நோன்புக் கஞ்சி தயாரிப்பது எப்படி?

புனித ரமலான் மாதம் வந்துவிட்டது. ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சி. நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள்: 
பச்சரிசி = 500 கிராம் 
பூண்டு = 1 முழு பூண்டு 
கடலைப்பருப்பு = 50 கிராம் 
வெந்தயம் = 2 தேக்கரண்டி 
இஞ்சி = இருவிரல் அளவு 
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி 
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன் 
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன் 
உப்பு = தேவையான அளவு 
பெரிய வெங்காயம் = 2 
கேரட் = பாதி தக்காளி = 2 
சமையல் எண்ணை = 50 மில்லி 
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது) 
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து 
எலுமிச்சம் பழம் = 1 தேங்காய்ப் பால் = 300 மில்லி 
மட்டன் எலும்பு/கறி = 100 கிராம் 
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை: 
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும். 
2) ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும். 
3) தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். 
4) புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 
6) எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். 

செய்முறை: 
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும். 
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும். 
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். 
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும். 
11) வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும். 
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும். 
14) கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும். 
15). கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும். 
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும். 
17) அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும். 
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார். 


Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது