நேற்றிரவு!


நேற்றிரவு எனக்கு வழக்கமான இரவாக நகரும் என நினைத்துகொண்டு நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தேன். திடீர் என எனது தொலைபேசி அபாய ஒலி எழுப்புகிறது. மறுமுனையில் எனது நண்பர் கலிஃபா உடனே நீ பேராசிரியர் கபீர் சார் அவர்களை தொடர்புகொள் என்கிறான். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அவனின் வார்த்தையில் ஏதோ விபரீத செயல் நடந்துள்ளது மட்டும் தெரிகிறது.

மறுவினாடியே அவசர அவசரமாக பேராசிரியர் கபீர் சார் அவர்களை நான் தொடர்புகொண்டேன் ஃபோனை எடுத்தவர் துக்கம் நிறைந்த மனதுடன் அந்த செய்தியை என்னிடம் சொன்னார். ஆம், ஏர்வாடி அருகே கீழக்கரையை சேர்ந்த அந்த நான்கு இளம் இரத்தங்கள் சாலை விபத்தில் உயிரிழந்த செய்திதான் அது.

பேராசிரியர் எதற்காக உங்களை தொடர்புகொண்டு இந்த செய்தியை சொல்ல வேண்டும் என தாங்கள் நினைக்கலாம். தற்பொழுது இணைய எழுத்துறையில் நான் இருப்பதால் பேராசியர் கபீர் சார் அவர்கள் என்னிடம் இதுதொடர்பாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றை தயார் செய்து அதனை உடனே இணையத்தில் பகிர சொன்னார். நானும் அவ்வாறே செய்தேன். ஏனெனில் பேராசிரியர் பல்வேறு சமயங்களின் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் நேரத்தில் களத்தில் நின்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்துள்ளார்.

நாங்கள் எத்தனை முறை எழுத்துகள் மூலம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாலும் பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் "என் பிள்ளை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவன் நீங்கள் சொல்லுவது போன்றெல்லாம் செய்யமாட்டான்" என்று சொல்லி அவர்கள் மனதுக்கு ஆறுதல் மட்டுமே செய்துகொள்கின்றனர்.

அதே பெற்றோர்கள் சாலையில் நடந்து செல்லும் சமயத்தில் பிறர் வீட்டு பிள்ளைகள் பைக்கில் மின்னல் வேகத்தில் பரப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் தனது பிள்ளையும் இதுபோலவே பிறர் சாலையில் செல்லும் சமயத்தில் வேகதடைகளை உடைத்துகொண்டு சீறிபாய்வான் என்பதை அவர்களின் மனம் பாசத்தால் ஏற்கமறுக்கிறது.

நான் பல்வேறு கோர விபத்துகளை நேரில் பார்த்துள்ளேன் அதில் பெருவாரியாக சிக்கி உயிரிழந்திருப்பது இளம் வயதினர். இன்றைய கால சூழலில் பெற்றோர்கள் வாங்கி கொடுத்த வாகனத்தை இயக்கும் குழந்தைகள் சிலர் தூண்டும் ஆர்வத்தின் காரணமாக பைக் ரேஸ் போன்ற செயல்களில் ஈடுப்படுகின்றனர் அதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படை கல்வியை கற்க மறந்துவிடுவதால். விளைவு செய்திதாள்களில் "கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து! இருவர் பழி!" என்ற தலைப்பு செய்தி.

இனியும் நாம் நம் பிள்ளைகளை கண்மூடித்தனமாக நம்பி ஒரு வாழ்க்கையின் தத்துவமும் அறியா உயிர்களை இழக்க போகிறமா? நான் சொல்வது எல்லாம் தயவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு உரிய வயது வரும்வரையிலாவது மோட்டார் வாகனங்கள் வாங்கி கொடுக்காமல் இருங்கள். அதுவரை அவர்களுக்கு சாலை விதிகள் குறித்த அடிப்படை கல்வியுடன் சேர்த்து வாழ்வியல் தத்துவத்தையும் கற்றுகொடுங்கள்.

-ஜெ.முகம்மது சாலிஹ்

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது