உத்தரகாண்ட் மாநில ஜனாதிபதி ஆட்சி என்ன ஆகும்? சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு ஐகோர்ட்டு உத்தரவால் அதிரடி திருப்பம்நைனிடால்,
உத்தரகாண்ட் சட்டசபையில் நாளை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரகாண்ட் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்மந்திரி ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 70 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதாவுக்கு 28 உறுப்பினர்களும், காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் முற்போக்கு ஜனநாயக முன்னணிக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இது தவிர ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ. ஒருவரும் இருக்கிறார்.

கடந்த 18–ந் தேதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து மாநில சட்டசபையில் நிதி மசோதாவின்போது, ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

சபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும்படி அவர்கள் மாநில கவர்னர் கிருஷ்ணகாந்த் பாலை சந்தித்து கோரிக்கையும் விடுத்தனர். இதனால் ஹரிஷ் ராவத் மார்ச் 28–ந் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி ஆட்சி
இந்த நிலையில் முதல்மந்திரி ஹரிஷ் ராவத் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தவிர, சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்சால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.

எனவே, சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது அமளி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி கவர்னர் கிருஷ்ணகாந்த் பால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதனால், சட்டசபையில் ஓட்டெடுப்பு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதிரடி உத்தரவு
உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து, ஹரிஷ் ராவத், நைனிடாலில் உள்ள ஐகோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது 2–வது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. இருதரப்பு வக்கீல்களும் தங்களுடைய வாதத்தை தொடர்ந்தனர். அப்போது ஹரிஷ் ராவத் தரப்பில் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட ஒருநபர் அமர்வு நீதிபதி யு.சி.தியானி, மாநில சட்டசபையில் மார்ச் 31–ந் தேதி (நாளை) ஓட்டெடுப்பு நடத்தும்படி அதிரடியாக உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

வாக்களிக்கலாம்
இந்த ஓட்டெடுப்பில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு வாக்களிக்கலாம். அவர்களுடைய ஓட்டுகள் தனியாக ஒரு உறையில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். ஐகோர்ட்டு பார்வையாளரின் கண்காணிப்பின் கீழ் சட்டசபையில் இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநில போலீஸ் டி.ஜி.பி. செய்ய வேண்டும்.

தங்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்ததை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த ஓட்டுகள் செல்லுபடி ஆகுமா? என்பது குறித்து கோர்ட்டு ஏப்ரல் 1–ந் தேதி (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.
வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீங்கலாக உள்ள 62 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு தீர்ப்பு அளிப்பாரா? அல்லது சட்டசபையில் மொத்தம் உள்ள 71 எம்.எல்.ஏ.க்களையும் (நியமன எம்.எல்.ஏவையும் சேர்த்து) கணக்கில் எடுத்துக்கொண்டு தீர்ப்பு அளிப்பாரா? என்பது தெரிய வரும்.

பின்னடைவு
முதல்மந்திரி ஹரிஷ் ராவத் கூறும்போது, ‘‘ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மோடி அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். இதன் மூலம் மத்திய அரசின் முடிவு தவறு என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை சீர்குலைக்க முயற்சிக்கும் மோடி அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த உத்தரவு பின்வாங்கச் செய்வதாக அமைந்து உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே நீதிபதியை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் பட் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் தனியாக சந்தித்தனர்.

இது குறித்து அஜய் பட் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நிதி மசோதாவை நிறைவேற்ற சட்டசபையில் பகுதி வாரி ஓட்டெடுப்புக்கு விடாமல் சபாநாயகர் தடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக கூறியது தொடர்பான உத்தரவை பிரதான வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

புதிய திருப்பம்
உத்தரகாண்ட் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடத்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் இந்த பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் மாநிலத்தில் அமலில் உள்ள ஜனாதிபதி ஆட்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறதா? மற்றும் நீக்கம் செய்யப்பட்ட ஹரிஷ் ராவத் ஆட்சி மீண்டும் ஏற்பட்டு இருக்கிறதா? என்பதில் தெளிவான நிலை உடனடியாக தெரிய வரவில்லை.

இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி என்னவாகும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

மத்திய அரசு மேல்முறையீடு?
உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் முன்பாக மத்திய அரசு இன்று (புதன்கிழமை) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.

இதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பற்றிய நீதிபதியின் தீர்ப்பின் ஒரு பகுதி குறித்து காங்கிரசும், உத்தரகாண்ட் ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் முன்பாக மனுதாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

K.M.A. Jamal Mohamed.,
S/o. K Mohamed Aliyar (Late)
President.
Pattukkottai Taluk.
National Consumer Protection Service Centre.
State Executive member.
Adirampattinam-614701.
consumeradirai@gmail.comShare:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது