முதல்வர் முப்தி முகமது சையது காலமானார்!
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையது உடல் நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலை மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவை அம்மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தார் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

அண்மைகாலாமகா உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்த அணுக்கள் குறைபாடு மற்றும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை காலை காலமானார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 2014 டிசம்பரில் நடைபெற்றது. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன.

பெரும்பான்மை பலம் இல்லாததால் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதனால் அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்தன.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 12-வது முதல்வராக முப்தி முகமது சையது பதவியேற்றுக் கொண்டார். 

முன்னதாக, 2002-ம் ஆண்டில் முப்தி முகமது சையது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மூன்று வருடங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் இரங்கல்:

முப்தி முகமது சையது மறைவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையதின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மனைவி மற்றும் மகளுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


தி ஹிந்து

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது