2016 ஆம் ஆண்டுக்கான பி.இ. சேர்க்கை: இணைய வழி மட்டுமே பதிவு!

2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
வழக்கமான விண்ணப்பம் விநியோகிக்கும் முறையை தவிர்த்து, இணையதளம் மூலம் மட்டுமே இந்த ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.annaunivtnea.edu என்ற இணையதளம் மூலம் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் காரணமாக அச்சடிக்கப்பட்ட காகித வடிவிலான விண்ணப்ப விநியோகம் இருக்காது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் அளித்த பேட்டி:
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முதன் முறையாக ஆன்-லைன் மூலம் மட்டுமே விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மேம்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், விண்ணப்பப் படிவத்தைப் பெறுவதற்காக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதையும், நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விவரங்களைப் பதிவு செய்யலாம். இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 14-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்படும்.
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான 7 நாள்கள் வரை ஆன்-லைன் மூலம் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
ஆன்-லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட விவரங்களை, மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து `செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு  பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
60 உதவி மையங்கள்
ஆன்-லைன் மூலம் பதிவு செய்வோருக்கு உதவும் வகையில் வகையில் தமிழகம் முழுவதும் 60 உதவி மையங்களை அமைக்கப்படும். அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்படும்.
இந்த மையங்களை மாணவர்கள் தொடர்புக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதோடு, விவரங்களையும் பதிவு செய்து கொள்ளலாம்.
கட்டணம் எவ்வளவு
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினர் ரூ. 500க்கான வரைவோலையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது