மின் கட்டணம் செலுத்த மொபைல் ஆப்!

மின்சார கட்டணத்தை தங்களுடைய மொபைல் மூலம் செலுத்துவதற்கான வசதியை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின் நுகர்வோராக பயனடைந்து வருகின்றனர். மின் கட்டணத்தை எளிதாக செலுத்த வசதியாக தபால் நிலையம், வங்கிகள், ஆன் லைன் மூலம் என பல வசதிகளை மின்சார வாரியம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நடைமுறைப்படுத்தியிருந்த நிலையில், 24 மணி நேரமும் மின்கட்டணம் செலுத்தும் வகையில் கைப்பேசி செயலி ஒன்றை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.
மின் கட்டணம் செலுவதற்கான இந்த செயலியை மொபைல் போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் TANGEDCO app என டைப் செய்து டவுன் லோடு செய்து கொள்ள வேண்டும். இச்செயலியை பயன்படுத்தும் முன் மின்சார வாரிய இணையதளத்தில் பயனீட்டாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் பின் இச்செயலில் பயனீட்டாளரின் பெயர் மற்றும் கடவு சொல்லை பயன்படுத்தி மின் கட்டணத்தை செலுத்த முடியும். இந்த செயலி மூலம் செலுத்த வேண்டிய மின்கட்டண விவரங்கள், பதிவு செய்யாத மின் பயனீட்டாளர்களின் கட்டண்ங்களை செலுத்தும் வசதி, மின்சாரம் உபயோகித்தது பற்றிய கணக்கீடு, பரிவர்த்தனை விவரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்
டான்செட்கோ குறித்த பல செயலிகள் இருந்தாலும், இந்த செயலியில் மட்டும் தான் பயனீட்டாளர்களின் விவரங்கள் வரும். அதை வைத்து சரியான செயலி தான் என்பதை கண்டுபிடித்து கொள்ளலாம். இதன் மூலம் 2.7 கோடி மின் நுகர்வோர் பயனடைவர் என்று மின்பகிர்மான கழக தலைவர் சாய்குமார் தெரிவித்தார்.
மின்கட்டணம் செலுத்துவதை எளிமைப்படுத்தும் வகையிலும், மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையிலும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடியும் முன்னதாக விரைந்து செயல்பட்டு மின் கட்டணம் செலுத்தும் செயலியை அறிமுகப்படுத்தியிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி பெருமிதம் தெரிவித்தார்.இந்த மொபைல் செயலியை பயன்படுத்துவதன் மூலம் மின்சார கட்டணம் கட்டுவதற்காக அதற்கான மையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது