தோல்வியின் வடிகால் தற்கொலையா? ஓர் சிறப்பு கட்டுரை !!அண்மைகாலமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடெங்கிலும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும்  8068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் தற்கொலைப் பட்டியலில் மகாராஷ்டிராவை அடுத்து தமிழகமே முதன்மை வகிக்கிறது.  மகாராஷ்டிரத்தில் 1,191 மாணவர்களும் தமிழகத்தில் 853 மாணவர்களும் கடந்தாண்டு பல்வேறு காரணங்களால் தற்கொலை முடிவை நாடியிருக்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். நடுநிலைப்பள்ளி மாணவர்களும் தற்கொலை பட்டியலில் உண்டு, தம் பிள்ளை, போதிய மதிப்பெண் பெறவில்லை என்ற ஆதங்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும் தந்தையர்களும் கூட பட்டியலில் இருக்கிறார்கள்.
 
கல்வியின் அடிப்படையே நம்பிக்கையை விதைப்பதுதான். சிக்கலான சூழல்களை கையாளவும், அவநம்பிக்கைகளை தகர்த்து உள்ளத்துக்குள் வெளிச்சம் பாய்ச்சவுமே கல்வி. ஆனால், நம் கல்வி முறையும், கல்வித்திட்டமும் மாணவர்களை எந்திரங்களாக்கி, பெரும் மன உளைச்சலுக்குள் தள்ளுகின்றன. 

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை என்று மீண்டும் மீண்டும் போதித்து, பிற வாழ்வியல் அறங்களில் இருந்து மாணவர்களை விலக்கி வைக்கின்றன. பாடப்புத்தகங்களை கரைத்து மாணவனின் மூளைக்குள் ஊற்றும் இந்தக் கல்வி முறை மாணவர்களை திகைக்க வைக்கிறது.

ஒருகாலத்தில் 10ம் வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் வெளிவரும் காலத்தில், தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கும். ஆனால் இன்று 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் கூட, எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை ஊடகங்களின் வாயிலாக காண நேருகிறது . 

எது கல்வி, எது வாழ்க்கை, எது வளர்ச்சி என்று தெரியாத குழப்பமும், சிறு தோல்விகளைக்கூட தாங்கவியலாத மனநிலையும் கொண்ட மாணவர்களைத்தான் நம் கல்வித்திட்டம் உருவாக்கி வருகிறது..என்கிறார்கள் கல்வியாளர்கள்.  2015ல் தற்கொலை செய்துகொண்ட 853 பேரில் 247 பேர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். 

பெரிய நகரங்களில் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 29 மட்டுமே. மீதமுள்ள மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 

தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் வாழ்க்கையே போய்விடும் என்ற அர்த்தமற்ற எச்சரிக்கை சிறுவயதில் இருந்தே மாணவர்களின் மனதில் விதைக்கப்படுகிறது. இதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், ‘இனி வாழ்ந்து எதை சாதிக்கப் போகிறோம்என்ற விரக்தியில் தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
 
இன்னொருபுறம் மாணவர்களின் மன அழுத்தம் அவர்களை மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தமிழகப் பாடத்திட்டம் மனப்பாடத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது. 

சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக இல்லை. மனப்பாடக் கல்வி முறையால் பள்ளியிலும், பள்ளி முடிந்த பின் வீட்டிலும் எந்த நேரத்திலும் புரியாத, பிடிக்காத பாடத்தை படிக்க வேண்டியிருக்கிறது. 

அந்த அழுத்தத்திற்கு பெற்றோரிடம் வடிகால் தேட மாணவர்கள் முயலும்போது, அதை பெற்றோர் புரிந்துகொள்வதில்லை. இதனால் நம்பிக்கை இழக்கும் மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்...என்று வருந்துகிறார் மனோதத்துவ மருத்துவர் ஒருவர் .

ஆசிரியர்கள், பெற்றோர், சமூகம் அனைவரும் சேர்ந்து ஒரு கை கோர்ப்பதன் மூலமாகவே மாணவர்  தற்கொலையைத் தடுக்க முடியும்...என்கிறார் மனிதவள மேம்பாட்டு நிபுணர் சுமதி நாராயணன்.

கல்வி என்பது வாழும் திறனை கற்றுத் தருவதாக இல்லை. மாறாக மதிப்பெண்களை மட்டுமே முன்னிறுத்துகிறது. நல்ல மார்க் எடுப்பவன் நல்ல மாணவன். குறைவாக மதிப்பெண் எடுத்தாலோ, ஃபெயில் ஆனாலோ நீ உருப்பட மாட்டாய்.என்று திட்டி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு திறமையோடுதான் பிறக்கிறார்கள். அவரவருக்கு எதில் திறன் இருக்கிறதோ அதை நோக்கி அவர்களை நகர்த்த வேண்டும். மாறாக ஒரு வழிப்பாதையிலேயே மாணவர்களை செலுத்துவது மோசமான விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்...என்கிறார் சுமதி.  மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. சாதிக்க இங்கே ஏராளமான களங்கள் இருக்கின்றன. 

மாணவர்களே..! யாராலும் முடியாதது உங்களால் முடியும். உங்களால் முடியாதது யாராலும் முடியாது! நம்பிக்கையோடு இலக்கு நோக்கி நடைபோடுங்கள்!
 அதிரை எக்ஸ்பிரஸ்க்காக 
லெனின். மனோதத்துவ நிபுணர்
சென்னை..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (5778)
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது