நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே நம்முடைய வாழ்வு.நம் எதிர்பார்ப்புகளே மனதில் எண்ணங்களாக தோன்றுகின்றன. அவற்றின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும். வாழ்க்கையில் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள், மாற்றங்களை காண்போம்.

வாழ்வில் வெறும் எண்ணங்கள் மட்டும் வெற்றியை தந்துவிடாது. ஆனால் அடிப்படைஏணிப்படிகளாக இருப்பது எண்ணங்கள்தான். முன்னேற்றத்துக்கு எண்ணங்கள் எப்படிகைகொடுக்கிறது? இதுபற்றிய ஆய்வுகள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இங்கே நாம் காணப்போகும் சில ஆய்வு முடிவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆய்வு. அதன் முடிவுகளும் ஆச்சரியமானவை. இனி உங்கள் எண்ணங்களையும், பலன்களையும் வலம் வரலாம் வாங்க

இது சாதாரண மாணவர்களை சாதனை சிகரங்களாக உயர்த்திய ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வல்லுனர் ராபர்ட் ரோசன்தல் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஒரு மாணவன் எப்படி இருந்தாலும் நீ ஜெயித்துவிடுவாய்? உன்னால் முடியாதா?” என்று உற்சாகப்படுத்தினால் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதுதான் இந்த ஆய்வு.

திட்டப்படி ஆசிரியர், சில மாணவர்களை தேர்வு செய்து இவர்கள் திறமைசாலிகள் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் பல நேரங்களிலும், பலர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தப்பட்டனர். இந்தப் பாராட்டை அடிக்கடி கேட்ட மாணவ, மாணவிகள் இடையே புத்துணர்வு பொங்கியது. அவர்கள் ஆசிரியரின் நம்பிக்கையையும், பாராட்டையும் உண்மையாக்கும் வகையில் பலவழிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமின்றி சாதனையாளர்களாக உயரும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவு ஆசிரியர்களுக்கும் சரி, உளவியல் வல்லுனர்களுக்கும் சரி ஆச்சரியத்தையே உண்டாக்கியது. ஒருவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தால் அவர்களும் எதிர்மறையாகவே செயல்பட ஆரம்பிப்பார்கள். நாம் அவரிடம் கொண்டுள்ள எதிர்மறை எண்ணம்தான் இதற்கு காரணம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் நாம் பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதையே அவர்களது மனதில் விதைப்பதால் அதையே அறுவடை செய்கின்றோம். நல்லதையே நினைத்து எதிர்பார்த்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்லதையே வெளிப்படுத்துவார்கள்.

இதுவும் ஒரு சுவையான ஆய்வு. ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் எவ்வாறு அவர்களில் மாற்றங்களைத் தருகிறது என்பது குறித்த ஆய்வாகும்.

இதற்காக ஒரு வகுப்பு மாணவ, மாணவிகளில் ஒரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் திறமைமிக்கவர் என்று கூறப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் சற்று திறமைக் குறைவுடையவர் என்று கூறப்பட்டது.

ஆசிரியரிடம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாடங்களை புரியும்படி நடத்தமாட்டார் என்று கருதியதால் மதிப்பெண் சதவீதம் குறைந்தது. ஆசிரியர் திறமையானவர் என்று கருதியவர்கள் ஆர்வத்துடன் கற்றதை காண முடிந்தது. இது அவரவர்களின் எதிர்பார்ப்பின் விளைவே என்பது வெளிப்படையானது.

எதிர்மறை எதிர்பார்ப்பும் இல்லாமல், ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பும் அதிகளவில் இல்லாமல் அவரவர் எந்த அளவிற்கு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியுமோ அதற்கு உறுதுணையாக இருத்தலே சிறப்பாகும். இயல்பு நிலையில் செயல்படுவதே தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.

1940-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் மிகவும் திறமையானவர்களாக விளங்கிய 95 பேர் உளவியல் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வளர்ச்சியை 30 ஆண்டுகள் கண்காணித்து குறிப்பெடுக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களும் இதற்கு அனுமதித்து பலதகவல்களை அவ்வப்போது கூறிவந்தனர்.

1970-ம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்தது. இறுதி நேர்முகத் தேர்வை 30 வயதைக் கடந்த ஜார்ஜ் வேலியண்ட் என்பவர் நடத்தினார். அப்போது நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தவர்கள் நடுத்தர வயதை தாண்டி இருந்தனர். செனட் உறுப்பினராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், தொழில் முனைவோராகவும் பல்வேறு துறைகளில்சிறந்து விளங்கினர்.

ஆய்வின் அடிப்படையில் பலவிவாதங்களும் நடந்தன. அதன் பின்னர் ஜார்ஜ் வேலியண்ட் தனது நேர்முகத் தேர்வு அனுபவத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதில் சிலரை பேட்டி காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னும் சிலரை பேட்டி காணும்போது தனக்குள் தன் திறமையின் மேலேயே சந்தேகம் ஏற்படும் உணர்வு மேலோங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஏன் தனக்கு இருவிதமான அனுபவம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது பேட்டி எடுக்கும்போது யாரிடம் எல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாரோ அவர்களின் சுபாவமே அப்படித்தான். அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவ்வாறுதான் தோன்றும் என்று அறிந்தார். அவர்கள் சமூகத்துடன் சுமுகமாக ஒத்துப்போகத் தெரியாதவர்கள் என்றும் உணர்ந்தார்.

யாரிடம் பேட்டி எடுத்த அனுபவம் இனிமையாக அமைந்ததோ அவர்கள் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்ததை கண்டார். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்பட தெரிந்தவர்கள் என்பதையும் அவரால் அறிய முடிந்தது.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்த்தும்பாடங்கள் உன்னதமானவை. இவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான்.

* உங்களை யாராவது அலட்சியமாக நினைத்தாலும், இழிவுபடுத்தினாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

* மற்றவரின் குறைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நீங்களும் யார் மனதையும் காயப்படுத்தாமல் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும்.

* நமது செயல்களையும் ஆராய்ந்து வரவேண்டும். எண்ணங்கள் அடிப்படை என்றாலும் செயல்களே முன்னேற்றம் தரும். எனவே எந்த செயலும் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தாமல் உள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் கூறியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை மனதில் அசைபோட்டு அன்னப் பறவை போல சரியானவற்றை சரியான வகையில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துக்கள். வாழ்க்கையின் உண்மைகள் அப்படியே பறித்து சாப்பிடும் பழங்கள் போன்று இருக்கும். சில நேரங்களில் பலாப்பழத்திலிருந்து எடுத்து சாப்பிடக்கூடிய பலாச்சுளை போல இருக்கும். வாழ்க்கை என்பது விபத்தல்ல, விஞ்ஞானம். ஆராய்ந்து அறிந்தால் உயர்ந்துவிடலாம்.

எனவே ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி பலவித அனுபவங்களால் நேர்மறை எண்ணங்களை கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையும் சாதனையாளராக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை!

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது