தஞ்சை மாவட்டத்தில் டெங்கு நோயைத் தடுக்க நடவடிக்கை: ஆட்சியர்தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ஆ. அண்ணாதுரை.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட தொற்றுநோய் தடுப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால், நகர் மற்றும் கிராமப்புறங்களில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் கொசுப் புழுக்களின் உற்பத்தி அதிகரிக்கக்கூடும்.  கொசுப் புழுக்களை உற்பத்தி செய்யாத வகையில் தொடக்க நிலையிலேயே சுகாதாரத் துறையினர் போதிய பணியாளர்கள் மூலம் அழிக்க வேண்டும். 50 வீடுகளுக்கு ஒரு சுகாதாரப் பணியாளர் நேரடியாகக் கள ஆய்வு செய்ய வேண்டும்.


டெங்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராமம் ஆகிய பகுதிகளில் ஓட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.  கால்வாய்களில் குப்பைகள் கொட்டாமல் பாதுகாக்க வேண்டும்.  பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப், தேங்காய் ஓடு, டயர், ஆட்டு உரல், வீடுகளில் குளிர்சாதன பெட்டி ஆகியவற்றில் நீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொசு மருந்து அடித்து கொசுக்களை அழிக்க வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவத் துறையின் மூலம் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும்.

மாவட்டத்தில்  உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த குடிநீர் வழங்க வேண்டும்.  மாநகராட்சி பகுதியில் நகர சுகாதார அலுவலர்  எலிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி. மந்திராசலம், துணை இயக்குநர்  (சுகாதாரப் பணிகள்) ஏ. சுப்பிரமணி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ். கோபிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது