தாய்க்கு பின் தாரம், தாரமும் தாயும் ஒன்றல்ல. முறையை நீக்கிவிட்டால்! அவர்கள் இருவரும் பெண்கள்தாம்.


உலக வழக்கில், ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லப்படுவதில் ஆழமான காரணம் இல்லாமல் இல்லை. என்றாலும், அந்த உண்மையை மனந்திறந்து வெளிப்படையாய் ஏற்றுக் கொள்வதற்கு ஒருசில ஆண்களின் ஈகோஇடம்கொடுப்ப தில்லை.

ஒரு மனிதனின் வாழ்வில், அவனின் ஆளுமை உருவாக்கத்தில் ஒரு தாயின் பங்கு மகத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. தோழமை உணர்வுடைய சிறந்த தாய்மார்களின் ஒத்துழைப்பினாலும், கனிவான வழிகாட்டல்களாலும் புரிந்துணர்வினாலும் எத்தனையோ மாமேதைகளை இந்த உலகம் அடையப் பெற்றுள்ளது.

ஒரு தாயின் மகத்துவத்தை உரைக்க எத்தனையோ ஆயிரம் நூல்கள் எழுதப்பட்டுள்ளதன் காரணம் இதுவே! மெக்ஸீம் கோர்கியின், “தாய்கூட தாயின் அற்புதத்தை விளக்கும் அழியாத உயிரோவியங்களில் ஒன்று என்பதை நாமறிவோம்.

அவ்வாறுதான் ஒரு மனைவியின் பங்கும். வெளியில் சென்று உழைக்கும் அனேக ஆண்களுக்கு வீட்டுக்குள் இருக்கும் பெண்கள் ஏதோ சும்மாஇருப்பதாய் ஒரு நினைப்பு! வீட்டில் முழுப் பொறுப்பையும் வகித்து, குழந்தைகளுக்கான கடமைகள், வயோதிபர்களுக்கான பணிவிடைகள் என எல்லாவற்றையும் அவள் பார்த்துப் பார்த்துச் செய்து விடுவதால்தான், மன அழுத்தம் இன்றி அந்த ஆண் மகனால் வெளியுலகில் சாதிக்க முடிகிறது என்ற உண்மையைப் பலர் மறந்து/அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

வீட்டில் உள்ள பெண், பொறுப்புக்கள் எனும் மலைகளைச் சுமப்பதன் பயனாய், வெளியுலகில் ஆண்மகன் சாதனைகள் எனும் மாலைகளைச் சுமக்க முடிகிறது. மாறாக, அவனின் திறமைகளால் மட்டுமே அல்ல. வீடு ஒரு போர்க்களம் போல் இருந்தால், தாறுமாறாய் இருந்தால், அவனால் மனதை ஒருமுகப் படுத்தி வேலையில் சாதிக்க முடியுமா?

ஆணோ பெண்ணோ இருவருமே மனித உயிரிகள்தாம். ஒருவரின் பணி அடுத்தவரின் பணியை விட எந்த வகையிலும் உயர்வானதோ இழிவானதோ அல்ல. மாறாக, அவை அனைத்துக்குமே பெறுமானம் (value) உண்டு. ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பவரே! இது மிகச் சாதாரண உண்மை. இந்த யதார்த்தத்தை ஈகோவுக்கு அப்பால் ஒப்புக்கொண்டு ஒருவரை ஒருவர் பரஸ்பரம் மதித்துப் புரிந்துணர்வோடு நடந்தால், குடும்ப வாழ்வில் மகிழ்வுக்கும் நிம்மதிக்கும் என்ன தடை?

புன்னகையுடன்கூடிய நல்ல, இதமான, அன்பான வார்த்தைகள் போதும் எத்தனையோ பிரச்சினைகள், கசப்புணர்வுகள், வெறுப்புணர்வுகள், வெறுமையுணர்வுகளை நீக்குவதற்கு. அதை யாரும் அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை.

வீட்டுக்குள் உள்ள பெண்களின் விஷயத்திலும் இது மிகவும் பொருந்தும். நாள் முழுக்க பல்வேறு வேலைகளில் ஈடுபடும் பெண்களின் உழைப்புக்கு வார்த்தையளவிலாவது உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பது பல வீடுகளில் கசப்பான யதார்த்தம். நாள் முழுக்க வீட்டில் சும்மாத்தானே”(?!)இருக்கிறே?” என்ற அசட்டுத்தனமான கேள்வியால் அப்பெண்களின் மனதை முறித்துப் போடத் தெரிந்துள்ள பலருக்கு, அதே வேலைகளை ஓரிரு நாள் செய்து சமாளித்துக் கொள்ள முடியாமல் தடுமாற நேரும் சந்தர்ப்பத்தில் கூட, பிழையை உணர்ந்து வருந்தி ஒரு சொல் சொல்லுவதற்கு ஈகோ இடம் கொடுப்பதில்லை.

சமையல் நன்றாய் இருக்கும்போது ஒரு சொல் பாராட்ட வாய் வராதவர்கள், எப்போதாவது உப்பு, புளி, காரம் கூடிக் குறைந்துவிட்டால் மட்டும் வக்கனையாய்க் குறை சொல்லத் தயங்குவதே இல்லை என்பது மிகச் சாதாரண உண்மை. வீட்டுக்கு வெளியே நாகரிகம்கருதி, இது நல்லா இருக்கு, அது அழகா, நேர்த்தியா இருக்குஎன்றெல்லாம் வார்த்தைகளில் வள்ளல்களாய் இருக்கும் அனேகர், தம் வீடு என்று வரும்போது மட்டும் படு கஞ்சர்களாகி, அதே நாகரிகத்தைமறந்துவிடுகிறார்கள்.

மனைவிக்கு அன்போடு ஒரு கவளம் உணவூட்டி விடுவது தர்மம் ஆகும் என்று முஹம்மது நபி (ஸல்) சொன்னார்கள் என்று நீட்டி முழங்கும் அனேகர், திருமணமான புதிது தவிர, அந்த வழிமுறையைத் தொடர்ந்தும் இருந்திருந்தாவது கைக்கொள்கிறார்களா என்ற கேள்வியைத் தமக்குள் எழுப்பிக் கொள்ளலாம்.

வீட்டு வேலைகள் என்றால் பெண்ணுக்கே சொந்தம்; அவற்றை ஆண் செய்வது இழிவு என்ற மனநிலை இனிவரும் தலைமுறையினர் மத்தியிலாவது  மாற்றப்பட்டு, ‘எந்த வேலையும் இழிவல்ல; நம் வீட்டு வேலையை நாம்தான் செய்ய வேண்டும்என்ற எண்ணத்தை ஊன்றி வளர்க்க முனைய வேண்டும். அது ஆண் பெண்ணிடையே பரஸ்பர புரிந்துணர்வை மரியாதையை வளர்க்கப் பெரிதும் உதவும்.

ஆகக் குறைந்த பட்சம் நோய்வாய்ப்பட்ட நேரத்திலாவது கணவனால் வீட்டுப் பணிகளைப் பொறுப்பேற்கக் கூடியதாய் இருப்பதோடு, மனைவிக்கு கணவன் மீதான காதலை மேம்படுத்தவும் அது காரணமாய் அமையும். குழந்தைகளும் அதை மிகச் சிறந்த முன்மாதிரியாய்க் கொள்வார்கள். கூட்டுப் பொறுப்பு குறித்த உணர்வு அவர்கள் மத்தியில் வலுப்பெறும்.

குடும்ப அங்கத்தவர் மத்தியில் விரக்தி, வெறுமையுணர்வு, தனிமை உணர்வு என்பவற்றால் விளையக்கூடிய எதிர் விளைவுகள் கணிசமாய்த் தவிர்க்கப் படுவதில் இதமான, அன்பான வார்த்தைகளும், எளிய அன்பான செய்கைகளும், சின்னச் சின்ன பரிசுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற புரிதல் பரவலாக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை.

மற்றொரு முக்கியமான விஷயம், இது போன்ற சின்னச் சின்ன சிக்கல்கள் குறித்துப் பொதுத் தளத்தில் பெண்கள் பேச முனையும்போது, அது தனிப்பட்ட/சொந்த அனுபவம் என்பதாய்க் கட்டம் கட்டிப் பார்க்கப்படும் நிலைமையே பரவலாய் இருப்பதால், இது போன்ற விடயங்களைப் பகிரங்கமாய்ப் பேசப் பலரும் தயங்குகின்ற நிலைமையே காணப்படுகின்றது.

என்றாலும், சமூகத்தில், குடும்பத்தில் எழக் கூடிய பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்த பரவலான கலந்துரையாடல்களே இது குறித்த விழிப்புணர்வையும் தவறுகள் களையப்படுவதற்கான வாய்ப்பையும் அளிக்கின்றன என்பதை நாம் அனைவரும் மனங்கொள்ள வேண்டும்.


K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.com
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது