மருமகனும் மருமகளும் நம் பிள்ளைகளா!?


ஓர் ஆண் திருமணம் செய்து கொண்டால் அவனுடைய மனைவியின் பெற்றோருக்கு மற்றொரு மகனாக ஆகிவிடுகின்றான். அதைத் தான் மருமகன் என்று அழைக்கின்றோம், அதனால்தான் அவனுக்கு அவனுடைய மனைவியின் தாய்-மாமியார் திரையிட வேண்டிய அவசியமில்லை.

அதேபோல் திருமணத்திற்குப் பின் ஒரு பெண் தன் கணவரின் பெற்றோருக்கு மற்றொரு மகளாக ஆகிவிடுகின்றாள். அதைத் தான் மருமகள் என்று அழைக்கின்றோம், அதனாலேயே அவள் தன் கணவனின் தந்தைக்கு முன் திரையிட வேண்டிய அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

ஆக திருமணத்திற்குப்பின் பெண்வீட்டாருக்கு ஒரு மகனும், ஆண் வீட்டாருக்கு ஒரு மகளும் கிடைக்கின்றனர். இது இயல்பாக இறைவன் ஏற்படுத்திய உறவு.

இந்த உறவை இருவீட்டாரின் பெற்றோரும் எந்த அளவுக்குப் பாதுகாக்கிறனர். அல்லது எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே இன்று நம்முன் நிற்கும் வினா. இதை ஒவ்வொரு பெற்றோரும் நன்கு சிந்திக்க வேண்டும். மேலும் நன்றாக வாழ்ந்த பெரியவர்கள் சிறுசுகளையும் தாம் வாழ்ந்ததுபோல் நன்றாக வாழ விட வேண்டும்.

மருமகனைப் பொறுத்தமட்டில் சில ஊர்களில் தம் மகனாகக் கருதுவோர் உண்டு. சில ஊர்களில் திருமணத்திற்குப்பின் மணமகளுக்குப் பதிலாக மணமகனே மணப்பெண் வீட்டிற்குக் குடிபெயர்கின்றார். இது அதிரையில் உண்டு.

இப்படிப்பட்ட நிலையில் அங்கு மருமகள் கொடுமை என்ற பேச்சுக்கு இடமில்லை. ஏனெனில் அவள் தாய் வீட்டிலேயே இருந்து விடுகிறாள். பொதுவாக நாம் நாளிதழ்களில், மாமியார் தம் மருமகளுக்கு இழைக்கின்ற கொடுமையைத்தான் படிக்க நேரிடுகிறது.

மிக அரிதாகவே மருமகள் தன் மாமியாரைக் கொடுமைப்படுத்துவது நடக்கிறது. இது எதனால்? ஒரு மாமியார் தம் மருமகளைத் தம் மகளாகக் கருதாததால் ஏற்படுகின்ற வினையையே நாம் அன்றாடம் காண்கிறோம்.

ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகளைத் தாம் ஈன்றெடுத்த மகளாகக் கருதத் தொடங்கிவிட்டால் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்காது. மேலும் ஒவ்வொரு மாமியாரும் தம் மருமகனை மகனாகக் கருதி வாழத்தொடங்கிவிட்டால் வாழ்க்கைப்பட்ட வீட்டிலிருந்து பிரச்சனையோ சிக்கலோ தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

திருமணத்திற்குப்பின் ஒவ்வொரு தாயும் தன் மகளைப் பார்த்து, எப்படிமா இருக்குறே? மாப்ளே உன்னெ நல்லா கவனிச்சுக்குறாரா? என்று கேட்பது வழக்கம். இதே வினாவைச் சற்று மாற்றி, அத்தாய் தன் மருமகனிடம், என்னங்க மருமகனே, என் மகள் உங்களை நல்லா கவனிச்சுக்குறாளா? நீங்க சொன்னபடி கேட்டு நடக்குறாளா? என்று கேட்கத் தொடங்கினால் மருமகன் மனது குளிரும். பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனுக்குடன் களைய வசதியாக இருக்கும். மணவிலக்கு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

ஆனால் இப்படிக் கேட்கின்ற துணிவு எத்தனை அன்னையருக்கு இருக்கிறது? அதுபோலவே ஓர் ஆணைப் பெற்றெடுத்த ஒரு தாய் தன் மகனின் வாழ்வையே முக்கியமாகக் கருதுகிறாளே தவிர தன் மருமகளைத் தன் மகன் நன்றாகக் கவனித்துக்கொள்கின்றானா, தாம்பத்திய உறவில் மருமகளுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் நடந்து கொள்கின்றானா என்பதைக் கவனிப்பதில்லை.

தன் மருமகளிடம் இது குறித்தெல்லாம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் துணிவதில்லை. ஆனால் இது குறித்துக் கேட்பது அவளது கடமை. இதே வினாவைப் பெண்ணைப் பெற்ற தாயும் தன் மருமகனிடம் சாடைமாடையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தாம்பத்திய வாழ்வில் பிணக்கு என்றால் அதை உடனடியாகத் தன் மகளிடம் பக்குவமாக எடுத்துக்கூறிச் சரிப்படுத்த முனைய வேண்டும். ஏனெனில் தம்பதியருக்கிடையே தாம்பத்திய உறவில் பிணக்கு ஏற்படாமல் இருவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்துவிட்டால் மற்ற பிரச்சனைகள் நீர்த்துப் போய்விடும். இதை எத்தனை மாமியார்கள் செய்கின்றனர்?

இது போன்ற பிரச்சனைகளை ஒவ்வொரு மாமியாரும் முன்னின்று கவனித்து தன் மருமகனை மகனாகக் கருதி, தன் மருமகளை மகளாகக் கருதி வாழத்தொடங்கி விட்டால் தம்பதியருக்கிடையே மணவிலக்கு ஏற்படாது. மாமியார்-மருமகள் சண்டையும் ஏற்படாது.

மாறாக, இவைபோன்ற விசயங்களில் அக்கறை காட்டாமல் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரச்சனைகளையெல்லாம் பெரிதாக வளரவிட்டு, இறுதியில் வெட்ட வளரவிட்டு, இறுதியில் வெட்ட முற்படுவதால் பல மனங்கள் உடையத் தொடங்குகின்றன. பின்னர் அவற்றை ஒட்டவே முடிவதில்லை.

எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நன்கு சிந்திக்கக் கூடிய நல்ல பக்குவத்தை கொடுத்துள்ளான், அதை யாரும் முறையாக பயன் படுத்துவது கிடையாது.
மாறாக, ஆணவத்தின் உச்சம், நீயா நானா?
இறுதியில் நீ யாரோ? நா யாரோ?

மூமின்களாக இருக்கும் நாம், நமக்குள் உண்டாகும் உறவுகளில், ஷைத்தானின் ஊடுருவலை தடுத்து நிறுத்தி இருக்க மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், எல்லோரும் சுகத்தோடும் நிம்மதியோடும் வாழவேண்டும்.

நமக்குள் இருக்கும் ஈகோ, பொறமை, ஆணவம், வேற்றுமை ஒழியவேண்டும். ஒற்றுமை வளரவேண்டும்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது