தாய்ப்பாலின் மகத்துவம்: பிரிட்டனில் 11 வயது மாணவிகளுக்கு சிறப்புப் பாடம்

பிரிட்டன் நாட்டில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டியதன் கட்டாயத்தை முறைப்படுத்தும் வகையில் 11 வயது சிறுமியர்களுக்கு சிறப்பு பாடம் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பிரிட்டன் நாட்டில் மகப்பேறுக்கு பின்னர் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பிரசவத்துக்கு சில மாதங்களுக்கு பிறகு தங்களது சிசுவுக்கு பால் பவுடர், மாட்டுப் பால் உள்ளிட்ட மாற்றுப் பாலை தேடுவோர் எண்ணிக்கையும் வெகுவாக பெருகி வருகிறது.

தாயின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்குப் போய் சேருகிறது. இதனால் சளி, இருமல், செவித்திறன் தொடர்பான நோய்கள் மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதை எதிர்த்துப் போராடவும், அறிவாற்றலை அதிகரிக்கவும், தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் தாய்ப்பாலில் உள்ள மூலசத்துகள் பெருந்துணையாக செயல்புரிகின்றன. 

இதை வலியுறுத்தி ‘தாய்ப்பாலே சிறந்தது’ (‘breast is best’) என பிரிட்டன் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஏராளமான பொருட்செலவில் பிரசார இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கு எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை.

தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் போய் சேர்ந்தால் நாட்டின் சுகாதார திட்டத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதியில் சுமார் 4 கோடி பவுண்டுகள் அளவுக்கு மிச்சப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது. ஆறு மாதங்கள் வரையாவது பிறந்த குழந்தைகளுக்கு கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்னும் சுகாதாரத்துறையின் அறிவுரையை இங்குள்ள தாய்மார்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அன்றாடம் சுமார் 500 கேலரிவரை சக்தி எரிக்கப்படுவதால் தங்களது உடல் பருமன் ஆவதையும் தடுக்கலாம்

சமீபத்தில் சுமார் ஆயிரம் தாய்மார்களிடம் நடத்திய ஆய்வில் மார்பழகு பாழாகிப் போவதாக பலரும், தங்களது தூக்கத்தை கெடுக்கும் இம்சையாக சிலரும் கருதுவதால், ஆறு வாரங்களில் தாய்ப்பாலை நிறுத்திவிடும் நவநாகரிக நங்கையர் கூட்டம் அதிகரித்துகொண்டே வருகிறது. இவர்களில் 42 சதவீதம் பேர் தங்களுக்கு தாய்ப்பால் சுரப்பு வற்றிப்போனதாகவும், 34 சதவீதம் பேர் தங்களது உடலில் சத்தற்றுப் போனதாகவும் கருதி தாய்ப்பாலுக்கு ‘டாட்டா’ காட்டி விட்டதாக தெரிகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் ஓராண்டு ஆன பின்னரும் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் எண்ணிக்கை பிரேசில் நாட்டில் 56 சதவீதமாகவும், ஜெர்மனியில் 23 சதவீதமாகவும், பிரிட்டனில் 0.5 சதவீமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 11 வயதில் இருந்தே உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு தாய்ப்பாலின் அவசியத்தையும், மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சிறப்பு பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவத்துக்கான பிரிட்டன் நாட்டின் ’தி ராயல் காலேஜ் ஆப் பிடியாட்ரிக்ஸ் அன்ட் சைல்ட் ஹெல்த்’ வலியுறுத்தியுள்ளது. 

பொது இடங்களில் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு கூச்சமாக இருப்பதாக பல பெண்கள் கூறுவதால் இந்த அடிப்படை சித்தாந்தத்தை தகர்த்தெறியும் வகையில் பாலினக் கல்வி (செக்ஸ் எஜுகேஷன்) தொடர்பான பாடத்திட்டத்தில் தாய்ப்பால் அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் தனிப்பாடம் இருக்க வேண்டும் என இந்த பரிந்துரை குறிப்பிடுகிறது.

பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கென மறைவான பகுதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை காப்பகங்களில் ஒப்படைத்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பணிநேரத்தின் இடைவெளிகளில் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிவிட்டு வருவதற்கு சம்பள பிடித்தம் இல்லாத அனுமதி அளிக்கப்பட வேண்டும். மேலும், தாய்ப்பாலை புட்டிகளில் நிரப்பி யார் மூலமாகவாவது கொடுத்து அனுப்பலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Share:

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது