சார்ஜர் போட்டபடி பேச்சு... செல்போன் வெடித்து 9 வயது சிறுவனின் பார்வை பறிபோனது... சென்னையில் பரிதாபம்சென்னை: சார்ஜரைக் கழட்டாமல் போன் பேசியபோது, எதிர்பாராதவிதமாக போன் வெடித்துச் சிதறியதில் 9 வயது சிறுவனின் கண்பார்வை பறி போன சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட கைகளில் ஆறாம் விரலாய் மாறிப் போய் இருக்கிறது செல்போன். சிலர் ஒன்றுக்கு இரண்டு என செல்போன்களுடன் வலம் வருவதைப் பார்க்கலாம். உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவரும் செல்போனில் நன்மைகளைப் போலவே தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

கடந்தவாரம் அலாரம் அடித்த போது செல்போன் வெடித்ததில் வீடு தீப்பிடித்ததில், சென்னை வியாசர்பாடியில் கணவன், மனைவி, மகன் என ஒர் குடும்பமே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, தற்போது செல்போன் வெடித்து 9 வயது சிறுவன் ஒருவன் பார்வையை பறி கொடுத்துள்ளான்.

சென்னையை அடுத்த மதுராந்தகம் செய்யூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்களில் 3-வது மகன் தனுஷ் (9).

4-ம் வகுப்பு படித்து வரும் தனுஷ், கடந்த சில தினங்களுக்கு முன் சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியுள்ளார். மின் இணைப்பை துண்டிக்காமல் செல்போனை இயக்கி அவர் பேசியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் காயம் ஏற்பட்டது.

சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்த வெண்ணிலா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு வரப்பட்ட சிறுவனுக்கு, வலது கையில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குனர் வகீதாநசீர் தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

செல்போன் வெடித்ததில் சிறுவனின் வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாகவும், இடது கண்ணில் விழித்திரை கிழிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவை சிகிச்சை மூலம் மாற்று கருவிழி பொருத்தப்பட்டது. இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. இதேபோல், செல்போன் வெடித்ததில் அதன் துகள்கள் கண்களில் இருந்தன. அறுவைச் சிகிச்சையின் போது அவற்றையும் மருத்துவர்கள் அகற்றினார்கள்.

மேலும் வலது கண்ணில் கண்புரை காணப்படுவதால், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் அதில் லென்ஸ் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுவனுக்கு இடது கண்ணில் பார்வை திரும்பியுள்ளதாகவும், ஆனால் குறைந்த தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே சிறுவனால் பார்க்க முடிவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய செல்போன் விபத்துக்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நிச்சயம் பெரியவர்களுக்கும் ஒரு பாடம் தான். செல்போன் என்பது ஒரு தொலைத்தொடர்பு கருவி மட்டுமே. அதனை தங்களது உடன்பிறப்பாக எப்போதும் தூக்கிக் கொண்டே சுற்றுவதால் மக்களுக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை மக்கள் உணர வேண்டும்.
K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com


---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது