தவளையும் உயிர் பிழைக்கணும், பாம்புக்கும் இரையாகனும்., எப்படி சமாளிப்பது!


அன்று ஆற்றங்கரை ஓரம் நான் நின்றது, பார்த்தது, சிந்தித்தது, பின்பு நகர்ந்தது, வாப்பாவிடம் சொன்னது, உம்மாவிடம் சொன்னது, ராத்தாவிடம் சொன்னது, பள்ளி ஆசிரியர்களிடம் சொன்னது, சக மாணவ மாணவியர்களிடம் சொன்னது, புதுமனைத் தெரு சக நண்பர்களிடம் சொன்னது, பேனா நண்பர்களிடம் சொன்னது, வானொலி நண்பர்களிடம் சொன்னது,  யார் யாரிடமெல்லாம் சொன்னது அன்றோடு முடிந்து விட்டாலும், அது இன்றளவும் என் மனதில் நிழலாடுவதை என்னால் விட்டு விட முடியவில்லை. காரணம் இன்னும் பதில் கிடைக்காததினால்.

அது 1970-களில் என் வாலிப நாட்களில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று குறிப்பிட்டால் நிறைய இருக்குது என்று கூறினாலும், இன்றளவும் மறக்க முடியாதது பள்ளி கல்லூரி வாழ்க்கை அதோடு பள்ளி கல்லூரி நண்பர்கள், பேனா நண்பர்கள், வானொலி நண்பர்கள் வட்டாரங்கள், பற்பல சம்பவங்கள்.

பள்ளி படிப்பு, வீட்டுப் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் வானொலிப் பெட்டிக்கு அருகில் இருந்து கொண்டு பல ரேடியோ அலைவரிசைகளை தேடிக்கொண்டிருப்பது, நண்பர்களுக்கு கடிதம் எழுதவது, இலங்கை வானொலி, லண்டன் பி.பி.சி, ரேடியோ மாஸ்கோ, ரேடியோ வெரிதாஸ், இன்னும் பல வானொலிகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவது  ஒரு அலாதியான சுகம் அன்று.

பெரும்பாலும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் படிப்பதற்காக நான் தேர்ந்தெடுத்த இடம், என்னுடைய புதுமனைத் தெரு வீட்டுக்கு மிகவும் அருகாமையில் இருந்த “மர்ஹூம் ஹனிபா ஹாஜியார் தென்னந் தோப்பு இது அமைதியாக, ரம்மியமாக, உட்கார்ந்து படிப்பதற்காக நீரோடை சிமென்ட் வாய்க்கால் இருக்கும். ஆக மொத்தத்தில் மிகவும் நேர்த்தியான தோப்பாக இருந்தது. (தற்போது குடியிருப்பு இடமாக இருக்கின்றது)

இந்த தோப்பு சி.எம்.பி. வாய்காலை ஒட்டியே வடக்கு பகுதியில் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் நமதூரில் முதன் முதலாக ஆழ்துளை கிணறு இங்கேதான் தோண்டப்பட்டது(1974). பூமிக்கு அடியிலிருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீர் வருவதை எல்லோரும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்ததை மறக்க முடியாது. அந்த நீர் சற்று சூடாக இருக்கும், அன்று குளங்கள் ஏரிகள் எல்லாம் நிரப்பமாக தண்ணீரால் நிரம்பி இருந்தாலும், சற்று சூடான நீரில் குளிப்பதற்காக பெண்களில் பலர் இங்கு வந்தனர், பெண்கள் குளிப்பதற்காக நான்கு பக்கமும் ஒரு அடைப்பு சுவரும் இருந்தது.

அந்த நாட்களில் ஒருநாள் காலை வேளையில் படிப்பதற்காக நான் இந்த தோப்புக்கு சென்றேன், இந்த தோப்புக்கு செல்ல வேண்டுமானால் சி.எம்.பி.வாய்க்காலை கடக்க வேண்டும். அப்படி கடக்க போகும் போது ஒரு தவளையின் சப்தம் கேட்டது. “தவளை சாதாரணமாக கத்துவதற்கும், பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருக்கும் போது கத்துவதற்கும் வித்தியாசம் இருக்குது, இது பலருக்கு தெரிந்து இருக்கலாம்.

தவளையின் வித்தியாசமான சப்தம் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருப்பதை எனக்கு உணர்த்தியது. நான் அப்படி இப்படி தேடிப் பார்க்கும்போது தவளை ஒரு பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்டு கத்திக்கொண்டு இருந்ததை பார்த்து விட்டேன். ஒரு சிறிய கல்லை எடுத்து எறியலாம் என்று கல்லை தேடும்போது, ஒரு சிந்தனை என்னை தடுத்தது. அதாவது “தவளையும் உயிர் பிழைக்கணும், பாம்புக்கும் இரையாகனும் எப்படி சமாளிப்பது? சிறிது நேரம் நின்றுவிட்டு, விடை ஒன்றும் தெரியாததினால் அந்த இடத்தை விட்டு நான் கடந்து சென்று விட்டேன்.

இந்த சம்பவம் நடந்து 40-வருடங்களுக்கு மேல் ஆனாலும்,   அது இன்றளவும் என் மனதில் நிழலாடுவதை என்னால் விட்டு விட முடியவில்லை. காரணம் இன்னும் பதில் கிடைக்காததினால்.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---

.
Share:

2 comments:

  1. விடை தெரியாமல் 'சஸ்பென்ஸ்'லே நிறுத்திட்டீங்களே, ஜமாலாக்கா....! அது போகட்டும். பாம்பு விஷ ஜந்து. அதைத்தான் கொன்றிருக்க வேண்டும். இதுவும் போகட்டும். 'இறை' என்றால், இறைவன்; 'இரை' என்றால், விலங்குகளின் உணவு. திருத்துக.

    ReplyDelete
  2. எழுத்து பிழையை சுட்டிக் காட்டியமைக்கு மிகவும் நன்றி காக்கா.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது