மாணவர்களை மிரட்டும் பெற்றோர்கள்! வெற்றி நமது வசமாகும்!

இதனை படிக்கும் ஒவ்வொரு பெற்றோர்களும் அரசு பொது தேர்விற்கு இன்னும் சில நாட்களே உள்ளன அப்படி இருக்கும்போது இவர்கள் ஏன் இப்படி சொல்கின்றனர் என மனதில் எண்ணலாம் உண்மையில் இது நீங்கள் எண்ணுவது போன்றதல்ல. பிள்ளைகளை பெற்று அவர்களை பள்ளிகளில் படிக்க வைக்கும் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பொதுதேர்வினை என்னமோ பெரிய அளவில் பில்டப்புகள் செய்து மாணவர்களின் மனதுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டனர்.இதனால் மாணவர்களின் மனநிலை அடையும் மாற்றங்கள் என்ன ?
நமது பெற்றோர்கள் சொல்வதை பார்த்தால் அரசு பொதுத்தேர்வுகளை நம்மால் எழுதமுடியாது... அதற்கும் நமக்கும் மிகவும் தூரம்... இவ்வாறானதொரு தேர்வுகளை எழுதி நாம் அசிங்கப்படாமல் இருக்க இதனை எழுதாமலே விட்டுவிட்டால் என்ன..?? என மாணவர்களின் மனநிலை குழம்புகிறது என்பதை விட தன்னம்பிக்கை இழந்துவருகிறது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒரு தனி திறமைகளை தன்னுள் கொண்டு பிறக்கின்றன அதனை அவர்கள் வெளிக்காட்டும் பொழுது உலகிலேயே தலைசிறந்த மனிதர்களாக அவர்களை இந்த சமூகம் அடையாளம் காணுகின்றது. அவ்வாறாக தற்பொழுது அடையாளம் காணப்பட்டவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் நமது தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய டாக்டர்.அம்பேத்கர்.
இவர்கள் இருவரும் தனிதனி துறையில் தமது திறமையினால் சாதித்தவர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்ப துறையில் தனது திறமையினை வெளிக்காட்ட இந்த சமூகம் முறையான வழிக்காட்டுதலை ஏற்ப்படுத்தி கொடுக்கவில்லை. பலராலும் புறக்கணிக்கப்பட்டவர் இன்று மறைந்தபின் அடித்தத்து முதல் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா வரையில் பேசப்படுவோம் என எண்ணவில்லை. அன்று அவர் போட்ட முதலீடு வெறும் 700 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ஆனால் இன்று அவரது நிறுவனத்தின் சொத்துக்களின் மதிப்பு பல பில்லியன்களை தாண்டும்.
டாக்டர்.அம்பேத்கர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு சாதாரணமான மனிதர் ஆரம்பம் முதலே பகுத்தறிவு சிந்தனை கொண்டவர் இளம்வயது முதலே பல சமூக போராட்டங்களில் ஈடுப்பட்டார். அதில் திறம்பட செயல்ப்பட்ட இவர் தனது திறமை சமூகத்திற்காக என எண்ணியதன் வெளிப்பாடாக சட்ட படிப்பினை தேர்வு செய்து படித்தார் என்று சொல்லுவதை விட அதில் தனக்கேயுரிய தனி திறமையினை வெளிக்காட்டினார் என்றே சொல்லலாம். இன்று ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த மனிதர் நமது தேசத்தின் அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியுள்ளார் என்றால் அதன்பின் ஒருவரின் தனித்திறமை உள்ளது என்றால் அது மிகையாகாது.
இவர்கள் இருவரும் முற்றிலும் வேறுப்பட்டவர்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்நுட்ப துறையில் எந்த ஒரு பட்டமும் பெறவில்லை ஆனால் டாக்டர்.அம்பேத்கர் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். ஒருவர் படிக்காதவர் மற்றொருவர் தனக்கு பிடித்த படிப்பில் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் எதிர்மறையாக இருந்தாலும் திறமை என்று வரும்போது சிறந்த உதாரணம் என்றே பார்க்கின்றோம்.
அதைபோல் தான் உங்களது பிள்ளைகளும் இருக்கலாம் ஒருவர் படிப்பில் நாட்டமில்லாத தனி திறமையில் பலம் மிக்கவராகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் அதனை அவர் விரும்பி படித்தால் அதில் தனது தனி திறமையினை வெளிக்காட்ட முடியும் என எண்ணினால் அதற்கு நீங்கள் தடையாக இருக்க வேண்டாம் என்பதே மனநல ஆலோசகர்கள் தரும் யோசனை.
அரசு பொது தேர்விற்கு தற்பொழுதே தங்களது பிள்ளைகளை தயார் செய்ய வேண்டும் என நீங்கள் நினைப்பது 100% சரியே ஆனால் அதனை நீங்கள் எடுத்து சொல்லும் முறையில் உள்ளது உங்களது பிள்ளைகளின் எதிர்காலம். பிற குழந்தைகளுடன் எக்காரணம் கொண்டும் தங்களது குழந்தையினை ஒப்பிட்டு பேசாதீர்கள் அதன் மூலம் அவர்களது தனி திறமை வெளிவராமல் போகலாம்.
அதுமட்டுமல்ல இதன் மூலம் எதிர்காலத்தில் பெரும் பின்விளைவுகள் ஏற்ப்படும் அதனை உங்களால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது.
எனது பிள்ளை கலெக்டர், டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என நீங்கள் கனவு காணுகின்றீர்கள் ஆனால் அவர்களோ நான் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும், இராணுவத்தில் உயர் பொறுப்பில் திறம்பட செயலாற்ற வேண்டும், பொதுமக்களின் ஜீவாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் துறையில் பணியாற்ற வேண்டும் என வித்தியாசமான இலட்சியத்துடன் கனவு காணுகின்றனர். நீங்கள் காண்பது கனவு அதே அவர்கள் காண்பது இலட்சியப்பாதை கனவிற்கும் இலட்சியத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன கனவு கண்விழித்தால் கலைந்துவிடும் ஆனால் இலட்சியம் அவன் கண் மூடும்வரை வெறித்தனமாக துரத்தும்.
எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளிடம் அன்பாக பேசி அவர்களது இலட்சியத்தை அறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக செயல்படுங்கள். அப்பொழுது தான் உண்மையில் வெற்றி நமது வசமாகும்.
-Z.முகம்மது சாலிஹ்
---அதிரை எக்ஸ்பிரஸ் விளம்பரபகுதி தொடர்புக்கு : 95510 70008---


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது