மாநில அளவிலான சிறந்த நெசவாளர்களுக்கான விருது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கைத்தறி தொழிலானது, நீண்ட கால பாரம்பரியமிக்க தொழிலாகவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கும் தொழிலாகவும் விளங்குகிறது. கைத்தறித் தொழிலில் சுமார் 3.50 இலட்சம் கைத்தறி நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சிக்காகவும் மற்றும்
நல்வாழ்வுக்காகவும் அரசு பல்வேறு வளர்ச்சி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு, கைத்தறி தொழிலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படும் நெசவாளர்களைப் போற்றிக் கௌரவிக்கும் நோக்கத்தோடு, கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சென்னை தியாகராய நகரில் உள்ள சர். பிட்டி. தியாகராயர் கலையரங்கத்தில் 08.05.2017 அன்று மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு
உறுதுணையாக செயல்படும் உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக அதிக உற்பத்தியும் விற்பனையும் மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பினை வழங்கி வரும் மாநில அளவில் சிறந்த நெசவாளருக்கு ரூ.1,00,000/- வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் 2014 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டில் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சார்ந்த கே.ஆர்.ஸ்ரீனிவாசன் என்பவருக்கு மாநில அளவிலான சிறந்த நெசவாளருக்கான விருது ரூ.1,00,000/- ரொக்கமும், நற்சான்றிதழும், பொன்னாடையும் வழங்கி இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது.
கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும் அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையை மேம்படுத்தவும் தமிழ்நாட்டிலுள்ள சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சம் மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2015-2016-ஆம் ஆண்டில் ரூ.36.42 கோடி மதிப்பிற்கு கைத்தறி துணிகளை ஏற்றுமதி செய்த M/s.பிரேம் டெக்ஸ்டைல்ஸ் இண்டர்நேஷனல், கரூர் என்ற நிறுவனத்திற்கு முதல் பரிசும், ரூ.19.80 கோடி மதிப்பிற்கு கைத்தறி துணிகளை ஏற்றுமதி செய்த M/s கிரீன்லேண்ட் எக்ஸ்போர்ட் லிட்., சென்னை என்ற நிறுவனத்திற்கு இரண்டாம் பரிசும், ரூ.16.24 கோடி மதிப்பிற்கு கைத்தறி துணிகளை ஏற்றுமதி செய்த M/s அல்ரஜினா எக்ஸ்போர்ட், சென்னை என்ற நிறுவனத்திற்கு மூன்றாம் பரிசும், தலைமை கூட்டுறவு சங்கமான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு கோஆப்டெக்ஸ் இண்டர்நேஷனல் மூலம் ரூ.60.91 இலட்சத்திற்கு கைத்தறி துணிகளை ஏற்றுமதி செய்தமைக்கான விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறந்த வடிவமைப்புடன் கூடிய கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் திறன்மிகு நெசவாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் 1993-ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் 20 இரகங்களுக்கு தனித்தனியே சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு இரகங்கள் வாரியாக முதல் பரிசாக ரூ.5,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2015-2016-ஆம் ஆண்டிற்கு 60 திறன்மிகு நெசவாளர்களுக்கு ரூ.2.00 இலட்சமும், 2016-2017- ஆம் ஆண்டிற்கு 57 திறன்மிகு நெசவாளர்களுக்கு ரூ.1.90 இலட்சமும் ஆக மொத்தம் ரூ.3.90 இலட்சம் அளவிற்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள்
வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நெசவாளர்களின் குழந்தைகளை மேற்படிப்பு பயில ஊக்குவிப்பதற்காக, அவர்களின் மேற்படிப்பிற்காக டாக்டர் எம்.ஜி.ஆர் நல்வாழ்வு அறக்கட்டளை மூலம் 1986-ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதல் மதிப்பெண் பெறும் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியருக்கு 33 பாடப்பிரிவுகளில் அவர்கள் படிப்பை முடிக்கும் காலம் வரை ரூ.4,000/- முதல் ரூ.7,500/- வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் 2015-2016-ஆம் ஆண்டிற்கு பல்வேறு படிப்புகளுக்கு 92 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.4.23 இலட்சம் வழங்கப்பட்டது. மேலும், கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் வாரிசுகளான 34 மாணாக்கர்களுக்கு 2015-16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூ.1.91 இலட்சம் வழங்கப்பட்டுள்ளதுடன், 2016-17 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு நூற்பாலைகளின் சிறந்த தொழிலாளர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் 5 தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000/-வீதம் மொத்தம் ரூ.1,25,000/-மும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது