கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RTE) விண்ணப்பிப்பதற்க்கான கால அளவை நீட்டிக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!


பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி ஓர் அடிப்படை உரிமை என்று வகை செய்யும் 135 நாடுகளில் இந்தியாவையும் இனைத்தது 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RTE).

இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21Aன் கீழ் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி முக்கியத்துவத்தை  விவரிக்கும் இச்சட்டம் ஏப்ரல் 2010 முதல் தேதி அமலுக்கு வந்தது.  முதல் முறையாக இந்தியாவில் வாய்மொழி மூலமாக இச்சட்டத்தை அமல்படுத்திய அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன்சிங், “நாம் அனைத்து குழந்தைகளுக்கும்,பாலினம் மற்றும் சமூக வகை, வேறுபாடின்றி கல்வி அளிக்க வேண்டும். ஒரு கல்வி அவர்களை பொறுப்பான மற்றும் நல்ல குடிமக்கள் ஆக தேவையான திறமைகள், அறிவு, மதிப்பு மற்றும் மனப்போக்கு பெறுவதற்கு உதவ வேண்டும்” என்று இதன் நோக்கத்தை முன்வைத்தார்.

இதனடிப்படையில் தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள்,சமூகத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர்க்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு கட்டணத்தை அரசே செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு,எல்.கே.ஜி உள்பட கீழ் நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது; எட்டாம் வகுப்புவரை எந்தகுழந்தைகளையும் ஃபெயில் ஆக்கக்கூடாது; மாணவர்களை அடிக்கக்கூடாது; மனரீதியாக துன்புறுத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. ஆனால் இச்சட்டம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுதோறும் இதனடிப்படையில் பள்ளியில் சேரும் மாணாக்கரின் எண்ணிக்கை 100% இலக்கைவிட குறைவாகவே உள்ளது.

அதிகபட்சமாக 2014-15 கல்வியாண்டில் இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடப்பு 2017-2018 கல்வியாண்டில் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதலில் 100% இலக்கினை எய்திடப் பள்ளிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பள்ளிகல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எனினும் 09.05.2017 அன்றைய தமிழக அரசின் அறிக்கைப்படி வெறும் 20000 குழந்தைகள் மட்டுமே இச்சட்டத்தினடிப்படையில் பள்ளிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். மேலும் அரசின் ஆணைப்படி எதிர்வரும் மே 18 இனையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மக்களிடம் இச்சட்டம் முழுமையாக சேராத நிலையில் விண்ணப்பிப்பதற்க்கான கால அளவை மே மாதம் இறுதி வரை நீட்டித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பணிகளை துரிதப்படுத்த  உத்திரவிட வேண்டும் எனவும்,இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி மாவட்டங்களில் பல பகுதிகளில் சேவை மையங்களை துவங்கி இத்திட்டத்தின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற தமிழக அரசு உத்தரவிடவேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது.

 இப்படிக்கு

S.அஹமது நவவி,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது