Sunday, June 5, 2016

புனித மிக்க ரமலானே வருக...! புண்ணியங்கள் கோடி தருக...!




புண்ணியமாம் இப்புவி தன்னிலே
பிறந்திட்ட முஸ்லிமுக்கு புனித ரமலான் !

வருடத்தில் ஒரு மாதம் நோன்பு
வசந்தத்தை தரும் இஸ்லாத்தின் மாண்பு !

இரவை பகலாகவும், பகலை இரவாகவும்
இறைவனுக்காக இரவு முழுதும் விழித்திருந்து
வணங்குகின்ற ரமலான் !

அகிலத்தார்க்கு அருட்கொடையாய்
அல் குர் ஆனை அவனியிலே இறக்கிட்ட
புனித ரமலான் !

இரவு நேர பொழுதெல்லாம்
இபாதத் என்னும் ஒளியினாலே
இலங்க வைக்கும் புனித ரமலான் !

இறைவனின் இல்லத்தை
இனிமையான குர் ஆன் ஒலியால்
இலங்க வைக்கும் இனிய ரமலான் !

தராவிஹ் தொழுகையை தனதாக்கி கொண்ட
தனி சிறப்பு மிக்க ரமலான் !

தனக்கே தீங்கிழைக்கும் சைத்தானின் சேட்டைகளை
தவிடு பொடியாக்கி தவிர்த்து கொண்ட ரமலான் !

சஹர் நேரம் தன்னை சங்கையாக்கி வைக்கும்
சங்கை மிக்க ரமலான் !

இப்தாரின் நேரமதில் இறைவனிடம் கையேந்தி
இரட்டிப்பு நன்மைகளை தந்திடும் ரமலான் !

வறியவரும், வலியவரும் வித்தியாசம் பாராமல்
வளமான வாழ்க்கைக்கு பலம் சேர்க்கும் ரமலான் !

பதினோரு மாதங்களில் செய்திட்ட பாவங்களை
பாவ மன்னிப்பால் கரைத்திட்ட ரமலான் !

ஆயிரம் மாதங்களை விடவும் பெரிய மகத்தான லைலத்துல் கதர் இரவை
அருளாக வழங்கிட்ட புனித ரமலான் !

ஜகாத் என்னும் ஈகையினை
ஜெகமெங்கும் விதித்திட்ட
சமத்துவம் மிக்க புனித ரமலான் !

ரமலானே உன் வருகை வசந்தத்தின் வருகை
தூய உள்ளத்தால் துதிக்கின்ற உள்ளம் பெற்றிடும் வெற்றி வாகை !

வருக வருக ரமலானே ... உன்னை
போற்றி புகழ் பெறுவோமே ...!

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது