இந்த கூறுகெட்ட பாலா விளக்கம் தருவானா?.

தற்போதுள்ள மிருகவதை சட்டத்தின் படி, சினிமாவில் மிருகங்களை காட்ட வேண்டும் என்றால், அந்த மிருகத்திற்கு மருத்துவ சான்று வேண்டும். ஆனால் இதில் காட்டப்படும் அத்தனை மாட்டிற்கும் அவ்வாறு சான்று வாங்கப்பட்டதா?. இல்லை என்றால் உடனே இந்த பாலாவை மிருகவதை சட்டத்தின் படி கைது செய்து உள்ளே தள்ளவேண்டும்!.

அதுமட்டுமல்ல, படம் முழுவதும், போலிஸ் மற்றும் ஜட்ஜை கேவலப்படுத்தி இவர்களை கையாலாகாதவர்களை போல் காட்டி, தன் அறிப்பையும் தீர்த்துள்ளான். இந்தப்படத்தில் காவல்துறையை கேவலப்படுதியது போல வேறு எந்தப்படதிலும் இருக்குமா என்பது சந்தேகமே!. இவ்வாறு பல இடங்களில் அரசாங்க துறைகளை, அதிகாரிகளை கேவலப்படுத்திய இவனுக்கு, மத்திய-மாநில அரசுகள், “பல காட்சிகளில் எங்கே பாலாவை காணவில்லை என்று தேட வேண்டி இருந்தது!. திரைக்கதையில் அங்கங்கே சோர்வு இருப்பது சலிப்பு” என்று நக்கீரன் இதழ் இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதி இருப்பதையும் கண்டுகொள்ளாமல், சிறந்த படத்திற்கான விருது வழங்கினாலும் வழங்கும் என்பது இன்னும் கேவலமான செயலாகும்!.

சினிமா என்பது ஒழுக்கங்கெட்டவர்களின் கூடாரம் என்பது நாம் எல்லாம் அறிந்ததே!. ஆனால் அதை எல்லாம் தாண்டும் விதமாக, இந்தப்படத்தில் பாலா என்பவன், ஆத்தாளையும்-மகனையும் பலபேர்களின் முன்னிலையில் குத்துப்பாட்டு ஆட வைத்து, தாய்க்கும் மகனுக்கும் உள்ள உறவைக் கேவலப்படுத்தியும் உள்ளான்!. அதுமட்டும் அல்ல!. அதே தாயை அவள் வரும் காட்சி முழுவதும், புகை பிடிப்பவளாகவும் காட்டி பெண் இனத்தையும் கேவலப்படுத்தி உள்ளான்!. மேலும் படம் ஆரம்பமானது முதல் இறுதிவரை ஒரே மது அருந்தும் காட்சிகள்!. புகைப் பிடிப்பதையும், மது அருந்துவதையும் சினிமாவில் காட்டக்கூடாது என்ற ஆணையையும் மீறிய இந்த பாலாவை கைது செய்து உள்ளே தள்ளவேண்டும். ஏற்கனவே இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஜமீன் ஒருவர் கோர்ட்டை அணுகியுள்ளார்.

முஸ்லிம்களின் நம்பிக்கையை கேள்வி கேட்க யார் இந்த பாலா?. முஸ்லிம்களின் மார்க்க கடமையை இழிவுபடுத்தும் இக்காட்சியை, உடனே நீக்கவேண்டும்!. முதியவரை அம்மணமாகக் காட்டி பலான படம் எடுக்கும் பாலா முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!.

இதுவரை எந்த இஸ்லாமிய இயக்கங்களும் இதுவரை இவனின் இந்த குர்பானி அவமதிப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக நமக்குத் தகவல் இல்லை!.

நன்றி: அதிரை முஜீப்

http://adiraimujeeb.blogspot.com/2011/06/blog-post_112.html

Sunday, June 26, 2011

புதிய பாதையில் அதிரை எக்ஸ்பிரஸ்!

அன்புச் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்களுக்கும் எனக்கும் தொடர்பு இருந்தாலும் அதிரை வலைப்பூக்களுக்கும் எனக்குமான தொடர்பு குறைவே. அவ்வப்போது அதிரை எக்ஸ்பிரஸ் வலைப்பூவை எட்டிப் பார்த்தாலும் சில முறைகளே பின்னூட்டம் இட்டிருப்பேன். கைர்.

கடந்த ஜனவரி மாதத்தில் "தலாக்! தலாக்! தலாக்!" என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸில் எழுதப்பட்ட கட்டுரைக்கு வாசகர்கள் தந்த வரவேற்பைத் தொடர்ந்து, "ரியல் எஸ்டேட் - வரமா? சாபமா?" என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை எழுதினேன். அதன் பின்னர் அதிரை எக்ஸ்பிரஸில் தேர்தல் தொடர்பான அப்டேட்ஸ்களையும் விளையாட்டுச் செய்திகளையும் உடனுக்குடன் அப்டேட்டி வந்தனர். அவர்களின் உடனடி அப்டேட்ஸ் தளத்துக்குப் புத்துயிர் ஈட்டியது. அவர்களுக்கு என் பிரார்த்தனைகள்.

இந்நிலையில், அதிரை எக்ஸ்பிரஸின் முக்கியப் பங்களிப்பாளர்கள் எக்ஸ்பிரஸிலிருந்து விலகிவிட்டதாகவும் எக்ஸ்பிரஸின் மாடரேட்டராக (மட்டுறுத்துநராக) நீங்கள் இருக்க முடியுமா என்றும் கேட்டு எனக்கு மின்னஞ்சல் வந்தது. அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கோரி வந்த மின்னஞ்சல்களையும் எனக்கு அனுப்பியிருந்தனர். வெளிநாட்டில் இருப்பவர்களே பெரும்பாலும் பங்களிக்கும் நிலையில் பல்வேறு பணிச்சூழல்களிடையே அவர்களால் இதில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையைக் கூறி, பதிவுகள் மற்றும் பின்னூட்ட மட்டுறுத்தல் பணிகளில் என் பங்களிப்பைக் கோரினர். எனவே இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளேன். சவூதியில் இருந்து உங்கள் சகோதரனும் அமீரகம் பகுதியிலிருந்து அதிரைக்காரனும் என் பொறுப்புகளில் துணையாக இருப்பார்கள்.

கடந்தகால அதிரை எக்ஸ்பிரஸின் செயல்பாடுகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். அவ்வாறு எவருக்கேனும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அவர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் மன்னிப்புக் கோருகிறேன். முந்தைய பங்களிப்பாளர்கள் பதிந்த தகவல்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், காணொளிகள் எவற்றையும் அழிக்கவோ, திருத்தங்கள் செய்யவோ இல்லை. இவற்றில் தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தனி நபரோ, அமைப்புகளோ, இயக்கங்களோ உணர்ந்தால், அதற்கானச் சுட்டியை adiraixpress@gmail.com என்ற மின்முகவரிக்கு மடலிட்டு அறியத்தந்தால் அவை நீக்கப்படும் அல்லது உங்களது கருத்துகள் அந்தக் கட்டுரைகளில் சேர்க்கப்படும்.

அதிரை எக்ஸ்பிரஸில் வழக்கம் போல அதிரைச் செய்திகள், கட்டுரைகள், காணொளிகள் இடம் பெறும். தனி நபர் தாக்குதல்களோ அல்லது சார்புச் செய்திகளோ இடம் பெறாது. இயக்கங்கள், சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியவர்களுக்கு எதிராக அதிரை எக்ஸ்பிரசுக்கு வாசகர்கள் கட்டுரைகள் எழுதினால், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களின் கருத்துகளையும் அறிந்த பின்னரே பதியப்படும்.

இணையம் சுதந்திரமான ஊடகம். அந்தச் சுதந்திரத்தைச் சுய கட்டுப்பாட்டுடன் கையாள நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் / வாசகர்களின் மீது நம்பிக்கை வைத்து, பின்னூட்ட மட்டுறுத்தல் தற்காலிகமாக நிறுத்தப்படும். தொடர்ந்து அநாகரீகப் பின்னூட்டங்கள் பதியப்படுவது எங்கள் கவனத்துக்கு வந்தால், பின்னூட்ட மட்டுறுத்தல் மீண்டும் செயல்படுத்தப்படும்.

அதிரை எக்ஸ்பிரஸ் பதிவர்கள் மற்றும் பங்களிப்பாளர்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் குழுமம் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் இணைய விரும்பும் பங்களிப்பாளர்கள் மற்றும் அதிரை வாசகர்கள் adiraixpress@gmail.com என்ற முகவரிக்கு தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் மடல் அனுப்ப வேண்டுகிறோம். செய்திகள், நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளைச் செம்மைப்படுத்தப் பயிற்சிகள், தமிழைப் பிழையின்றி எழுதப் பயிற்சிகள் போன்றவை இந்தக் குழுமத்தில் வழங்கப்படும்.

அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டுகிறேன்.

அபூ சுஹைமா

குடி கெட்ட குடி....!


பணிக்குப்பின் பள்ளிக்கூடம் வந்து
என்னைப் பாசத்துடன் அழைத்துச் சென்று
வேண்டிய திண்ப‌ண்ட‌ம் வாங்கித்த‌ருவாய் என‌
தேட்ட‌மாய் இருந்து உன்னைத்தேடினேன்.

மாறாக‌ நீ காத்துக்கிட‌க்கிறாய்
சாராய‌க்க‌டையின் முன் சகதியாய்!
நான் வ‌ந்து அழைத்துச்செல்வேன்
உன்னைப் ப‌த்திர‌மாக‌ வீடு சேர்ப்பேன் என்று.

குடித்து விட்டு இப்ப‌டி க‌விழ்ந்து கிட‌க்கிறாயே!
என் எதிர்கால‌ க‌ன‌வுக‌ளை இப்ப‌டி க‌விழ்த்துவிடாதே!
வாழ்வில் வேத‌னையும் சோத‌னையும் எவ‌ர்க்கில்லை?
குடி, பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வ‌ல்ல; தொட‌க்க‌ம் என‌ அறிய‌மாட்டாயா?

அம்மாவும் உன் வ‌ருகைக்கு ஆசையுட‌ன் காத்திருப்பாள்
அல்வாவுடன் ம‌ல்லிகைப்பூவின் ந‌றும‌ண‌த்திற்காக‌ அல்ல!
சேதாரமில்லாத உன் பாதுகாப்பான‌ வ‌ருகைக்காக‌!
த‌ம்பியும் த‌ங்கையும் உன் கைப்பையின் திண்பண்ட‌த்திற்காக‌!

குடித்து, குடித்து நீ எந்த‌ப்பிர‌ச்சினையைத் தீர்த்தாய்?
க‌ட‌ன் வாங்கி குடும்ப‌த்தைத் திண்டாட‌ வைத்த‌து தான் மிச்ச‌ம்.
எங்க‌ளுக்கு வேண்டிய‌தை வாங்கித்த‌ரும் ஆசைத்த‌ந்தையாய்
நீ என்று மாற‌ப்போகிறாய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ த‌ந்தைய‌ரைப்போல்?

வேண்டாம‌ப்பா! குடித்த‌து போதும்! இன்றே நிறுத்தி விடு!
நினைத்த‌தை சாதிக்க‌ உழைப்பின் ப‌க்க‌ம் திரும்பி விடு!
மாட‌ மாளிகையில் ம‌ன‌ப்புழுக்க‌த்துட‌ன் வாழ‌ வேண்டாம்!
குடிசையில் குடும்ப‌த்துட‌ன் கொண்டாட்ட‌மாய் வாழ்ந்திடுவோம்!

நான் உன்னிட‌ம் ஆசைக்க‌திக‌மாக‌ என்ன‌ அப்ப‌டி வாங்கிக் கேட்டேன்?
நீ குடிக்கு கொடுக்கும் காசில் ந‌ம் குடும்ப‌மே சாப்பிட்டு விட‌லாம‌ல்ல‌வா?
ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைப்போல் காரில் ப‌வ‌னி வ‌ர‌ ஆசை இருந்தும்
உன்னை நல்ல‌‌ அப்பாவாக‌ நாள் தோறும் பார்க்க‌ ம‌ட்டுமே ஆசைப்ப‌டுகிறேன்.

எங்கோ சென்று கொண்டிருக்கும் அவ‌ச‌ர‌ உல‌கில்
நீ ம‌ட்டும் ஐந்த‌றிவுப் பிராணியாய் இப்ப‌டிக்
குடித்துச் சாக்க‌டையில் க‌விழ்ந்து
என்ன‌ சாதித்தாய்? சிந்திக்க‌மாட்டாயா?

வெந்த‌ புண்ணில் வேலைப்பாய்ச்சாதே!
இந்த‌ பிஞ்சு ம‌ன‌சிற்கு வேத‌னையைக் கொடுக்காதே!
குடியால் உன் துக்க‌ம் அரை ம‌ணி நேர‌ம் தீரலாம்
குடிக்காத‌ ந‌ம் வீட்டின‌ர் தீர துக்க‌த்தில் மூழ்கும்.

உன் ஆரோக்கியக்கேடு ஒட்டு மொத்த‌ குடும்ப‌த்தின் கேடு
உன் ந‌ல‌னே எங்க‌ளின் லாபம் தரும் முத‌லீடு!
நீ ந‌ல்ல‌ த‌ந்தையாய் என‌க்கும்
ந‌ல்ல‌ த‌லைவ‌னாய் அம்மாவிற்கும் என்றும் வேண்டும்!

இன்று ச‌ர்வ‌தேச‌ போதை ஒழிப்பு தின‌ம். ஆத‌லால் த‌மிழ் இணைய‌ த‌ள‌மொன்றில் வெளியான புகைப்ப‌டத்தை வைத்து ஏதாவ‌து எழுத‌ வேண்டுமென‌ எண்ணி எழுத‌ப்ப‌ட்ட‌வைக‌ளே மேலே வ‌ரைய‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள். என்றோ குடியின் கேடுக‌ளை ஆணித்த‌ர‌மாக‌ எடுத்துரைத்த‌ ந‌ம் மார்க்க‌ம் இன்று தான் உல‌க‌ம் அத‌ன் கேடுக‌ளை மெல்ல‌, மெல்ல‌ உண‌ர‌த்தொட‌ங்கி இருக்கிற‌து.

ஒரு கால‌த்தில் ப‌ள்ளி, க‌ல்லூரிக‌ளை க‌ட் அடித்து விட்டு சாதாரன ப‌ட‌ம் பார்த்து‌ வ‌ந்தாலே பெரும் குற்ற‌மாக‌ குற்ற‌ உண‌ர்வுட‌ன் உண‌ர‌ப்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் இருந்த‌ அக்கால‌த்தில் இன்று போதை பழ‌க்க‌ம் மாண‌வ‌ர்க‌ளையும் மெல்ல‌, மெல்ல‌ ஆட்கொண்டு வ‌ருவ‌து அதிர்ச்சி த‌ரும் ஆய்வின் முடிவாக‌ உள்ள‌து.

போதைப் பொருட்க‌ள் ஒழிப்பை எவ‌ர் முன்னின்று ந‌ட‌த்தினாலும் நாம் அதில் தாராள‌மாக‌ க‌ல‌ந்து கொண்டு இத‌ன் தீமைக‌ளைப் ப‌ற்றி ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு விழிப்புண‌ர்வை கொடுக்க‌லாம்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

நிர்வாக அறிவிப்பு!


அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரை எக்ஸ்பிரஸ் (http://adiraixpress.blogspot.com) கடந்த 4 ஆண்டுகளாக நமதூர் மற்றும் சுற்று வட்டாரச் செய்திகளையும் பொதுக்கருத்து, ஊர்நலன் சார்ந்த கருத்துகளையும் சார்பு நிலைப்பாடு / விருப்பு வெருப்புகளின்றி, உள்ளது உள்ளபடி நமதூர் மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தன்னார்வலர்களால் கூட்டாக இயங்கி வருவதை அறிவீர்கள்.

போதிய ஆதரவின்றி தொய்வடைந்திருந்த அதிரை.காமின் வெற்றிடத்தை நிரப்பியதோடன்றி, சாதாரண இணைய வலைப்பூ மூலம் நமதூர் மக்களை பல்வேறு பொதுவிசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக நம்புகிறோம். இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிதறிக்கிடந்த அதிரை வலைப்பூக்களைத் தொகுத்தும் புதிய பதிவர்களையும் எழுதத் தூண்டியும் பல்வேறு தளங்களில் எழுதி வந்தவர்களின் எழுத்தார்வத்திற்கு வடிகாலாக அதிரை எக்ஸ்ப்ரஸை இயக்கி வந்தோம்.

அதிரை மக்களுக்காக நடத்தப்படும் பொதுத்தளம் என்பதால், உள்ளூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நமதூர் செய்திகளைப் பதியும் வகையில் பல தனனர்வலர்களுக்கு நேரடியாகப் பதிவெழுதும் வாய்ப்பையும் வழங்கினோம். இவையன்றி, பொதுப்பிரச்சினை சார்ந்த விசயங்களில் தனி நபர்களின் குரல் எடுபடாத நிலையில் அதை அதிரை எக்ஸ்பிரஸுக்கு அனுப்பி உலகெங்கும் உள்ள அதிரைவாசிகளிடம் கொண்டு செல்லும்படியான கோரிக்கைகளையும் பதிவுகளாக வெளியிட்டோம்.

மாணவர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசிகள், பெயர்கூற விரும்பாத ஊர்நல விரும்பிகள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலதரப்பு தன்னார்வலர்களாலும் இயங்கிவரும் அதிரை எக்ஸ்ப்ரஸ் குறித்து சிலர் அவ்வப்போது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும், தேவைப்படின் விரிவான பதிவுகளாக அல்லது பின்னூட்டங்களாக விளக்கியும் வந்துள்ளோம்.

தெருப்பாகுபாடு, இயக்கவெறி, அரசியல் சார்புநிலை, அதிகார அடக்குமுறை என நமதூர்வாசிகளிடம் தெரிந்தோ தெரியாமலோ புரையோடிப்போயுள்ள பல்வேறு விசயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதைத் தவிர தனிநபரையோ, அமைப்பையோ, நிறுவனங்களையோ குறைகூறி தரம் தாழ்த்துவதல்ல எங்கள் நோக்கம் என்பதைப் பல்வேறு பதிவுகளில் நிரூபித்துள்ளதாக நம்புகிறோம்.

எந்தத்தளமும் தானாக இயங்க முடியாது என்பதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்னணியிலிருந்து கொண்டு இயக்கப்பட வேண்டும் என்பதும் அறிந்ததே.அவ்வகையில் கடவுச்சொல் திருடப்பட்டபோதும், தளம் தொய்வடைந்தபோதும் அடைப்பலகை மாற்றம், நேரலை ஒளிபரப்பு மற்றும் பதிவு மற்றும் பின்னூட்ட மட்டுறுத்தல் எனப் பல்வேறு வகையில் எங்களுக்கு உதவியவர்கள் பலர். இறைப்பொருத்தம் நாடிய எங்களுடைய முயற்சிகளில் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்கள் பலர்.

அதிரை எக்ஸ்பிரஸ் தளத்திற்கு தொடக்கம் முதல் ஆதரவளித்து ஊக்கமும் ஆக்கமும் தந்தவர்களுக்கும் எங்கள் குறைகளை நாங்கள் களைளய வேண்டும் என்ற நோக்கில் எங்கள் குறைகளை எங்களிடம் நேரடியாகத் தெரிவித்தவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தன்னார்வலர்களால் நடத்தப்பட்டதால் எல்லா வேளையும் தளத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்கவில்லை. எனவே, நாங்கள் அறியாத சந்தர்ப்பங்களில் சில போது தவறுகள் நிகழந்திருக்கலாம். சாட்டிங்கிலும் பின்னூட்டங்களிலும் சிலர் வரம்பு மீறியிருக்கலாம். அதற்காகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம்.

அதிரை எக்ஸ்பிரஸின் முக்கியப் பங்களிப்பாளராக இருந்த முஹம்மது மற்றும் நிர்வாகி அபுஜைத் உள்ளிட்ட சிலர் தனிப்பட்ட காரணங்களுக்காக அதிரை எக்ஸ்பிரஸிலிருந்து விலகியுள்ளனர். பைத்துல்மால் குர்ஆன் மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் 2011 சட்டசபை தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடனான நேர்காணல், கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுக்களை உடனுக்குடன் காணொளியாகவும், புகைப்படங்களாகவும் வலையேற்றி சாதாரண வலைத்தளம் மூலம் ஊடகமாக செயல்பட முடியும் என்பதை அந்தப் பங்களிப்பாளர்கள் நிரூபித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை எக்ஸ்பிரஸை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தபோது, அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அதன்பால் அக்கறையுள்ள சகோதரர்கள் மின்னஞ்சல்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர்.அதனடிப்படையில் அதிரை எக்ஸ்பிரஸை தொடர்ந்து நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்,


இதைத் தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸின் மட்டுறுத்துனராக சகோ. அபூசுஹைமா (அலி ஆலிம் அவர்களின் மகன்) பொறுப்பேற்க சம்மதித்துள்ளார். சகோதரர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தருமாறு கோருகிறோம்.

பல்வேறு காரணங்களுக்காக எங்களைவிட்டு விலகிச்சென்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து செயல்படலாம், நமக்குள் கருத்துவேறுபாடுகள், தவறான புரிதல்கள் இருந்தாலும், நாமெல்லாம் மார்க்கரீதியில் சகோதரர்களே என்பதை இந்நேரத்திலே நினைவூட்டுகிறேம்.


வஸ்ஸலாம்,

அதிரை எக்ஸ்பிரஸ்.

Saturday, June 25, 2011

முன்னாள் இந்திய ஜனாதிபதி A.P.J. அப்துல்கலாம் அவர்களுடன் அதிரை பிரமுகர்கள் சந்திப்பு


ஜூன் - 5,2011 அன்று முன்னாள் இந்திய குடியரசு தலைவர் மாண்புமிகு A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் சென்னை ராஜ்பவனில் நமதூர் கல்வியாளர்கள் சந்தித்து "கல்வியும் உடலநலமும் ஏன் அவசியம்?" (WHY EDUCATION & HEALTHCARE IS IMPORTANT?) என்ற தலைப்பில் அதிரையில் நடைபெற உள்ள கருத்தரங்கில் சிறப்புரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டது.



சந்திப்பின்போது அதிரையில் பிரபல கல்வியாளர்கள் M.S.T.தாஜுதீன், பேரா.M.A. அப்துல் காதர் மற்றும் A.I.அப்துல் ரஜாக் (Chasecom) ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்:சகோ.முஹைதீன் அன்சாரி

சப்தமில்லாமல் ஒரு சாதனை

நமதூர் அ.மு.க. குடும்பத்தை சார்ந்த,ஷஃபி அஹமது அவர்களின் மகன், இர்ஃபானுத்தீன், சவூதி அரேபியா, ஜித்தாவில் உள்ள Al Wurood International School (AWIS) பள்ளியில் CBSE பத்தாம் வகுப்பு பொது தேர்வில், 9+ அதாவது மொத்த பாடத்தில் 96 சதவீதம் தேர்சிபெடுள்ளார், இச்செய்தி சவுதியின் புகழ்பெற்ற நாளிதழான ARAB NEWS இல் செய்தியாக வெளியாகியுள்ளது.

தேர்ச்சிபெற்ற மாணவனை அதிரை எக்ஸ்பிரஸ் மனதார பாராட்டுகிறது.

Indian schools students shine in grade 10 examinations

By ARAB NEWS


RIYADH/JEDDAH/DAMMAM: Most of the Indian international schools across Saudi Arabia recorded 100 percent passes in the CBSE grade 10 exams. The results were announced on Wednesday.

The International Indian School-Dammam (IISD) maintained 100 percent results for the 12th consecutive year. “Out of 836 students, 748 appeared for school-based exam while 88 students opted for the board exam. Our school secured 100 percent results with eight improvement cases,” said IISD Principal E.K. Mohammed Shaffe. “A total of 428 boys and 412 girls appeared for the exams from the school. Thirty-seven students got 9.6 grade points.

This is the second year of the grading system introduced by the New Delhi-based Central Board of Secondary Education (CBSE) and first year of the school-based Class X annual examinations. “The board based exam students and school based exam students have performed equally good,” he said. “The effort of the school officials to train the teachers and to catch up with the new system worked well,” Shaffe added.

The International Indian School in Jubail also did extremely well having secured 100 percent result. “All 194 students who took the exams in March have been declared passed by CBSE,” said its Principal Syed Hameed. “Outstanding performance was registered by 25 students who have secured CGPA 10 (Cumulative Grade Point Average) in all the five subjects,” he said and explained that “in common man’s language it is centum i.e. hundred out of hundred.” He attributed the school’s success to the hard work put in by the students and the teaching staff. “They deserve all the praise,” he said, and thanked the teachers for their support and guidance.

International Indian School-Riyadh (IISR) Principal M.J. Siddiqui said this year the grade 10 board exam was optional, but 293 students of the school took the exam and 431 other students appeared for the school-based exam. “Absolutely, there is no difference between school conducted and board examination conducted by CBSE,” he said. The total number of students securing all 10 (CGPA) are 45. Twenty-two other students secured 9.8 (CGPA). Thus, 67 students are eligible for the academic excellence award this year from the school.

Thirty-two students have to appear for improvement of performance in July. Last year, he added, the school had only one student scoring all 10. With the introduction of ‘Continuous and Comprehensive Evaluation’ system in scholastic and co-scholastic area, the quality of the result has been improved with 45 students securing all 10.

The International Indian School-Jeddah (IISJ) also reported 100 percent passes. In all 709 sat the exam — 345 boys and 364 girls. All of them passed including 26 supplementary. Those scoring 10 points numbered 58 (37 girls and 21 boys).

The Al Wurood International School (AWIS), Jeddah, also had 100 percent passes. Of its 53 students (29 boys and 24 girls) who appeared at the exam, five got 10 (CGPA) — Abdullah Nasir Jamal (boy), and Fabisha Parveen C.H., Thamanna Haya, Sweety Mol and Ashana Kunnathody, all girls. Eleven of its students got 9+. They are Ibrahim Mafaz, K.M. Nabin, Sanjay Rajendran, Juveriah Farooqi, Ramya Ravishankar, Shana Siddiqui, Mubarra Mansoor, Irfanuddin, Samir Abdul Hamid, Shezin Ashraff and Alex Jerry. Eighteen others got 8+, sixteen 7+ and three 6+, according to AWIS Principal K. Rahamathullah.

The International Indian School-Buraidah also had 100 percent results for the 11th consecutive year. In all students took the board exam. Three of them scored all 10 points — Mast Khwaja Sameen, Mojibi Zainab and Dujana Ashraf. Fourteen students scored above 9 points, according to IISB Principal Nasreen Syed.

The continuous comprehensive evaluation (CCE) system introduced by the CBSE last year has proved to be a boon for grade 10 students, according to all the schools in the Kingdom.

CCE’s benefits have been corroborated by the impressive Class X results declared by the CBSE in which students from the Kingdom notched up an unprecedented performance. Some sat the CBSE board exam, while some others chose the school grading system.

The school principals acknowledge the improvement shown by the students. “Performance across the board, in all categories of schools, has definitely been better in comparison to last year,” one of them said.


Monday, June 20, 2011

புதுமனைத்தெருவின் அவலநிலை.....

இந்த புகை படத்தில் பார்க்கும் குப்பை தொட்டிகள் இருக்கும் இடம் புதுமனைதெரு.
.இங்கு உள்ள குப்பை தொட்டி மக்கள் நடந்து செல்லும் நடை பாதையில் அமைந்துள்ளது.இதனால் கொசுத் தொல்லையும் அதிக துர்நாற்றம் வீசுகின்றது. நடந்து செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே இந்த பொது வழியில் உள்ள குப்பைதொட்டியை அகற்றி வேறு இடத்தில அமைக்குமாறு அங்கு உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.இதுக்கு தெரு வார்டு உறுப்பினரிடம் எவ்வளவோ புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்த புகைபடத்தில் உள்ள மின்கம்பம் 2nd லைன் புதுமனை தெரு TP 941
TP942
இந்த தெருவில் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை.இதனால் இரவில் நடந்து செல்ல பெண்கள் பயபடுகிறார்கள்.அதுமட்டுமில்லாமல் இந்த தெருவில் தொடர் திருட்டு நடக்கிறது.நேற்று முன்தினம் ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்த சத்தம் கேட்டு அங்குள்ள இளைஞர்கள் திருடர்களை பிடிக்க முயன்றபோது தெருவில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.அங்கு திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக நடப்பதால் இரவு 08 மணிக்கு மேல் தெருவில் நடந்து செல்ல மக்கள் பயப்படுகிறாக்கள்.
இத்தொடர்பாக வார்டு உறுப்பினரிடம் (பொறுப்பு )புகார் அளித்தும் எந்த பயனில்லை என்று அந்த தெரு மக்கள் கூறுகிறார்கள்.
இந்த வார்டு உறுப்பினர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில்போட்டியிட வைத்து,வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான்.அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.ஆனால் இவர் சென்னையில் இருந்துகொண்டு அவர் கணவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார் ஆனால் இவர் இந்த வார்டுக்கு உள்ள தேவைகளை சரியாக செய்யவில்லை என்று புதுமனைதெரு வாசிகள் கூறுகிறார்கள். எனவே அங்கு சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர் (பொறுப்பு) இந்த தெருவில் உள்ள தேவைகளை உடனடியாக செய்து கொடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

புகைப்பட உதவி ஹசன்முராத்

Sunday, June 19, 2011

சிறுநீரக கல்.


உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில், சிறுநீரகத்தில், சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் வரை, இந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர்.


'கிட்னி ஸ்டோன்’ என்பதால், அது சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை வெளியேற்றக் கொண்டு செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில் ஏற்படலாம். மிகச்சிறிய கல்லாகவும் தோன்றலாம்; ஒரு எலுமிச்சை அளவுக்கும் ஏற்படலாம். கல்லின் அளவு பொறுத்து, வலியின் தீவிரம் இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல், வலியே இல்லாமல் வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல், அதிக வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியை, பிரசவ வலியோடு ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கி, இருபக்க இடுப்பின் பின் பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகி, பிறப்புறுப்பு வரை பரவும். சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும். சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால், காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்கு, உடலில் நீர்சத்து குறையும் போது, இதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.

பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகி, சிகிச்சை எடுத்து கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும், சிறுநீரகம் வழியே செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும், ரசாயனங்களையும், சிறுநீரகம் பிரிக்கிறது. ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்க, சிறுநீரகமும் சில கரைப்பான்களை சுரக்கிறது. அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள், ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக உருவாகி விடுகின்றன. சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில், பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு, கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீர் அடர்த்தியாக இருந்தாலோ, அடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட, கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும், சிறுநீரகத்தில் கல் உருவாகும்.
எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலே, கல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க, இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறு, டாக்டர் பரிந்துரைப்பார். சில நேரங்களில், ஐ.வி.பி., என்ற, நரம்பில் சாயம் ஏற்றி, கல் இருக்கும் இடத்தையும், அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கற்களை நீக்க, பெரும்பாலான நேரங்களில் கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. நாள் ஒன்றுக்கு, நான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்கு, சிறுநீரகத்தில் கல் இருந்தாலும், சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள் குறித்து அறிந்து கொண்டால், அதை வைத்து, மருந்து, உணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர் பரிந்துரைப்பார். தொடர்ந்து கடும் வலி, மிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அதை அகற்ற முடியும். கல் வளர்ந்து கொண்டே இருப்பது, தொடர் தொற்று ஆகியவை, சிறுநீரகத்தை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற நிலைகளில், அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சிறுநீரகத்தை திறந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் இடத்தில், உடலின் மேற்புறம், மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த அதிர்வலைகள், கல்லைத் தாக்கி, அதை உடைக்கின்றன. பொடியான கற்கள், சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால், செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை முறைகளும் உள்ளன. இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம். 7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது. தற்போது சிறு வயதினர், குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை காணப்படுகிறது. சீனாவில், பால் பவுடரில் உள்ள மெலாமைன் என்ற பொருளால், குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் உருவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பது, உடல் பயிற்சி இல்லாமல் இருப்பது, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற காரணங்களால், கல் உருவாகிறது.


சிறுநீரகக் கல் உருவாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் உள்ளன.

* பச்சை டீ அல்லது பால் கலக்காத டீ குடிப்பது நல்ல பலனைத் தரும். அதில் உள்ள ஆன்டியாக்சிடன்ட் தன்மை, சிறுநீரகத்தில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும்.

* சாத்துக்குடி, எலுமிச்சை சாறு குடிப்பது நல்லது. அவற்றில் உள்ள அமிலம், சிறுநீரில் கலப்பதால், கல் உருவாகும் வாய்ப்பைத் தடுக்கிறது.

* வாழைத் தண்டு சாப்பிடுவது, அதன் சாறை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிப்பது ஆகியவை நல்ல பலனைத் தரும்.

* மட்டன், மீன் சாப்பிடுவதைக் குறைப்பதும் கல் உருவாவதை தடுக்கும்.

* தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மிக மிக நல்லது. கூடவே, தினமும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு தூங்குவ துநல்லது

நன்றி,

தமிழ் மருத்துவம்.

படாத பாடும் பள்ளிக்கூட கல்வியும், பரிதவிக்கும் பெற்றோர்களும்.




ப‌டாத‌ பாடும் ப‌ள்ளிக்கூட‌ க‌ல்வியும், ப‌ரித‌விக்கும் பெற்றோர்க‌ளும்.




முந்தைய‌ அர‌சு ப‌ல‌ க‌ல்வியாள‌ர்க‌ளையும், உய‌ர் அதிகாரிக‌ளையும் க‌ல‌ந்தாலோசித்து பல ஆய்வுகளுக்குப்பின் கொண்டு வ‌ந்த‌ ச‌ம‌ச்சீர் க‌ல்வி முறை இன்று புதிதாக‌ பொறுப்பேற்றுள்ள‌ அர‌சு முந்தைய அரசு கொண்டு வந்த காரணத்தாலோ? என்னவோ? சமச்சீர் கல்வி முறையில் ப‌ல‌ குறைக‌ள் உள்ள‌ன‌ என‌ சுட்டிக்காட்டி அதை அப்ப‌டியே முட‌க்க‌ முய‌ல்கிற‌தா? அல்ல‌து அதில் திருத்த‌ம் கொண்டு வ‌ந்து நீக்கப்பட வேண்டிய பாடங்களை நீக்கி மேலும் சிற‌ப்புட‌ன் வெளியிட்டு மாணவர்களின் கல்வியை செம்மைபடுத்த‌ விரும்புகிற‌தா? என்று ஒன்றும் புரியாத‌ புதிராக‌வும், பேய‌ரைந்த‌ நிக‌ழ்வாக‌வும் தான் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இன்று இருந்து வ‌ருகிற‌து.


இதில் த‌னியார் ப‌ள்ளிக‌ள் மாணவர்களிடம் வ‌சூல் செய்யும் க‌ல்விக்க‌ட்ட‌ண‌த்தில் ஆயிர‌த்தெட்டு குழ‌ப்ப‌ங்க‌ளும், வரம்புமீறல்களும், அதிருப்திக‌ளும் அத‌னால் அர‌சால் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ க‌மிட்டிக‌ளும் (ரெங்கராஜன் மற்றும் ரவி ராஜ பாண்டியன் கமிட்டிகள்), பெற்றோர்களின் போராட்டங்களும், மாணவர்களின் மனக்குமுறலும் என‌ இன்று த‌ர‌மான‌ க‌ல்வி என்ற‌ இல‌க்கு ப‌ல‌ரால் உதைக்க‌ப்ப‌டும் ஒரு கால்ப‌ந்து போல் ஆகிவிட்ட‌து.

இதில் த‌னியார் க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளின் கூட்ட‌மைப்பில் அர‌சு நிர்ண‌யித்த‌ க‌ல்விக்க‌ட்ட‌ண‌த்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் ஒரு குழுவாக‌வும், அதில் அதிருப்தி அடைந்து அது போத‌வில்லை அர‌சு அதை மேலும் உய‌ர்த்த‌ வேண்டும் என்று கூறி அத‌ற்காக‌ உச்ச‌நீதி ம‌ன்ற‌த்தில் மேல்முறையீடு செய்ய‌ வேண்டும் என்ற‌ க‌ருத்து கொண்ட‌வ‌ர்க‌ள் ம‌ற்றொரு குழுவாக‌வும் செய‌ல்ப‌ட்டால் த‌ரமான‌ க‌ல்வி என்ப‌து ஏட்ட‌ள‌வில் இருந்து எட்டாக்க‌னியாகி விடுமோ என்ற‌ அச்ச‌ம் எல்லாத்தரப்பு மக்களிடமும் நில‌வி வ‌ருவ‌து உண்மையே. 


எது,எதெற்கெல்லாம் வெளிநாடுக‌ளை ஒப்பிட்டு பார்க்கும் இக்கால‌த்தில் க‌ல்வித்துறையில் ம‌ட்டும் அவ்வாறு வெளிநாடுக‌ளை ஒப்பிட்டு அத‌ன் வ‌ள‌ர்ச்சிக‌ளையும், முன்னேற்ற‌ங்க‌ளையும், முறைக‌ளையும் ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் நம் நாடில் கொண்டு வ‌ர‌ முனைப்பும், முய‌ற்சியும் காட்ட‌த‌து ஏன்? படித்தவர்கள் நாட்டில் பெருகி விட்டால் அரசியல்வாதிகள் பந்தாடப்பட்டுவிடுவார்கள் என்ற அச்சமா? இல்லை காலமெல்லாம் தனக்கு பல்லக்கு தூக்குபவர்களாக மட்டும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறதோ? என்னவோ தெரியவில்லை?


நாட்டின் குடிம‌க்க‌ள் க‌ள்ள‌ச்சார‌ய‌ம் காய்ச்சி அதனால் அவ‌ர்க‌ளும், அவ‌ர்க‌ள் குடும்ப‌மும் சீர‌ழிந்து நாச‌மாகிற‌து என‌ முத‌லைக்க‌ண்ணீர் வ‌டிக்கும் ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் அத‌ற்காக‌ தானே முன்னின்று ந‌ட‌த்தும் "டாஸ்மாக்" சாராய‌க்க‌டைக‌ளும், அத‌ற்கு கொடுக்கும் மானிய‌ங்கள் என பல சலுகைகள் கொடுத்து ஊக்கப்படுத்தும் இவ்வேளையில் ம‌க்க‌ளுக்கு த‌ர‌மான‌ க‌ல்வி எல்லோருக்கும் பாரபட்சமின்றி கொடுத்து அத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ள் குடும்ப‌ங்க‌ளுக்கும், ஊருக்கும், உல‌குக்கும் ஒளியேற்றி வைக்க‌ க‌ல்வித்துறையை ம‌த்திய‌, மாநில‌ அர‌சே முன்னின்று ந‌ட‌த்தாத‌து ஏன்? அதில் அதிக வருமானம் இண்மையாலா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா?




தேர்த‌ல் ச‌ம‌யத்தில் ஏதேச்ச‌திகார‌ம் பெற்று ஜ‌னாதிப‌தியின் நேர‌டி பார்வையில் இயங்கி த‌னித்துறையாக எவ்வித தலையீடும் இன்றி சிறப்புடன் செயல்படும் தேர்த‌ல் ஆணைய‌ம் போல் க‌ல்வித்துறையையும் ஜ‌னாதிப‌தியின் நேர‌டி பார்வையில் இய‌ங்கும் ஒரு த‌னித்துறையாக‌ கொண்டு வ‌ந்தால் என்ன‌? க‌ண்ட‌திற்கெல்லாம் கோடான‌கோடிக‌ளை ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள் க‌ண் போன்ற‌ க‌ல்விதுறையை க‌ண்டுகொள்ளாம‌ல் விடுவ‌து ஏன்? உயிர்பிச்சை கேட்டு நிற்கும் ஒரு வ‌றிய‌வ‌னுக்கு (கல்வித்துறை) உத‌வ‌ முன்வ‌ராம‌ல் ஓர‌ள‌வு உண‌வு, உடை, இருப்பிட‌ம் பெற்றிருப்ப‌வ‌னுக்கு (டாஸ்மாக்) ஓடோடிச்சென்று இன்னும் ப‌ல‌ வ‌ச‌திக‌ள் செய்து கொடுக்க‌ முனைப்பு காட்டுவ‌து ஏன்? ஊறுகாய் வாங்கி கொடுத்து அவனை (சாராயம் குடிப்பவனை)மேலும் உற்சாகப்படுத்துவது ஏன்?


எங்க‌ளுக்கு இல‌வ‌ச‌மாக‌ ஆடு,மாடுக‌ள் தேவையில்லை, இல‌வ‌ச‌ மிக்ஸியும், கிரைண்ட‌ரும் அவ‌சிய‌மில்லை, வ‌ண்ண‌த்தொலைக்காட்சியும் வ‌ராவிடில் நாங்க‌ள் மாண்டுபோய் விட‌மாட்டோம். தாலிக்கு த‌ங்க‌ம் யாருக்கு வேண்டும்? இவை எல்லாவ‌ற்றையும் க‌ன‌ப்பொழுதில் வாங்கி வ‌ந்து சேர்க்கும் த‌ர‌மான உயர் க‌ல்வி ம‌ட்டும் போதும் எங்களுக்கு. அரசே த‌ர‌ இய‌லுமா? இல்லை கார‌ண‌ம் ப‌ல‌ கூறி த‌ப்பித்து ஓடுமா? 


அமெரிக்காவே ந‌ம் ம‌க்க‌ளின் க‌ல்வித்திற‌மைக‌ளையும், நாட்டின் புத்திசாலி ப‌ல‌ரின் செய‌ல்பாடுக‌ளை நேரடியாக கண்டு விய‌ந்து பாராட்டி மூக்கின் மேல் கை வைத்து நிற்கும் இந்த‌ வேளையில் இப்ப‌டி அர‌சே கல்வித்துறையை அசிங்க‌ப்ப‌டுத்தி பார்க்க‌லாமா? 


அர‌சு இல‌வ‌ச‌மாக‌ கொடுக்கும் ஆடு,மாடுக‌ளால் அன்றாட‌ வீட்டின் பால் தேவை நிறைவேர‌லாம். முறையான‌, த‌ர‌மான‌ க‌ல்வியை ம‌க்க‌ளுக்கு கொடுப்பதால் ப‌ல‌ பால் ப‌ண்ணைக‌ளையே அவர்களால் உருவாக்கப்படலாம் அல்ல‌வா? அத‌ன் மூல‌ம் வேலையில்லாத்திண்டாட்ட‌த்திற்கே வேட்டு வைக்க‌லாம் இல்லையா?

இன்றைய காலகட்டத்தில் ரோட்டோர‌ம் ப‌டுத்துற‌ங்கும் பாம‌ர‌னாக‌ இருந்தாலும் ச‌ரி, மாட‌த்தின் பால்க‌னியில் க‌ட‌ல்காற்று வாங்கும் ப‌ண‌க்கார‌னாக‌ இருந்தாலும் ச‌ரி த‌ன் ச‌ந்த‌திக்கு உய‌ர்த‌ர‌ க‌ல்வியை கொடுத்து விடுவ‌தில் இருவ‌ரும் ஒரே நேர்க்கோட்டில் தான் பயணம் செய்கிறார்கள். ஒருவ‌ன் ப‌ண‌த்துட‌ன் செல்கிறான் மற்றொருவன் வெறும் கையுட‌ன் செல்கிறான். இதை நாடிப்பிடித்து பார்க்க‌ நாம் ஒன்றும் ம‌ருத்துவ‌ உய‌ர்ப‌ட்ட‌ம் பெற‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை. அர‌சுக்கு தெரியாத‌தா என்ன‌? ஏன் இந்த‌ மெத்த‌ன‌ம்? ஊரான் வீட்டு பிள்ளைக்கு உய‌ர்க‌ல்வி கொடுத்தால் தான் பிற‌ந்த‌ நாட‌ல்லவா உல‌க‌ அர‌ங்கில் பிர‌காசிக்கும்? வெறும் வாயிலல்ல உண்மையிலேயே மிளிரும்.


க‌ல்வி என்னும் க‌ண்க‌ளின் பார்வை ம‌ங்க‌ச்செய்ய காரணமாக இருந்து விட்டு பிற‌கு தெளிவான‌ பார்வைக்கு கண் க‌ண்ணாடி இல‌வ‌ச‌ம் என்று கொக்க‌ரிப்ப‌தில் என்ன‌ நியாய‌ம் இருக்கிற‌து? 


த‌னியார் க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளை ந‌ட‌த்தும் க‌ல்வியாள‌ர்க‌ளின் க‌ஷ்ட‌, ந‌ஷ்ட‌ங்க‌ளையும் க‌வ‌னத்தில் கொள்ள‌ வேண்டும் என்று அர‌சு நினைத்தால் குறைந்த கல்வி கட்டணத்தால் அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டும் ந‌ஷ்ட‌ங்க‌ளை உங்க‌ள் மானிய‌ம் மூல‌ம் போட்டு க‌ட்ட‌ வேண்டிய‌து தானே? அதை விட்டு விட்டு அவ‌ர்க‌ளை க‌டிவாள‌ம் பூட்ட‌ப்ப‌டாத‌ குதிரை போல் அவ‌ர்க‌ள் இஷ்ட‌த்திற்கு அவிழ்த்து விடுவ‌து எந்த‌ வகையில் நியாய‌ம்? பொருளாதார‌த்தில் போதிய‌ அள‌வைத்தொட்ட‌வ‌ன் த‌ன் பிள்ளைக‌ளை நீர் கேட்கும் தொகையுட‌ன் கூடுத‌லாக‌வே செலுத்தி அவ‌ன் பிள்ளைக‌ளை ப‌ள்ளியில் சேர்த்து ப‌ர‌வ‌ச‌ம‌டைவான். போதிய‌ வ‌ருமான‌ம் இல்லாத‌வ‌ன் த‌ன் பிள்ளைக‌ளை சேர்க்க‌ நாண‌ய‌மான‌வ‌னாக‌ இருந்தால் ந‌டுத்தெருவில் தான் வந்து நிற்பான். தீய‌குண‌ம் உடைய‌வ‌னாக‌ இருப்பின் த‌வ‌றான வ‌ழியை (லஞ்சம், திருட்டு, கொள்ளை) தேர்ந்தெடுத்து எப்ப‌டியும் த‌ன் பிள்ளையை சேர்த்து விட‌ முய‌ற்சிக்க‌மாட்டான் என‌ நாம் எப்ப‌டி உறுதியாக‌ கூற முடியும்?


நாட்டில் ம‌க்களின் ம‌ருத்துவ‌ சிகிச்சையை தான் இல‌வ‌ச‌மாக்க‌ இய‌ல‌வில்லை. க‌ல்வித்துறையிலாவ‌து முற்றிலும் இல‌வ‌ச‌மாக‌ இல்லாவிட்டாலும் ஓர‌ள‌வு நீதி, நேர்மையாக‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ள் ந‌ட‌ந்து கொள்ள‌லாம‌ல்ல‌வா? க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ எழுத‌ நாம் ஒன்றும் பெரும் க‌ல்வியாள‌ன் அல்ல‌ன். அன்றாட‌ம் காணும் காட்சிக‌ளால் அல்ல‌றும் சாதார‌ன‌ இந்திய‌க் குடிம‌க‌ன். ந‌ம் அன்றாட‌ அவ‌ல‌ங்க‌ளும், ஆத‌ங்க‌ங்க‌ளும், அவ‌சிய‌ தேவைக‌ளும் அர‌சின் பார்வைக்கு சென்ற‌டையுமா? இல்லை நாடு உன‌க்கு என்ன‌ செய்தது என்று பார்க்காதே; நாட்டிற்காக‌ நீ என்ன‌ செய்தாய்? என்று ந‌ம்மீதே கேள்வி கேட்டு நிற்குமா? என‌ வ‌ரும் கால‌ம் தான் ப‌தில‌ளிக்க‌ வேண்டும்.




அய‌ல்நாடுக‌ளில் பல அல்லல்களுக்கிடையே வேலை பார்த்து நம் நாட்டு அர‌சுக்கு அன்னிய‌ச்செலாவ‌ணியை அள்ளித்த‌ரும் ப‌ல‌ ல‌ட்ச‌ இந்திய‌க்குடிம‌க‌ன்களில் நானும் ஒருவ‌னாய், நாட்டு ம‌க்க‌ளின் இன்றைய‌ இன்றிய‌மையாத்தேவையை இங்கு எடுத்துரைத்த‌வ‌னாய்....




மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து


ச‌வுதியிலிருந்து...