இந்தியாவில் மனைவியின் விருப்பமின்றி உறவு கொண்டால் கிரிமினல் குற்றமா?


மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்கினால் குடும்ப உறவு முறை சீர்குலைந்து விடும் என்று நாடாளுமன்ற குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு சட்ட அமைச்சகத்திடம் கோரப் பட்டிருக்கிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி தெரிவித் துள்ளார். 

கடந்த 2012 டிசம்பரில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவ துணை மாணவி ஜோதி சிங் ஓடும் பஸ்ஸில் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆராய நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன்படி பெண்கள் மீது ஆசிட் வீசினால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் ஓராண்டு சிறை, பாலியல் தாக்கு தலில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை, பலாத் காரத்தில் பெண் உயிரிழந்தால் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை முதல் மரண தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 

நீதிபதி வர்மா அளித்த பரிந்துரையில் திருமணமான தம்பதிகளில் மனைவி விருப்பத்துக்கு மாறாக கணவர் உறவு கொண்டால் அதை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை தொடர்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் சவுத்ரி மக்களவையில் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது: 

மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்கினால் குடும்ப உறவு முறை சீர்குலைந்துவிடும் என்று நாடாளுமன்ற குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திடம் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உறவு கொள்வதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்று மத்திய குழந்தைகள், மகளிர் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது