குமாரசாமி தீர்ப்பின்படியே ஜெ.வின் கடன் ரூ10 கோடி; ஆனால் ரூ24 கோடி என தப்பாககணக்கீடு- ஆச்சாரியார்

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடகா உயர்நீதிமன்ற(நீதிபதி குமாரசாமி) தீர்ப்பின் அடிப்படையிலேயே ஜெயலலிதா வாங்கிய கடன்கள் ரூ10 கோடி; ஆனால் கடன்களை ரூ24 கோடி என பிழையாக கணக்கு போடப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா சுட்டிக்காட்டினார். 

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா முன்வைத்த வாதம்: கர்நாடகா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில பிழைகள் இருக்கின்றன. ஜெயலலிதா கடன்கள் மூலம் பெற்ற வருவாய் ரூ24.17 கோடி என அத்தீர்ப்பின் ஒரு பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே தீர்ப்பில் ஜெயலலிதா 10 முறை பெற்ற லோன்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது. அதன் கூட்டுத் தொகையோ ரூ10.67 கோடிதான் வருகிறது. 

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் இருந்து 5 முறை கடன்கள் பெறப்பட்டதாகவும் இந்தியன் வங்கியின் திருவாரூர் கிளையில் இருந்து 6-வது முறையாக கடன் பெறப்பட்டதாகவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கிறது. மேலும் ஜெயலலிதாவின் ரூ24.17 கோடி கடன்களை வருவாயாக கீழ்நீதிமன்றமும் அரசு தரப்பும் கருதவில்லை; இந்த கடன் மூலமான வருவாயையும் சேர்த்தால் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 8.12%தான். இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்படும் வழக்கில் வருமானத்தைவிட கூடுதலாக 10%க்கும் குறைவாக சொத்துகள் சேர்க்க அனுமதிக்கலாம் என்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் (நீதிபதி குமாரசாமி) தீர்ப்பில் கூறப்படுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா பெற்ற கடன்கள் ரூ10 கோடிதான். 

ஆனால் இதே தீர்ப்பில் ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறித்து கூறும் போது ஜெயலலிதா வாங்கியது ரூ24.17 கோடி கடன்கள்; இதுவும் ஒருவகையில் வருவாய் எனக் கூறப்பட்டு அதனடிப்படையில் ஜெ. கூடுதலாக சேர்த்த சொத்தின் மதிப்பு வெறும் 8.3%தான் என கூறப்பட்டுள்ளது. ஆக ரூ10 கோடி கடனுக்குப் பதிலாக ஜெயலலிதாவின் சொத்துகளில் ரூ13 கோடி கடன் கூடுதலாக அதாவது ரூ24.17 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தவறை கழித்துவிட்டு கர்நாடகா உயர்நீதிமன்ற தீர்ப்பின்படியே ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை மதிப்பீடு செய்தால் அவர் தம்முடைய வருமானத்தைவிட 76.75% கூடுதலாக சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறார் என்பது தெரியவரும். 

ஆகையால் ஜெயலலிதா உள்ளிட்டோரை கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) விடுதலை செய்து அளித்த தீர்ப்பு லாஜிக் இல்லாதது. தவறானது. இவ்வாறு பிவி ஆச்சார்யா கூறினார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது