அதிரையர்களின் இரத்தத்தை உறிஞ்சும் மின்வாரியம் !
தமிழ்நாட்டில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மின் கட்டணத்தை நிர்ணயிப்பதிலும், வசூலிப்பதிலும் நடைமுறை எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் அதிரை மினாவ்ரியத்தின்  தவறான அணுகுமுறையால் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாக வேண்டியிருக்கிறது.

அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்களால் கணக்கெடுப்பது வழக்கம், ஆனால் அதிரை நகரின் ஒரு சில பகுதிகளில் இந்த மின் கணக்கெடுப்பு சரிவர நடப்பதில்லை இதனால் பயனாளர்கள் தோராயமாக தங்களது மின் கட்டணத்தை நிர்ணயித்து கட்டணத்தை செலுத்தி வந்துள்ளனர்..
இந்நிலையில் திடீரென வரும் மின்வாரிய ஆய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதில் இருபத்தைந்து ஆயிரம், முப்பதாயிரம் கட்டவேண்டும் என கூறுகின்றனர். இதனால் நுகர்வோர் பாதிப்புக்கு உள்ளாவதுடன் மிகுந்த மன உளைச்சல்லுக்கும் ஆளாகின்றனர்.

இதுகுறித்து பலமுறை அதிரை மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் பலன் இல்லை என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர். இது தொடர்பாக நாம் மின்வாரிய அதிகாரியை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொன்டதில், போதிய பணியாட்கள் நியமனம் இல்லாததே இதற்க்கு காரணம் என்கிறார்.

அதுமட்டுமின்றி, மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் நடக்கும் குழப்பங்களாலும் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் உதாரணமாக தற்போது இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் ரூ.1,330 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆனால், 501 யூனிட் பயன்படுத்தும் போது, மானியம் முழுமையாக ரத்து செய்யப்படுவதால், ரூ.2137 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. 

ஒரு யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்துவதற்காக ரூ.807 அதிகமாக செலுத்த வேண்டும் என்பது மிகப்பெரிய அநீதி ஆகும். தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் மின்சாரப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. போதாக்குறைக்கு தமிழக அரசின் சார்பில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. கடந்த ஆட்சியில் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்கப் பட்டன. இதனால், பெரும்பான்மையான வீடுகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுகளுக்கும் அதிக மின்சாரம் செலவாவது சாதாரண ஒன்றாகிவிட்டது. 

அவ்வாறு இருக்கும் போது 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவர்களுக்கு மானியத்தை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. .

இதேபோல் உதாரணமாக ஒரு மாதத்தின் 10& ஆம் தேதி மின்கட்டணம் கணக்கிடப்பட்டால், அதன்பிறகு வரும் மாதங்களிலும் அதே தேதியில் தான் மின்சாரப் பயன்பாடு கணக்கிடப்பட வேண்டும். ஆனால், பல மாதங்களில் ஒரு வாரம் வரை தாமதமாகத் தான் மின் பயன்பாடு கணக்கிடப்படுகிறது.

சரியான தேதியில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டால் பல வீடுகளில் 450 முதல் 490 யூனிட் வரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், தாமதமாக கணக்கீடு செய்யப்படும் போது தாமதிக்கப்பட்ட நாட்களுக்கான பயன்பாட்டையும் சேர்த்தால் 500 யூனிட்டுகளை தாண்டியிருக்கும். மின்வாரியத்தின் தவறுக்காக நுகர்வோரை அதிகக்கட்டணம் செலுத்தச் சொல்வது பெரும் குற்றமாகும்.

மேலும், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும்போது, குறிப்பிட்ட அந்த மாதத்தில் நுகர்வோருக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் தான் மின்கட்டணத்தை மாதம் தோறும் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தும்படி அதிரை பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது